சுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி!

Wednesday October 17, 2018

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலைக் குழந்தைகளின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 14.10.2018 Parc des sports et de loisirs du grand godet மைதானத்தில் நடைபெற்றது. 

12.00 மணிக்கு பொதுச்சுடரினை சுவாசிலே றூவா பிறங்கோ தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் திரு. பிறேம் அவர்கள் ஏற்றி வைக்க பிரான்சு நாட்டின் தேசியக்கொடியினை அம்மாநகர முதல்வர் மதிப்புக்குரிய முதல்வர் DIDIER Guillaume அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழ தேசியக் கொடியினை சுவாசிலே றுவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் உப தலைவர் திரு. கா. ரூபன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து மாவீரர் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினையும் மலர் வணக்கத்தையும் அப்பிரதேசத்தில் வாழும் மூத்த தாயாரான புனிதவதி அம்மா அவர்கள் ஏற்றி வைத்திருந்தார். தொடாந்து சுவாசிலே றூவா தமிழச்சங்கக் கொடியினை சங்கத்தின் தலைவர் திரு.அலோசியஸ் கஜினஸ் அவர்களும் ஏற்றிவைக்க இல்லங்களுக்கான கொடியை மில்லர் இல்ல கொடியினை செல்வி சயந்தினி அவர்களும், திலீபன் இல்ல கொடியினை நிருசுதன் அவர்கள் ஏற்றி வைத்திருந்தனர்.

தொடர்ந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. ஒலிம்பிக் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் மெய்வல்லுநர் போட்டியின் உதவி முகாமையாளர் திரு. பீலிக்ஸ் அவர்கள் ஏற்றி வீரர்களிடம் கையளிக்க வீரர்கள் சுடருடன் மைதானத்தை சுற்றி வந்து பொதுச்தீபச்சுடரில் ஒளியை சங்கமிக்கச் செய்தனர். உறுதிப்பிரமாணத்தை வீரர்களும், நடுவர்கள் சார்பாக செல்வன். சஞ்சய் அவர்களும் செய்திருந்தனர்
தொடர்ந்து மாநகர முதல்வரின் சிற்றுரை இடம் பெற்றது. 

தமிழ் மக்களின் மொழி, கல்வி கலைகள் பற்றி தான் அறிந்திருப்பதாகவும் அதே நேரத்தில் அவர்களுடைய அரசியல் பிரச்சனைகளை தான் அறிவதாகவும் அதற்காக கடந்த மாதம் பிரான்சு நாட்டின் சனாபதிக்கு எழுத்து மூலம் ஓர் அறிக்கை அனுப்பியிருந்ததையும் கூறியிருந்தார்

. அவருக்கு தமிழ் மக்கள் சார்பாக இந்த இடத்திலே நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்கமைய கடந்த செப்ரெம்பர் மாதம் ஜெனீவா நோக்கிய ஈருளிப் பயணத்தில் தொடக்க நாள் அன்று இவரிடம் நாம் சந்திக்கச் சென்ற வேளை ஈருளிப்பயண வீரர்களை அன்புடன் வரவேற்று அவர்களால் ஓர் அடையாளச் சின்னமாக கொடுக்கப்பட்ட எமது தேசியகொடியை ( மேசையில் கொடியை) வாங்கி தனது மேசையில் இன்று வரை வைத்து மதிப்பளித்தவர் என்பதை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் தெரிவித்தபோது, முதல்வர் அவர்கள் அது எனது கடமையும் விருப்பமும் என்று கூறி வைபவரீதியாக போட்டி உதவி முகாமையாளரிடம் இருந்து விசிலினைப் பெற்று ஊதி போட்டிகளை தொடக்கி வைத்திருந்தார். 

அணிவகுப்புக்கள் மில்லர் இல்ல வீரர்களும், திலீபன் இல்ல வீரர்களும் செய்திருந்தார்கள். அணிவகுப்பு மரியாதையை மாநகர முதல்வர், உதவி முதல்வர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர், தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு செயலாளர் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் தேர்வுப் பொறுப்பாளர் திரு. அகிலன் அவர்கள் சிறப்புரையை ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் புலம்பெயர்ந்து வாழும் எமது நாளைய தலைமுறை தாய் மொழியில் வாழ்விட மொழியிலும் சிறந்து வளர்ந்து வருகின்றபோதும், அவர்களின் உடல், உள ஆரோக்கியமான விளையாட்டுக்களிலும் இன்று தலைசிறந்த வீரர்களாக வளர்ந்து வருகின்றார்கள் என்றும் அதில் சுவாசி லூவா தமிழ்ச்சங்க குழந்தைகளும் இனி அடங்க வேண்டும் என்றும், இன்னும் தலைசிறந்தவர்களாக வளரவேண்டும் என்றும் கூறியதுடன் முதற்தடவையாக இந்த மெய்வல்லுநர் போட்டிகளை செய்ததோடு மட்டுமல்லாது எமது இனத்தின் இழந்து போன உரிமையை மீட்டெடுப்பதற்காக அகிம்சை, ஆயுதம் என்னும் இரண்டு துருவங்களாக நின்று தம் இன்னுயிரை ஈந்த உன்னத மாவீரர்களை மதிப்பளிக்கும் வகையில் அவர்கள் பெயரில் போட்டியை நடாத்திய சங்கத்தினர்களுக்கும் அதற்கு ஆதரவு நல்கிய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தார். அனைத்துக் கொடியிறக்கலுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தாரக மந்திரத்துடன் மெய்வல்லுனர் போட்டி இனிதே நிறைவு பெற்றன.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)