சுவிஸில் உதயமாகும் புதிய நினைவுச்சின்னம்

புதன் பெப்ரவரி 17, 2016

உலகையே தன் நகைச்சுவையால் கட்டிப்போட்ட சார்லி சாப்ளினின் வரலாறு மற்றும் அவருடைய நாடகங்களை விளக்கும் வகையில் சுவிஸில் அவர் வசித்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியதுடன், தனது கருத்துமிக்க நகைச்சுவையால் ஹிட்லரையே மிரட்டிய சார்லி சாப்ளின் பிரித்தானியாவின் தலைநகரானமான லண்டனுக்கு அருகில் பிறந்தார்.

புகழின் உச்சியில் இருந்தபோது, சார்லி சாப்ளின் பொதுவுடைமை கொள்கைகளுக்கு துணைப்போவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா அவரை 1950 காலங்களில் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இதனால் மனமுடைந்த சார்லி சாப்ளின் தனது மனைவி ஊனா மற்றும் 8 குழந்தைகளுடன் சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Corsier-sur-Vevey என்ற கிராமத்தில் குடியேறினார்.

சார்லி சாப்ளின் இறுதியில் சுமார் 25 வருடங்கள் இந்த வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.

பின்னர், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததும் இதே கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லறையில் தனது மனைவியின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட்டார்.

சார்லி சாப்ளின் வாழ்ந்த இந்த வீட்டை அரங்காட்சியகமாக மாற்ற கடந்த 15 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், சில இடையூறுகள் காரணமாக இந்த பணி தள்ளிப்போனது.

இந்நிலையில், தற்போது இந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு உள்ளதாகவும், இதில் சார்லி சாப்ளினின் வரலாறு, அரிய புகைப்படங்கள், நாடகங்களை விவரிக்கும் தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 16ம் திகதி சார்லி சாப்ளினி 127-வது பிறந்த நாள் அன்று இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.