செந்தூரனின் மறைவு தியாக உணர்வின் உயர்ந்த வெளிப்பாடு

வியாழன் டிசம்பர் 03, 2015

அரசதலைவர் மாறினார் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழலாம் என நினைத்தார்கள் ஆனால் இன்னும் இல்லை ஆண்டகை யோசப் பொன்னையா

இந்த ஆண்டு தொடக்கத்தில் (2015) புதிய அரசு ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டது, அத்தோடு புதிய தலைவரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்,  மக்களும் நிம்மதியான, சந்தோசமான வாழ்வினை வாழலாம் என மகிழ்ந்தார்கள் ஆனால் மழை பெய்தும் தூவானம் விடாத நிலைதான் தமிழர்களை பொறுத்தவரையும் தொடர்கிறது என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை குறிப்பிட்டார்.

நேற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் கிருஸ்த்து பிறப்பினை நினைவு கூறும் ஒளி விழா நிகழ்வு கல்லூரி முதல்வர் அருட்தந்தை பிறையினர் செலர் தலைமையில் கிளனி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி யோசப் பொன்னையா, முன்னால் முதல்வர் எஸ்.ஏ.ஐ.மத்தியு கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர்கள், இணைப்பாளர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கல்லூரியின் பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை..

இந்த நாட்டை பொறுத்த வரைக்கும் மனிதநேயம் என்பது மறைந்து மறைந்து வருகிறது அதனொரு கட்டமே இந்த வருட தொடக்கத்தில் அரசு மாறியது, அரச தலைவர் மாறினார், அதனால் தமிழ் மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழலாம் என நினைத்து மகிழ்ந்தார்கள் ஆனால் அவ்வாரான நிகழ்வுகள் எதுவும் இதுவரையிலும் நடைபெறவில்லை.
மாறாக இந்த நாட்டை பொறுத்தவரையில் மக்களுக்கான உண்மையான, முழுமையான சுதந்திரம், மகிழ்ச்சி என்பன இல்லை என்றே கூறலாம் காரணம் மனிதனே மனிதனை மனிதனாக மதித்து வாழ முடியாத நிலையே இங்கு காணப்படுகின்றது.

அதனொரு கட்டமாகத்தான் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கவேண்டி இருக்கின்றது 20, 30 வருடங்களாக உலக நிலைப்பாடுகள் எதுவும் தெரியாதவர்களாகவும், தமது மனைவி குழந்தைகளை சந்திக்கக்கூட வாய்ப்பில்லாத நிலையிலும், உண்பதற்கு உகந்த உணவு கிடைக்காத நிலையிலும் இன்றும் தமிழ் இளைஞர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள் இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று உலகமே சொல்லுகின்றது ஆனால் அவர்கள் இதுவரையும் முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.

தங்களது எந்த நிலையினையும் அறியாமல் சிறையிலே வாடுகின்றவர்கள், தங்களது சொந்த இடங்களில் வாழ முடியாது தவிக்கின்றவர்கள், பல நாடுகளில் சிதறுண்டு கிடக்கின்றவர்கள் அனைவருக்கும் நல்ல விடிவு காலம் கிடைக்க இந்த நாட்டின் அரச தலைவர்கள் அவர்கள் தொடர்பாக நல்ல தீர்க்கமான முடிவுகளை எடுத்து அவர்களையும் இந்த உலகிலே அவர்களது உறவுகளுடன் வாழ வழிவகைகளை செய்து கொடுக்க முன்வரவேண்டும்.

கடந்தவாரம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி யாழ்ப்பாணம் கோப்பாய் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையேயான தொடரூந்து சேவையில் ஈடுபட்டிருந்த தொடருந்தில் பாய்ந்து தனது உயிரையே மாய்த்த சம்பவமானது அனைவரது இதயங்களையும் தொட்டுச்சென்றுள்ளது.

அவன் எதற்காக தன்னைத்தானே மாய்த்துக்கொண்டான் என்று ஆராயும் பொழுது அவனது பாடசாலை பையிலிருந்து கிடைத்த கடிதத்தின் மூலம் அவன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டியே தனது உயிரை மாய்த்தான் என்பது நிரூபனமாகியிருக்கின்றது. அவன் தனது கடிதத்தில் சிறையில் வாடும் எமது இளைஞர்களின் விடுதலை வேண்டியே எனது உயிரை விடுகின்றேன் என்று கூறியிருப்பதன் மூலம் அவனது தியாகத்தின் உணர்வு எந்தளவிற்கு மேலோங்கி காணப்படுகின்றது என்பது புலனாகின்றது. இங்குதான் அன்பு, இரக்கம், சகோதரத்துவத்தினை காண்கின்றோம் அவன் மனித நேயம் படைத்தவனாக வாழ்ந்திருக்கின்றான்.

இன்று கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களே மநிதநேயம் அதிகமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பதனை அறியமுடிகின்றது கல்லூரியானது மாணவர்களை பரீட்சைக்கு தயார் செய்வதனை போன்று அவர்களது தேவை கருதி அவர்களுக்கான விழுமியங்களையும் (அன்பு, கருணை,தியாகம்,மன்னிப்பு) கற்றுக்கொடுக்கும் இடமாக கல்லூரிகள் திகழவேண்டும் அப்போதுதான் அவன் உலகிற்கு உகந்தவனாக வெளிவருவான்.

இந்த நாட்டிலே வாழ்கின்ற அனைவரும் சாதி, மத, பேதங்கள் என்ற வேறுபாடின்றி இந்நாட்டு மக்கள் என்ற எண்ணப்பாங்குடன் வாழ வேண்டும் என்பதனை சொல்லிக்கொடுக்கவேண்டும் அதனையே இந்தக்கல்லூரி தொடர்ந்து செய்து வருகின்றது மாணவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் வரைக்கும் எந்விதமான பாகுபாடுகள் இன்றியும் அனைவரும் ஒற்றுமையாக  தங்களது பணியினை செய்வதனையும் அவதானிக்கமுடிகின்றது எனவும் கூறினார்.