சென்னையில் ஓவியர் புகழேந்தியின் 'சே குவேரா' ஓவியக் காட்சி!

சனி செப்டம்பர் 05, 2015

சென்னையில், ஓவியர் புகழேந்தியின் புரட்சியாளர் சே குவேராவின் ஓவியங்களைக் கொண்ட “புரட்சியின் நிறம்” தலைப்பிலான ஓவியக்காட்சி, செப்டம்பர் 8 முதல் 13 வரையில் நடைபெறுகின்றது.

சென்னை தியாகராயர் நகர் செ.தெ. நாயகம் மேனிலைப்பள்ளியில், செப்டம்பர் 8 அன்று தொடங்கி, செப்டம்பர் 13 வரை, 6 நாட்கள் நடைபெறும் இவ் ஓவியக் காட்சியில், புரட்சியாளர் சே குவேராவின் பல்வேறு கோண ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மக்களும், இவ் ஓவியங்களைக் காணும் வகையில், தொடக்க நாளான செப்டம்பர் 8 அன்று, மாலை 5 மணி முதலும், அடுத்தடுத்து நாட்களில் நாள்தோறும், காலை 10 மணி முதல், மாலை 8 மணி வரையிலும், ஓவியங்களைப் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ் ஓவியக் காட்சியின் தொடக்க நாள் நிகழ்விலும், நிறைவு நாள் நிகழ்வில், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், கலைத்துறையினர் பங்கேற்கவுள்ளனர்.

ஓவியர் கு. புகழேந்தி, 32 ஆண்டுகளாக சமூகப் பார்வையோடு ஓவியப்பணி ஆற்றி வருபவர். தன்னுடைய ஓவியப்பணிக்காக, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் அழைக்கப்பட்டு, பாராட்டப்பட்டவர். தமிழீழம், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஓவியக் காட்சிகளை நடத்தி, சமூக அக்கறையுடன் ஓவியங்களைக் காட்சிப்படுத்தி வருபவர் ஆவார். தற்போது, சென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.