சென்னையில் வரலாற்று சிறப்புமிக்க பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு

வியாழன் ஜூன் 14, 2018

ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமைமையமும் ஒன்றிணைந்து முன்னெடுத்த வரலாற்று சிறப்புமிக்க பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தலைமையில்9 யூன் சனிக்கிழமை சென்னையில் மிகவும்சிறப்பாக இடம்பெற்றது.

மாநாட்டின் முதன்மை நிகழ்வாக தமிழ் மக்களின் உரிமைக்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அக வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்திற்காக இலங்கை பேரினவாத அரசால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சட்டமேதை மாமனிதர் குமார் பொன்னம்பலம் மற்றும் மாமனிதர் வழக்கறிஞர் ரவிராஐ ஆகியோருக்கு நீதிபதிகள் மற்றும் பேச்சாளர்கள் அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

வரவேற்புரையை சமத்துவ வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் பார்வேந்தன் நிகழ்த்தினார். மாநாட்டில் ஒய்வுபெற்ற சென்னைஉயர் நீதிமன்றநீதிபதிகள்; மாண்புமிகு நீதிபதி அரிபரந்தாமன் மாண்புமிகு நீதிபதி சிவசுப்பிரமணியம் மாண்புமிகு நீதிபதி ராஜன். நீதிபதி இராசமாணிக்கம் மாண்புமிகு நீதிபதி அக்பர் அலி ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மனிதஉரிமைசெயற்பாட்டாளர் சண்மாஸ்டர் தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் வெங்கட்ராமன் மற்றும் அருணபாரதி தோழர் தியாகு இளம்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில்உள்ளிட்டோர் கலந்துசிறப்பித்தனர்.

மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான தொல்.திருமாவளவன், இலங்கையிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுகாஸ், மலேசியா நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் மகாராமகிருஸ்ணன், பிரித்தானியா நாட்டிலிருந்து வழக்கறிஞர் பரமலிங்கம், கர்நாடகா மாநிலத்திலிருந்து மூத்தவழக்கறிஞர் ஐயராஐ, 

டெல்லி உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் காலின் கொன்ஸால்வேஸ், மக்கள் சிவிலுருமைக் கழகம் அமைப்பின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சுரேஸ், டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பாரிவேந்தன், தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஐன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கசெயலாளர் கிருஸ்ணகுமார், பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணிசெயலாளர் வழக்கறிஞர் பாலு, தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர் சங்கதலைவர் வழக்கறிஞர் பானுமதி, மக்கள் அரசுகட்சி தலைவர் வழக்கறிஞர் ரஐனிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர். 

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களே தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறுவதற்கு பிரதான காரணம் என்ற தலைப்பிலே அவுஸ்ரேலியா நாட்டிலிருந்து மனித உரிமைசெயற்பாட்டாளர் ரெபேக்கா அவர்களும் தாயகத்திலே தீவிரம் அடைந்துவரும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் முல்லைத்தீவு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மனித உரிமை ஆர்வலர் சந்திரலீலாவும் காணாமல்போனோர் குடும்பங்களின் தற்போதைய நிலை தொடர்பில் மனித உரிமை ஆர்வலர் தேவராசாஅவர்களும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மத்தியில் சாட்சியாளர்களாக பங்கேற்று தாயகத்தின் நிலமைகளை விரிவாகவும் ஆதாரத்துடனும் எடுத்துரைத்தார்கள். இறுதியுத்தம் முடிந்த பின்னர் தேவராசா அவர்கள் தனது மகனை இராணுவத்திடம் கையளித்த தனது அனுபவத்தை கண்ணீர்மல்க எடுத்துக் கூறினார்.

மாநாட்டிற்கு சனல்-4 ஊடகவியலாளர் கலம் மக்ரேமற்றும் பிரித்தானியா மனிதஉரிமை செயற்பாட்டாளர் ஐனனி ஆகியோர் வழங்கிய உரைகள் காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டன. நிகழ்வின்  இறுதியாக கலந்து சிறப்பித்த சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்பு பேச்சாளர்கள் அனைவருக்கும் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமைமையத்தின் சார்பில் விசேட நினைவு சின்னம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

இறுதியாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் இயக்கங்களின் வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தபோது அனைவரும் எழுந்து நின்று கரகோசம் எழுப்பினார்கள். இதனால் அரங்கமே அதிர்ந்தது. சிறப்பு நிகழ்வாக தமிழீழ புரட்சிப்பாடகர் தேனிசை செல்லப்பா குழுவினரின் கச்சேரி இடம்பெற்றது.

மாநாட்டின் தீர்மானங்கள்

தீர்மானம் 01
ஈழத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும்.

தீர்மானம் 02
தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கை மீது பன்னாட்டு நீதி; விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அரசியல் தீர்வுக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் 2013 ஆம் ஆண்டு தமிழக சட்டன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு பன்னாட்டு அரங்கில் இலங்கை அரசு மீது பன்னாட்டு நீதி விசாரணை நடத்தவலியுறுத்த வேண்டும்.

தீர்மானம் 03
இலங்கையில் காணாமலாக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் குறித்து இலங்கை அரசு காலம் தாழ்த்தி நீதியை நீர்த்துப்போகச் செய்யமேற்கொள்ளும் உள்ளகப் பொறிமுறைகளை தவிர்த்து உடனடியாக பன்னாட்டு நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தீர்மானம் 04
ஐ.நாவின் போர் விதி முறைகளில் நம்பிக்கை வைத்து ஐ.நாமன்றத்தின் அனுமதியுடன் வெள்ளைக் கொடியேந்தி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் பொதுமக்கள் கொல்லப்பட்டமை மற்றும் காணாமலாக்கப்பட்டமை குறித்துப் பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தீர்மானம் 05
தமிழர்கள் கடத்தப்படுவதும் காணாமலாக்கப்படுவதும் தாக்குதல்களிற்கு உள்ளாவதும் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதும் சித்திரவதைகளிற்கு உள்ளாக்கப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தீர்மானம் 06
இலங்கை அரசால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளின் பாதுகாப்பை சர்வதேச சமூகம் உறுதிசெய்ய வேண்டும்.

தீர்மானம் 07
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட போராளிகள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் சாவடைவதில் உள்ள சந்தேகம் தொடர்பிலான பன்னாட்டு விசாரணை வேண்டும்

தீர்மானம் 08
ஈழத் தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட்டு உடனடியாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தீர்மானம் 09
தமிழர்களின் பூர்வீகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் உடனடியாக இணைக்கப்பட்டு ஈழத் தமிழர்களின் தேசக்கட்டமைப்பு பேணப்பட வேண்டும்.

தீர்மானம் 10
ஈழத்திலே தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைக்கும் சதியுடன் இலங்கை அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தீர்மானம் 11
நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

தீர்மானம் 12
தமிழர் தாயகத்திலே சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் உள்நோக்குடன் இலங்கை அரசினால் நிறுவப்படும் பௌத்தவிகாரைகள் மற்றும் பௌத்த மேலாதிக்க அடையாளங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்

தீர்மானம் 13
தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களைஅழிக்கும் நோக்குடன் சிங்களதேசம் திட்டமிட்டுமேற்கொள்ளும் அனைத்துச்செயற்பாடுகளும் நிறுத்தப்படவேண்டும்.

தீர்மானம் 14
மக்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கலாசார அடையாளங்கள் மீது அதிகாரபலத்துடன் சிங்கள ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

தீர்மானம் 15
இலங்கை அரசபடைகளால் திட்டமிட்டு காணாமலாக்கப்பட்டுள்ள தமது உறவுகள் குறித்து நீண்டகாலமாக வீதிகளில் இறங்கி 475 நாட்களையும் கடந்து போராடும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு பன்னாட்டு விசாரணை மூலம் மட்டுமே தீர்வுகாணப்பட வேண்டும்

தீர்மானம் 16
இந்தியாவில் நீண்ட காலமாக தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் ஏதிலிகளுக்கான பன்னாட்டு சட்டங்களிற்கு அமைவாக இந்திய மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு இந்தியாவில் வாழும் ஏனைய நாட்டுஏதிலிகள் போல் அங்கீகரிக்கப்படவேண்டும்.

தீர்மானம் 17
இலங்கைக்கு வெளியே புலம்பெயர் தேசங்களில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழ் ஏதிலிகள் ஈழத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை சர்வதேச நாடுகள் கைவிடவேண்டும்.

தீர்மானம் 18
தமிழ் இனப்படுகொலை தொடர்பில் ஆதாரங்களை வைத்துள்ளவர்களும் உயிர் சாட்சியங்களாக இலங்கை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் வாழ்கின்றவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

தீர்மானம் 19
இறுதிப்போரில் மிகப்பெரிய இன அழிப்பை சந்தித்ததோடு இன்று வரை கட்டமைப்பு ரீதியான திட்டமிட்ட இன அழிப்புக்கு உள்ளாகிவரும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற அரசியல் தீர்வுகாணவேண்டுமாயின் ஈழத்தமிழர்களிடையே பொதுவிருப்பு வாக்கெடுப்பு நடத்தி தமிழ் மக்களின் அரசியல் விருப்பம் அங்கீகரிக்கப்படவேண்டும்