சென்னை வாக்குசாவடிகளின் எண்ணிக்கை குறைகிறது!

திங்கள் ஜூலை 02, 2018

சென்னை மாநகராட்சியில் 20 வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வரைவு வாக்கு சாவடிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நகர்ப்புறங்களில் 1,400 வாக்குகளுக்கு அதிகமாக உள்ள ஓட்டு சாவடிகளை பிரித்து சீரமைக்கும் பணியை தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் இந்த பணி நடைபெற்று வந்தது. சென்னை மாநகராட்சி பகுதியில் 3,768 வாக்குச் சாவடிகள் இருந்தன. இதில் ஒருசில வாக்குச்சாவடிகளில் 300, 500 என மிக குறைந்த அளவான வாக்காளர்கள் இருந்தனர். இதனால் இவற்றை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதே போல 1,400-க்கும் அதிகமாக வாக்காளர்கள் இருந்த வாக்குசாவடியையும் பிரித்தனர். அதில் அதிகமாக இருந்த வாக்காளர்கள் குறைவாக உள்ள வாக்குச் சாவடியுடன் இணைக்கப்பட்டன.

அதன்படி சென்னை மாநகராட்சி பகுதியில் 3,768 ஆக இருந்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 3,748 ஆக குறைந்து உள்ளது. 20 வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வரைவு வாக்கு சாவடிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

மாநகராட்சி துணை கமி‌ஷனர் உமாமகேஸ்வரி இதனை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதுபற்றி அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தங்களது கருத்துக்களை அதிகாரிகளுக்கு வருகிற 9-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 10-ந்திகதி முதல் 17-ந்திகதி வரை பெறப்பட்ட மனுக்கள் மறு பரிசீலனை செய்யப்படும்.

பின்னர் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறுதியாக முடிவு செய்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பார்கள். இதையடுத்து இறுதி வாக்கு சாவடி பட்டியல் வெளியிடப்படும்.