செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள்- புற்றுநோய் உண்டாகும்!

புதன் மார்ச் 14, 2018

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில்  விற்கப்படும் பழங்கள் சீக்கிரமாக பழுக்க வைக்க ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாம்பழம் போன்ற பழங்கள் ரசாயனங்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனத்தில் கேன்சரை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் உள்ளன. இதனை சாப்பிடுவர்களுக்கு கேன்சர் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வாழைப்பழங்களும் ரசாயனங்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகின்றன. நீண்டதூர பயண நேரத்தில் வாழைப்பழங்கள் பழுத்து அழுகிவிடும் என்பதால், விவசாயிகள் காய் வெட்டாக இருக்கும்போதே வாழைத் தார்களை வெட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

காயாக வரும் வாழைத்தார்கள் 2 அல்லது 3 நாட்கள் உரிய இடத்தில் இருப்பு வைத்து, இயற்கையாக பழுத்த பின்பு விற்பனை செய்யப்படும். ஆனால் சமீப காலமாக இருப்பு வைத்தால் உரிய நேரத்தில் பழங்களை வினியோகம் செய்ய முடிவதில்லை என்பதால், ‘ஈத்தலின்’ என்னும் ரசாயனத்தை வாழைத்தார்கள் மீது ஊற்றி விடுகின்றனர். ரசாயனம் தெளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அந்த வாழைத்தார்கள், மஞ்சள் நிறமாக மாறி பழுத்த பக்குவத்துக்கு மாறிவிடுகின்றன. அதன்பிறகு மார்க்கெட்டில் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.

ரசாயனங்கள் பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்களை உட்கொள்வதால் புற்று நோய் ஏற்படும் என்ற செய்தி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.