சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது.

புதன் ஓகஸ்ட் 03, 2016

பத்து  ஆண்டுகளின் பின்னர்  சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது. நாடு முழுக்க ஒரே மாதிரி வரி விதிப்பை இந்த மசோதா உறுதி செய்யும். மசோதா நிறைவேறி, சட்டம் அமலுக்கு வந்தால், சில பொருட்களின் விலை உயரவும், சில பொருட்களின் விலை குறையவும் வாய்ப்பு உண்டு. 

தற்போது ஒரு நிறுவனம் ஒரு பொருளை தயாரித்து விற்பனை செய்யும்போது, அதற்கு சேவை வரி, கலால் வரி, உள்ளூர் வரி, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு கொண்டு செல்வதற்கான நுழைவு வரி, மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய வாட்வரி என பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியதுள்ளது. 

ஒரு பொருளுக்கு இப்படி பல இடங்களில், பல விதமாக வரிகள் கட்டுவதால் அதற்கு அதிகப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டியதுள்ளது. எனவேதான், நாடெங்கும் ஒரே முறையிலான வரி விதிப்புக்கான "சரக்கு மற்றும் சேவை வரி" மசோதா தயாரிக்கப்பட்டது. 

நாடாளுமன்ற லோக்சபாவில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை பலம் இருப்பதால், அங்கு சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மிக எளிதாக நிறை வேற்றப்பட்டு விட்டது. ஆனால் ராஜ்யசபாவில் ஜிஎஸ்டியை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் முட்டுக் கட்டை போட்டு வந்தது. 

இதையடுத்து காங்கிரஸ் சொன்ன திருத்தங்களை பா.ஜ.க. செய்தது. இதனால் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புதிய வரிமுறை அமல்படுத்தப்பட்டால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
 சரக்கு மற்றும் சேவை வரியால் கிடைக்கப் போகும் மிகப்பெரிய நன்மையாக, நுகர் பொருட்களின் விலை கணிசமாக குறையும் என்ற நன்மை கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. 

வீட்டு உபயோக பொருட்களான குளிர்சாதன  பெட்டி , தொலைக்காட்சி, குளிரூட்டி போன்றவற்றின் விலை குறையும். அதேபோல சிறிய ரக கார்களின் விலையும் கணிசமாக குறையும். ஏனெனில், தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு வரிகளாக 30 சதவீதம் அளவுக்கு வரி செலுத்துகின்றன. 
இந்த  வரி விதிப்பு 18 சதவீதத்தை ஒட்டி இருக்கும் என தெரிகிறது. அது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஒருவேளை 18 சதவீதமாக இருக்கும்பட்சத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் சுமார் 12 சதவீத வரி லாபம் பெறும். 

அந்த பலன் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். அதேபோல, கட்டுமான பொருட்கள், பெயிண்ட் விலை குறையக்கூடும். அதேநேரம், செல்போன் விலை உயரக்கூடும் என்று தெரிகிறது. சிகரெட் விலை, மருந்து பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது. விமான டிக்கெட் விலை உயரக்கூடும்.