சேஷசமுத்திரத்தில் மீண்டும் தலித் வீடுகள் எரிப்பு

வியாழன் செப்டம்பர் 03, 2015

சேஷசமுத்திரத்தில் மீண்டும் தலித் வீடுகள் எரிப்பு  குற்றவாளிகளை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ்க்  கைது செய்யவேண்டும் தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

 

விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் தலித்துகளின் வீடுகளும், தேரும் காவல் துறையினரின் கண்ணெதிரிலேயே எரிக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சாதிவெறியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையே பெட்ரோல் குண்டு வீசிக் கொலை செய்ய முயற்சித்தார்கள். அப்படியிருந்தும் சாதிவெறியர்கள் மீது மென்மையான போக்கையே தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது. அங்கு தொடர்ந்து 144 தடை உத்தரவு இருந்தும், பாதுகாப்பிற்கு காவல்துறையினர் இருந்தும்கூட திங்கள் இரவு மீண்டும் தலித்துகளுக்குச் சொந்தமான வீடுகளை சாதிவெறியர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசி எரித்துள்ளனர். அதில் வீட்டிலிருந்த பணம் மற்றும் பொருட்கள் உட்பட பல இலட்ச ரூபாய் மதிப்பிலான உடைமைகள் சாம்பலாகியுள்ளன. 

 


சேஷசமுத்திரம் தாக்குதல்குறித்து ஊடகங்களில் கருத்துத் தெரிவித்ததற்காகவே இந்த இருவரது வீடுகளும் எரிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தலித்துகள் மீது நடத்தப்படும் சாதிவெறித் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக்கண்டிக்கிறோம்.  சேஷசமுத்திரத்தில் தலித்துகள் மீதான தாக்குதலுக்குக் காரணமான முதன்மைக் குற்றவாளி சுப்பிரமணி இதுவரை கைது செய்யப்படவில்லை. சாதிவெறிச் சக்திகள் தொடர்ந்து தாக்குதல் நடத்த அதுவே ஊக்கமாக அமைந்துள்ளது. 

 


சேஷசமுத்திரத்தில் மட்டுமல்ல, கோகுல்ராஜ் படுகொலையில் சம்மந்தப்பட்ட முதன்மைக் குற்றவாளியையும், தஞ்சை மாவட்டம், வடசேரியில் விடுதலைச் சிறுத்தைகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசத் திட்டமிட்டுள்ள முதன்மைக் குற்றவாளிகளையும் காவல்துறை இதுவரை கைதுசெய்யவில்லை. இக்குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறையினருக்கு எது தடையாக உள்ளது? யார் முட்டுக்கட்டையாக உள்ளனர்? என்று விளங்கவில்லை.  முதன்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், சாதிவெறியர்கள் அடுத்தடுத்து தலித்துகளுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடும் துணிச்சலைப் பெறுகின்றனர்.  

 


சேஷசமுத்திரத்தில் தற்போது பெட்ரோல் குண்டுகளை வீசி குடிசைகளைக் கொளுத்தியவர்கள், ‘இது எங்களின் சாம்ராஜ்யம்; முடிவல்ல ஆரம்பம்’ என்று துண்டுச் சீட்டையும் எழுதி அவ்விடத்தில் வீசியுள்ளனர். சாதிவெறியர்களின் இத்தகைய தாக்குதல்களை பயங்கரவாதக் குற்றமாக அரசு கருதவேண்டும். அதனடிப்படையில் பயங்கவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சாதிவெறியர்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம். சேஷசமுத்திரம் கிராமத்தில் வாழும் பல்வேறு தரப்பு மக்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி அங்கு சுமூகமான சூழல் திரும்பவும், மீண்டும் தலித் மக்கள் தேரோட்டம் நடத்தவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.