சைக்கிள் சின்னம் யாருக்கு?

Friday January 06, 2017

சமாஜவாதி கட்சியின் பெயர், சைக்கிள் சின்னம் ஆகியவற்றை கைப்பற்றுவதில் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், உத்தரப் பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினருமே கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்களின் ஆதரவைத் திரட்டி தங்கள் பலத்தை நிரூபிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

நீக்கமும், பதவிப் பறிப்பும்...: உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜவாதி கட்சியில் முலாயம் சிங் யாதவின் சகோதரர் சிவபால் சிங் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த மோதல், சில நாள்களுக்கு முன்பு வேட்பாளர் அறிவிப்பு மூலம் பெரிதாக வெடித்து கட்சியில் பிளவை ஏற்படுத்தியது.

அகிலேஷை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்த முலாயம் சிங் யாதவ், அடுத்த நாளே அதனைத் திரும்பப் பெற்றார். அதே நேரத்தில் போட்டிக் கூட்டம் நடத்தி கட்சியின் தேசியத் தலைவர் பதவியை முலாயம் சிங்கிடம் இருந்து பறித்த அகிலேஷ் அதனை தனது வசம் வைத்துக் கொண்டார்.

சின்னத்தை கைப்பற்ற போட்டி: இப்போது, சமாஜவாதி கட்சியில் முலாயம் சிங் யாதவ், சிவபால் சிங் யாதவ் ஆகியோர் தலைமையில் ஓர் அணியும், அகிலேஷ், அவரது மற்றொரு சித்தப்பா ராம் கோபால் யாதவ் ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது. இதையடுத்து, சமாஜவாதி கட்சியின் பெயரையும், சைக்கிள் சின்னத்தையும் கைப்பற்ற இரு தரப்பினரும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

இதற்காக கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்களின் ஆதரவு தங்கள் தரப்புக்குத்தான் உள்ளது என்பதை தேர்தல் ஆணையத்திடம் நிரூபிக்க இருதரப்பினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அகிலேஷ் அணிக்கு ஆதரவு அதிகரிப்பு?: சமாஜவாதி கட்சி எம்.பி.யான ஆஸம் கான், இருதரப்புக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இப்போதைய சூழ்நிலையில் சமாஜவாதி கட்சியின் 200 எம்எல்ஏ, எம்எல்சி-க்களின் (சட்ட மேலவை உறுப்பினர்கள்) ஆதரவு அகிலேஷ் தலைமையிலான அணிக்கு உள்ளதாகத் தெரிகிறது. எனவே, தங்கள் அணிக்குதான் சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று அகிலேஷ் ஆதரவு எம்.பி. நரேஷ் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூன்று மாதம் அதிகாரம்: இரு தரப்பினருமே லக்னெளவில் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களின் கூட்டத்தை நடத்தியுள்ளனர். அகிலேஷ் அணி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ரவிதாஸ் மல்ஹோத்ரா, கூறியதாவது: அடுத்த 3 மாதங்கள் மட்டும் கட்சியின் அதிகாரத்தை தன்னிடம் தருமாறு தனது தந்தையிடம் (முலாயம் சிங்) கேட்டதாக அகிலேஷ் யாதவ் கூறினார்.

மேலும், சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சியை வெற்றிபெற வைத்த பிறகு, தந்தையின் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை முழுமையாக ஏற்பேன் என்றும் அகிலேஷ் யாதவ் கூட்டத்தில் உருக்கமாகத் தெரிவித்தார் என்றார் அவர்.

அதே நேரத்தில் முலாயம் சிங் நடத்திய கூட்டத்தில் கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சி-க்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், எத்தனை பேர் இதில் கையெழுத்திட்டனர் என்பது உறுதியாகத் தெரியவரவில்லை.