சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது!

திங்கள் ஜூலை 30, 2018

எமது மாகாணசபை செயற்பாடுகள் மக்களை திருப்திப்படுத்தும் என நினைக்கவில்லை.

நாங்கள் சாதிக்கக்கூடியதை அல்லது செய்திருக்க வேண்டிய பலவற்றை செய்திருக்கவில்லை.

சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது ! எங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகள் பிரதேச ரீதியானது, கட்சி ரீதியானது, உட்கட்சி ரீதியானது.

அறிக்கைவிட்டு வீணாக நேரத்தை கழித்துள்ளோமே தவிர முழுமையான மாகாணசபை செயற்பாட்டில் நாம் ஈடுபடவில்லை. 

சில பிரேரணைகள் உணர்வுபூர்வமாக கொண்டுவரப்படும் நிலையில் அதனை நிராகரிக்கின்ற போது, அந்தப் பழி அரசியல் ரீதியாக என்மேல் சுமத்தப்படும் நிலை.

தமிழரசுக்கட்சி தன்னுடைய வேட்பாளர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட நிதி, 14 கோடியே 40 இலட்சம் ரூபா அது கூட அந்த மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.


சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. எங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகள் பிரதேச ரீதியானது, கட்சி ரீதியானது, உட்கட்சி ரீதியானது.  தமிழரசுக்கட்சி தன்னுடைய வேட்பாளர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் முன்நிறுத்துமென வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாணசபை இறுதிக்காலத்தில் பயணித்தக்கொண்டிருக்கும் நேரத்தில் அதன் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் நிகழ்கால செயற்பாடுகள் குறித்து வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்துடன்   நேர்காணல்,

நேர்காணல் வருமாறு,

கேள்வி : பல கட்சிகள் போட்டியிட்டு வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேசத்தின் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. அந்தவகையில் எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுகின்றன. இது தொடர்பில் உங்களது நிலைப்பாடு ?

பதில் : பல கட்சிகள் போட்டியிட்டு 38 பேரைத் தெரிவு செய்தமை ஒருபுறமிருக்க, தமிழத்தேசியக் கூட்டமைப்பில் உள்ளடங்ககும் 4 பிரதான கட்சிகளும் இணைந்து 30 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது உண்மை தான்.

ஆனால் ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது நாங்கள் சாதிக்கக் கூடியதை அல்லது செய்திருக்க வேண்டிய பலவற்றை செய்திருக்கவில்லையென்பதே என்னுடைய கருத்தும் மக்களுடைய கருத்துமாகவுள்ளதென நான் நினைக்கின்றேன்.

மாகாண சபை முறைமைபற்றிய கருத்து வேறுபட்டது. எமது செய்பாடு அல்லது வினைத்திறன் என்பது  அல்லது மக்களுடைய உணர்வுகளை அல்லது தேவைகளை மையமாக வைத்த எது மாகாணசபை செயற்பாடு மக்களை திருப்திப்படுத்Jம் என்று நான் நினைக்கவில்லை.

முக்கியமாக சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டதென நினைக்கின்றேன். எங்களுக்கிடையில் இருக்கும் பிரதேச வேறுபாடுகள் உதாரணத்திற்கு சட்டத்தில் 5 அமைச்சர்கள் தான் இருக்க முடியும் முதலமைச்சருடன் இணைந்து 4 அமைச்சர்கள் இருக்கலாம். வடமாகாணத்தில் 5 மாவட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டமும் தமக்கு அமைச்சுப் பதவிவேண்டுமென்று எப்ப ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து இந்த மாகாணசபையினுடைய செயற்பாட்டினுடைய குளறுபடி ஆரம்பித்தது.

பொதுவாக எமது உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. எங்களுக்குள் இருக்கும் முரண்பாடு பிரதேச ரீதியானது, கட்சி ரீதியானது, உட்கட்சி ரீதியானது இந்த பிரதேச வேறுபாடுகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன.

இதில் முதலாவது பிரச்சினை, இந்த பிரதேச ரீதியிலான அமைச்சர்கள் நியமனங்கள் முதலில் குளறுபடியாக அமைந்திருந்தன.  தொடர்ந்து அந்த முரண்பாடுகளின் வெளிப்பாடாக பல செயற்பாடுகள்  முன்னேற்றமடையக் கூடிய சூழ்நிலை உருவாகவில்லை. 

இரண்டாவது அரசியல் தலைமைத்துவத்தை எங்களுடைய மாகாண சபை நிறைவேற்று நிர்வாகம் வழங்கவில்லை. இந்த மாகாண சபையில் இருக்கக்கூடிய உத்தியோகத்தர்கள் ( 32 ஆயிரம் பேருக்கு சற்று கூடினவர்கள் ) இதில் 97 வீதமானவர்கள் தமிழர்கள் அவர்களுக்கு எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி எனது பார்வையில் அவர்களுக்கு தேசிய உணர்வு இருக்கின்றது. அவர்கள் ஊடாக நாங்கள் பலவிடயத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். என்னைப்பொறுத்தவரையில் அவர்களுடைய ஒத்துழைப்பு பாரியளவில் பெற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கும் எமது அரசியல் தலைமைத்துவம் சரியானதாக இருக்கவில்லை. 

நிர்வாகத்திறமையின்மை, ஒன்றிணைத்து செயற்பாடான முன்னேற்றம் இருக்கவில்லை. நாங்கள் எமது இலக்காக இருக்கக்கூடிய இடப்பெயர்வுடன் தொடர்புடைய மக்கள், வறுமைக்கோட்டுக்குள் இருப்பவர்கள் போன்றவை தொடர்பில் போதியளவு அக்கறை செலுத்தாமை. அதைவிடுத்து, எங்களுடைய மாகாண சபை எல்லைப்பரப்புக்கு வெளியான விடயங்களில் தேசிய ரீதியிலான விடங்களில் தேவையில்லாது கவனம் செலுத்தி  பேசி, அறிக்கைவிட்டு இந்த செயற்பாடுகளில் நேரத்தை கழித்துள்ளோமே தவிர முழுமையான மாகாண சபை செயற்பாட்டில் நாங்கள் ஈடுபடவில்லை.

கேள்வி : வடமாகாண சபை அமைச்சர்களிடையே குழப்பநிலை உருவாவதற்குரிய முக்கிய காரணமென்ன? 

பதில் : இலங்கையில் இருக்கக்கூடிய 9 மாகாணங்களில் ஒரு செயல்திறன் மிக்க தகைமை வாய்ந்த உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் கொண்ட ஒரு அமைச்சரவையாகத்தான் எங்களுடைய அமைச்சரவை இருந்தது.

ஆனால் அவர்களும் சரியான முறையில் தங்களுடைய செயற்பாடுகளை, தத்தம் துறைசார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வினைத்திறன் போதாமல் இருந்தது. இதைவிட அவர்களுக்கிடையில் ஒரு முரண்பாடான தோற்றப்படு வந்தது. எப்போது ஒரு அமைச்சருக்கு எதிராக சில குறைபாடுகள் செல்லப்பட்ட போது அதை முரண்பாடாக்கி அதைப்பற்றி விளக்கங்கள் செய்து முரண்பாடாக்கி பேசத்தொடங்கினார்களோ அன்றிலிருந்தே இந்த அமைச்சரவைக்குள்ளும் செயற்பாடு வினைத்திறனின்மை குறைய ஆரம்பித்தது. இப்பொழுது அதன் மட்டம் பூச்சியத்திலேயே உள்ளது.

கேள்வி : வட மாகாணசபையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. அந்தவகையில் எத்தனை பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எத்தனை பிரேரணைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன ?

பதில் : இன்று வரை 417 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உண்மையாக அவை பிரயோசனமற்ற பிரேரணைகள் என்று நான் சொல்லமாட்டேன். சில பிரேரணைகள் தேவைப்பட்டன. எமது உணர்வுகளை, அபிலாஷைகளை, அரசியல் தேவைகளை முன்னெடுப்பதாகவும் சில பிரேரணைகள் இருந்தது. 

ஆனால் பல பிரேரணைகள் எங்களுடைய மாகாண சபை எல்லைப்பரப்புக்கு வெளியான விடயங்களில் ஈடுபட்டவையாகவும் இருந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த பிரேரணைகளைப் பொறுத்தவரையில் 50-60 வீதமானவை பொறுத்தப்பாடானவையென்று சொல்ல முடியும். ஏனையவை தவிர்க்கக்கூடியவை அல்லது தவிர்த்திருக்கக்கூடியவை என்று சொல்லலாம். குறிப்பாக சில பிரேரணைகள் உணர்வுபூர்வமாக கொண்டுவரப்படும் போது அதனை நிராகரிக்கின்ற போது, அந்தப் பழியை அரசியல் ரீதியாக என்மேல் சுமத்துகின்ற நிலையும் இருந்தது.

அகவே அந்தவகை பிரேரணைகளை சபையில் விடவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே ஒட்டுமொத்தமாக 50-60 வீதமான பிரேரணைகள் பொருத்தப்பாடுடையவையாக இருந்தன. ஏனையவை அவ்வாறிருக்கவில்லை. பொருத்தப்படுடைய பிரேரணைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுத்தான் உள்ளன.

கேள்வி : எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன ?

பதில் : தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பேசுவதுண்டு. சில சமயங்களில் அவ்வாறாக பேசியவர்கள் தோற்றதும் உண்டு. ஆனபடியால் இவ்வாறு பேசப்படுவது ஒரு அர்த்தமான விடயாமானாலும் பேசப்படுவதும் உண்மை தான்.

ஒருவகையில் தற்போதைய முதலமைச்சருடைய பெயரும் பேசப்படுகின்றது. தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் தங்களுடைய கட்சி சார்ந்த அதாவது கூட்டமைப்பினுடைய பங்காளிக் கட்சிகளில் பிரதான கட்சி என்றவகையில் தமிழரசுக் கட்சியினுடைய ஒருவர் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட தன்மையுடைய ஒருவராக இருக்க வேண்டுமென்று ஒரு பொதுப்படைத்தனமையான தீர்மானத்தையும் இயற்றியுள்ளனர். ஏனைய பங்காளிக்கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.

கடந்த முறையும் மாவை சேனாதிராஜாவுடைய பெயர் பிரேரிக்கப்பட்டது. பின்னர் சூழ்நிலையால் அவர் அதனை விட்டுக்கொடுத்து நீதியரசர் விக்கினேஸ்வர் கொண்டு வரப்பட்டார்.

இப்போது தெளிவாகத் தெரிகிறது தமிழரசுக்கட்சி தன்னுடைய வேட்பாளர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தும் என்பது.

அது யாரென்பது தற்போது தெரியவில்லை கட்சி கூடித்தான் முடிவு எடுக்கப்படும். முதலமைச்சரும் தனித்தோ அல்லது வேறு நபர்களுடன் இணைந்து கூட்டமைப்பாகவோ தேர்தலில் நிற்கக்கூடும். இதிலும் தற்போது தழம்பல் நிலேயே காணப்படுகின்றது.

கேள்வி : வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள அமைச்சர்களின் குழப்பநிலை தொடர்பில் உங்களது நிலைப்பாடு ? அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் ?

பதில் : இதுவொரு வேண்டத்தகாத நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு அமைச்சருக்கு எதிராகத்தான் சபையில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டைக்கூட முதலமைச்சர் தானே பார்த்தவிட்டு தானே அந்த அமைச்சரை நீக்கியிருக்கலாம். முதலமைச்சர் அந்த அமைச்சரை நீக்குவதற்குப்பதிலாக அந்த அமைச்சர் சார்பில் பேசப்போய், அதற்குப்பின்னர் மற்றவர்கள் தொடர்பில் முறைப்பாடு உள்ளதாகத் தெரிவித்து விசாரணைக்குழுவை அமைத்து, அந்த விசாரணைக்குழுவை சபை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியான ஒரு விசாரணைக்குழுவென்றால் அது தெரிவுக்குழுவாக இருக்க வேண்டுமென்று சபை வாதாட, இறுதியாக முதலமைச்சர் தானே ஒரு குழுவை நியமித்து விசாரணை நடத்தி இருவரை நீக்க வேண்டுமென சிபாரிசு செய்து இருவரையும் வெளியேற வேண்டுமென்று தீர்மானித்து அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றது. 

உண்மையாக அந்த விடயத்தில் முதலமைச்சர் எவரை நீக்கவேண்டுமானலும் தற்துணிவாகத் தானே நீக்கமுடியும். எதற்கும் விசாரணை தேவையில்லை. முதலிரண்டு அமைச்சர்களையும் இராஜிநாமா செய்யுமாறு சொன்னதும் அவர்கள் இராஜிநாமா செய்து விட்டனர். ஏனையவர்களுக்கு எதிராக அந்த விசாரணைக்குழுவில் எதுவும் இல்லாத நிலையில் சபையில் பேசுவதற்கு ஐங்கரநேசனுக்கான வாய்ப்புக்கொடுக்கப்பட்டது. இதன்போது அவர் அதற்கான விளக்கத்தை சொன்னார். விளக்கத்தின் பின் நான் முதலமைச்சருக்கு தெரிவித்தேன், நீங்கள் இதன் முடிவை இப்போது தெரிவிக்கத்தேவையில்லை அவர்களுடைய விளக்கத்தையும் பரிசீலித்து 3 நாட்களின் பின்னால் ஒரு முடிவுக்குச் செல்லுங்கள் என்று நான் தெரிவித்தேன். ஆனால் முதலமைச்சர் அதை கருத்திலெடுக்காது தான் ஏற்கனவே முடிவுசெய்த அந்த தீர்மானத்தை வாசித்ததன் மூலம் முரண்பாடு தோன்றிவிட்டது.

அமைச்சர் டெனீஸ்வரனை நீக்குவதாக முதலமைச்சர் கடிதமொன்று எழுதியுள்ளார். சட்டபூர்வத் தன்மை தான் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. உண்மையாக அரசியலமைப்பின்படி இதற்கு பொதுவாக எல்லோரும் தவறான வியாக்கியானங்களை கொடுத்து வருகின்றனர். அரசியலமைப்பின் படி முதலமைச்சருக்கு அதிகாரமில்லை 13 ஆவது அரசியலமைப்பின்படி என்று பலர் தெரிவிக்கின்றனர். அவ்வாறு எதுவும் இல்லை. முதலமைச்சருக்குரிய அதிகாரங்கள் எவையென்று தெளிவாகவுள்ளது. ஆளுநருக்குரிய அதிகாரங்கள் எவையென்று தெளிவாகவுள்ளது. அதாவது ஆளுநருக்கு நியமன அதிகாரமும் முதலமைச்சருக்கு சிபாரிசு செய்யும் அதிகாரமும் இருக்கின்றது.

முதலமைச்சரின் சிபாரிசு இல்லாமல் ஆளுநர் ஒரு அமைச்சரை நீக்கவோ நியமிக்கவோ முடியாது. அதேபோன்று ஆளுநரும் தன்னிச்சையாக ஒரு அமைச்சரை நீக்கவோ நியமிக்கவோ முடியாது. இருவரும் இணைந்து செயற்பட வேண்டிய விடயம். நீதிமன்றத்தில் டெனீஸ்வரனால் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டத்தின்படியான ஒரு தீர்ப்பைத்தான் வழங்கியுள்ளது. டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கிய முறைமை தவரென்று தான் நீதிமன்றம் சொல்கின்றது. இந்த பிரச்சினையில் ஆளுநர் பக்கத்திலும் தவறுள்ளதாகவும் எனக்கு தோன்றுகின்றது. அவர் முறைப்படியாக டெனீஸ்வரன் நீக்கப்பட்டாரா என்பதை பரிசீலித்து ஏனையோருக்கு சத்தியப்பிரமாணம் செய்திருக்க வேண்டும். அவர் சொல்கிறார் முதலமைச்சரின் சிபாரிசின் அடிப்படையில் நான் சத்தியப்பிரமாணத்தை செய்துகொண்டேன் என்று ஆளுநரும் தெரிவிக்கின்றார். ஆகவே இது இரு பக்கங்களிலும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சினையாகத் தான் எனக்குத் தோன்றுகின்றது. ஆகவே இருவரும் இணைந்து தீர்மானிக்காவிட்டால் இந்த அமைச்சர் சபை முறைப்படியானது அல்ல. 

தன்னுடைய அமைச்சர் சபையை மீளமைப்புச் செய்வதற்கு ஏதுவாக அமைச்சர் சபையினுடைய இராஜிநாமாவை ஆளுநருக்கு சமர்ப்பிப்பதாகவும் அதனை ஏற்றுக்கொண்டு மீண்டும் ஒரு அமைச்சர் சபையை நியமிக்க ஆளுநர் முதலமைச்சரை அழைத்தல் வேண்டுமெனவும் அதற்கான அழைத்தலின் பேரில் புதிய அமைச்சர் சபை முதலமைச்சரால் சிபரிசு செய்யப்படுமென்றும் ஒரே கடிதத்தில் ஆலோசனையை நான் வழங்கியுள்ளேன். அந்த ஆலோசனையை சட்ட ரீதியாக பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் அமைச்சர் சபையினுடைய மாற்றம் தொடர்பில் இருக்கும் ஏற்பாட்டின் அடியொற்றியதாக எனது ஆலோசனையுள்ளது. அது செய்யப்பட்டால் பிரச்சினை தானாக தீரும். இந்தப் பிரச்சினை நீண்டகாலத்திற்கு செல்லமுடியாதென்பதை ஆளுநர் மற்றும் முதலமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இருவரும் ஒரு தீர்வுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.

கேள்வி  : கடந்தகால வடமாகாண சபை அமர்வுகளில் தனிப்பட்ட விடயங்கள் பெரும்பாலும் விவாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் அபிவிருத்தி விவாதிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. மாகாணசபை நிறைவடையவுள்ள காலப்பகுதிக்குள் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா ?

பதில் : தற்போதைய சூழ்நிலையில், அமைச்சரவை பிரச்சினை தான் பேசப்படும் போல் தெரிகின்றது. இனிமேல் புதிதாக எதாவது முன்னெடுக்கக்கூடிய அமைச்சரவையும் தற்போது இல்லை. இந்த அமைச்சரவை ஒப்புக்கான அமைச்சரவை தான். அதைச்சொல்வதால் குறையென்று சொல்லமுடியாது. அதுதான்நிலை, ஆகவே இவர்கள் சாதிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆளுநர் நிதியம் என்று எதுவும் இல்லை. அமைச்சுக்களிடத்தில் இருந்து எடுத்த நிதியை நானே முழுமையாக ஆராய்து அதனை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன்செய்யும் வகையில் வழங்கப்பட்ட நிதி, 14 கோடியே 40 இலட்சம் ரூபா அது கூட அந்த மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.

இதேபோன்ற திட்டங்களை செயற்படுத்துமாறு இறுதி தருணத்தில் வலியுறுத்துவோம். இவ்வாறானவை செயற்படுத்தப்படலாமென நம்புக்கின்றேன். இதற்கப்பால் இவர்கள் ஏதாவது திட்டம் வரைந்து செயற்படுத்துவார்கள் என்றால் சந்தர்ப்பமில்லை. 

கேள்வி : போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக சீர்கேட்டு செயல்கள் வடமாகாணத்தில் அதிகரித்துள்ளன. இதற்கான தீர்வு என்ன ?

பதில் : போதைவஸ்து பிரச்சினையென்பது ஒரு தேசிய பிரச்சினையாக எனக்கு படுகின்றது. போதைப்பொருள் மட்டுமல்ல தற்போது கொலைகள், கொள்ளைகள், வாள்வெட்டுக்கள், வீடு புகுந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் என பல சட்டத்திற்குப்புறம்பான சமூகத்தை அச்சுறுத்துகின்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டுமென்றால் இரு விடயங்கள் உள்ளன. 

போதைப்பொருள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டால் அதன் அடிவரை ஆராய்வதற்கு பொலிஸார் முயற்சிக்க வேண்டும். அதனை அவர்கள் செய்வதில்லை. அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால் அவர்கள் அதற்காக சட்டத்தரணிகளிடம் பணத்தை வழங்கி வெளியில் வருகின்றனர். பின்னர் அவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். 

இதற்கு காவல் துறையிடம் தான் முடிவு உள்ளது அவர்கள் கைதுசெய்யப்படுபவர்களை நீதிமன்றத்தின் அனுமதிபெற்று முழுமையாக விசாரணை செய்யவேண்டும். இதன் இறுதி எங்கு உள்ளதென்று தேடிப்பார்க்க வேண்டும். இதுவும் இறுதியில் போய் பாதாள உலகத்திற்குள் தான் போய்ச்சேரும்.காவல் துறையினரும் அங்கு தான் உள்ளனர். ஒன்றில் அவர்கள் சேர்ந்துள்ளனர் அல்லது பயமடைகின்றனர். இதற்கான தீர்வு பிரதி பாதுகாப்பு அமைச்சர் வருகின்றமையோ அல்லது வேறு அமைச்சர் வருகின்றமையோ அல்ல. காவல் துறையின் விடுமுறைகளை இரத்துச் செய்வதுமல்ல. முழுமையாக திட்டமிட்டு தொடர்புடையவர்களை கைதுசெய்யும் விதத்தில் இதனை கட்டுப்படுத்த வேண்டும். மாகாண சபையால் இதற்கு எதுவும் செய்யமுடியதென்பதேன எனது கருத்து. 

( நேர்காணல் - வீ. பிரியதர்சன் )