சோழன் பயணம் தொடர வேண்டும்!

திங்கள் நவம்பர் 26, 2018

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான `ஆயிரத்தின் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் மூலம் சோழனின் பயணத்தை தொர விரும்புவதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார்.

2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

ஆனால் செல்வராகவனிடம் டுவிட்டரில் அடிக்கடி வைக்கப்படும் கேள்வியாக இருப்பது என்னோவோ ‘புதுப்பேட்டை 2’, `ஆயிரத்தில் ஒருவன் 2' எப்போது வரும் என்பது தான். அவரும் நிச்சயம் வரும் என்று கூறி ரசிகர்களை ஆசுவாசப்படுத்துவார். இதற்கிடையே, தன்னுடைய ஆசை குறித்து தற்போது டுவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளார் செல்வராகவன்.

ஆயிரத்தில் ஒருவன் 2 எடுப்பது தான் அவரின் நீண்ட நாள் ஆசையாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ``வெளியே எங்குச் சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2‘ எப்போது என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயினும் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை `ஆயிரத்தில் ஒருவன் 2’ எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்“ எனக் கூறியுள்ளார்.