ஜெனீவாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

புதன் மார்ச் 14, 2018

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்   ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளிடம் வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளடங்கிய குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரிகளை நேற்று (13.03.2018) ஜெனீவாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போதே அவர்களிடம் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கையில், இலங்கை தெராடர்பில் வேறு வழிவகைகளை ஆராயவேண்டும் என அவர் குறிப்பிட்டிருப்பதை வரவேற்பதாகவும் அதிகாரிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்தது.

இக்கலந்துரையாடலின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மேலும் குறிப்பிட்டபோது,
“தமிழர் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து அதனை இலங்கை அரசாங்கம் அழித்தது. அதன்போதுமு மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை பொறுப்புடன் நடக்கவில்லை. இலங்கை விவகாரம் தொடமர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நியாயம் வழங்கும் வகையில் அமைந்திருக்கவில்லை. 

தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த காலத்தில் சிங்கள அரசிற்கு சார்பாகவோ அல்லது நடுநிலையாகவோ இருந்த முஸ்லீம் மக்கள் இன்று இலங்கை அரசினால் குறிவைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு தேசம் என்கின்ற நிலப்பரப்பு இருந்ததால் அவர்களை அழித்த இலங்கை அரசு தேசம் என்கின்ற நிலப்பரப்பு இல்லாத முஸ்லீம் மக்களின் பலமாக திகழ்கின்ற அவர்களது பொருளாதாரத்தை தற்போது சிதைத்துவருகின்றது. இதன் வெளிப்பாடே அண்மையில் கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள். 

இலங்கை அரசாங்கம் தன்னைத் தட்டிக்கேட்க ஆள் இல்லை. தான் எதுவும் செய்யலாம் என்ற தோரணையிலேயே செயற்பட்டுவருகின்றது. இது இலங்கை பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவித்ததால் ஏற்பட்டவிளைவே.

எனவோதான் ஐ.நா அனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பில் உரையாற்றும்போது இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளிடம் வலியுறுத்த வேண்டும் என கோருகின்றோம்” - எனத் தெரிவித்தனர்.