ஜெயலலிதா மரணம் -ஷீலா பாலகிருஷ்ணன் மீண்டும் ஆஜர்

Thursday January 11, 2018

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் தீபக், அரசு டாக்டர்கள், தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணன், தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் உள்பட பலர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

முன்னாள் தலைமை செயலாளராகவும் அரசு ஆலோசகராகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் ஷீலா பாலகிருஷ்ணனை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று காலை ஷீலா பாலகிருஷ்ணன் சேப்பாக்கத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

ஷீலா பாலகிருஷ்ணனிடம் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மேலும் சில தகவல்களை நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டது.