ஜெயா டி.வி. அலுவலகம்-சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை!

Thursday November 09, 2017

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. அ.தி.மு.க. பிளவுபட்டதையடுத்து, சசிகலாவின் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஜெயா டிவி தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

10 பேர் கொண்ட வருமான வரித்துறை குழு ஜெயா தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது. வருமான வரி சோதனை நடைபெற்று வருவதை ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈக்காட்டுதாங்கல், வேளச்சோரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், மன்னார்குடி மன்னை நகரில் உள்ள தினகரன் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானம் பற்றிய முறையான தகவல்கள் தெரிவிக்கப்படாததால் சோதனை நடத்தப்படுவதாகவும், வருமான வரி ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.