ஜெர்மனியில் ஏஞ்சலா மெர்கல் கூட்டணி ஆட்சி!

Sunday March 04, 2018

ஜெர்மனியில் ஏஞ்சலா மெர்கல் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைக்கும் முடிவுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஜெர்மனியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் சார்ந்த கிறிஸ்துவ சோஷலிச யூனியன் கட்சி 33 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்காததால் சோஷியல் குடியரசு கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதில் பல்வேறு முட்டுகட்டைகள் நிலவிவந்த நிலையில் ஜெர்மனியில் நிலையான நிரந்தர அரசு அமையாமல் காபந்து அரசு எனப்படும் இடைக்கால அரசு நடைபெற்று வந்தது. இந்த அரசின் காப்பாளராக ஏஞ்சலா மெர்கல் பொறுப்பு வகித்து வந்தார். இதனால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், ஏஞ்சலா மெர்கல் தலைமையிலான நிரந்தர அரசு அமைய சோஷியல் குடியரசு கட்சி உறுப்பினர்கள் இன்று வாக்களித்துள்ளனர். பெர்லின் நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இந்த கட்சியை சேர்ந்த 463,723 உறுப்பினர்களில் 66.02 சதவீதம் பேர் ஏஞ்சலா மெர்கல் தலைமையிலான கூட்டணி அரசு தொடருவதற்கு அனுமதி அளித்து வாக்களித்தனர்.

இதன் மூலம் ஐரோப்பிய கண்டத்தில் கடந்த 6 மாதங்களாக அரசியல் ஸ்திரத்தன்மை இன்றி முடங்கி கிடந்த ஜெர்மனியின் பொருளாதாரம் புதிய எழுச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், புதிய கூட்டணி அரசு அமைக்க தீர்மானித்துள்ள ஏஞ்சலா மெர்கல் மற்றும் சோஷியல் குடியரசு கட்சியின் இடைக்கால தலைவர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோருக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு ஐரோப்பா கண்டத்துக்கே மகிழ்ச்சியான செய்தி என்றும் குறிப்பிட்டுள்ள அவர் ஐரோப்பாவின் புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஜெர்மனியும் பிரான்சும் தொடர்ந்து பணியாற்றும் என கூறியுள்ளார்.