ஜெர்மனில் தொடருந்து விபத்து!

Wednesday December 06, 2017

ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு பகுதியில் இரண்டு  தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு பகுதியில் உள்ள மீர்பஸ்க் என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் 6:30 மணியளவில் 150க்கும் மேற்பட்டோருடன் ஒரு பயணிகள்  தொடருந்து சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் எதிர்பாராத விதமாக டிபி கார்கோ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு  தொடருந்துடன்  நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த காவல் துறை   மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 5 பேர் காயமடைந்துள்ளதாக மீர்பஸ்க் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலீஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்த ரெயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரெயில் விபத்து குறித்து ஜெர்மனி சான்செலர் ஏஞ்ஜெலா மெர்கலுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.