ஜேர்மனி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

செவ்வாய் மே 22, 2018

முள்ளிவாய்க்கால் மனம் எங்கும் நிறைந்து கிடக்கும் வலியின் உச்சத்தைத் தொட்ட பூமி. எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையால் சிங்கள வல்லாதிக்க அரசு பல லட்சம்  உறவுகளை அழித்தொழித்த வரலாறு நடந்த இடம். முள்ளிவாய்க்காலை நினைவேந்தும் நிகழ்வுகள் தாயக மற்றும் சர்வதேச அளவில் அனைவராலும் நேற்றைய நாள் செய்யப்பட்டது. அந்த வகையில் ஜேர்மனி நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான டுஷுல்டோவ் நகரில் 18.05.2018 ஆம் நாளான நேற்று பெருமளவான மக்களின் பேரணியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. 

முதலில் மாலை 14.00 மணியளவில் டுஷுல்டோவ் பிரதான தொடருந்து நிலைய முன்றலில் பல நகரங்களிலும் இருந்து வருகை தந்திருந்த மக்கள் அன்றைய நாள் ஆரம்ப நிகழ்வுகளைக்காக ஒன்றுகூடி இருந்தார்கள். ஜேர்மன் இளையோர் அமைப்பைச் சேர்ந்த இளையவர்களால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு முற்றுமுழுவதுமான ஒழுங்குபடுத்தல்கள் நிறைவடைந்திருந்த வேளையில் பல நூறு மக்கள் பேரணியாக உள்ளூராட்சிமன்ற வளாகம் நோக்கி செல்லத் தொடங்கினார்கள். 

பேரணியின் ஆரம்பத்தில் ஒப்பனை செய்யப்பட்ட கலைஞர்கள் பல்லின நாடுகளின் சதிகளையும் அவற்றினூடாக எமக்கு எங்கே நீதி என்ற பொருள்பட்ட ஒரு கருத்து ஒப்பனையை செய்து நகர்ந்து வந்தார்கள். தொடர்ந்து தேசியக்கொடிகளை உயர்த்திப் பிடித்தபடியும் பதாதைகளைத் தாங்கியபடி மக்கள் நகர்ந்தார்கள். பேரணியில் தொடரும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கான நீதியை வேண்டும் பல பதாதைகளை அவர்கள் தாங்கி வந்தார்கள். 

அவற்றில் முக்கியமானவையாக

 “கொல்லப்பட்ட சிறுவர்களின் கொலைகளுக்கு நீதி கேட்பவையாகவும், காணாமல் போன உறவுகளிற்கான நீதிக்கானவையாகவும், தொடர்ந்து அரசியல் கைதிகளாக இருக்கும் உறவுகளை விடுதலை செய்யக் கோருபவையாகவும், போராளிகளின் மர்மச் சாவுகளின் மூலங்களுக்கான நீதிகளைக் கோருபவையாகவும் “ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான பதாதைகளுடனும் எழுச்சி பேரிகை ஒலிக்கவும் முன்நகர்ந்த பேரணி பிரதான வீதிகளை ஊடறுத்து பல்லின மக்களுக்கு எமது பிரச்சனைகளை எமக்குத் தேவையான நீதியையும் துண்டுப் பிரசுரங்களாகவும் ஒலி வடிவக் கருத்துக்களாகவும் வழங்கிய படி மிக நீண்ட தூரம் பயணித்து உள்ளூராட்சி மன்ற வளாகத்தை வந்தடைந்தது. 

தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது பொதுச்சுடரினை ஐ.நா நோக்கிய மிதிவண்டிப் பயணத்தில் ஈடுபட்ட அன்டனி நிமால் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநில பொறுப்பாளர் திரு அவர்கள் ஏற்றி வைத்தார் அதைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை இரண்டு மாவீரர்களின் சகோதரியான திருமதி லோகநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நினைவுக் கல்லறைக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டது அதை மாவீரர் பணிமனைச் செயற்பாட்டாளர் திருமதி லோகேஸ்வரன் அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து பொது நினைவுத்தூபிக்கான மலர்மாலையினை வடமத்திய மாநிலம் 1 இன் பொறுப்பாளர் திரு இராசா அவர்கள் அணிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் மலர்வணக்கம் செய்தும் சுடர் ஏற்றியும் இனவழிப்பு நடவடிக்கையில் அழிக்கப்பட்ட மக்களுக்காகவும் போராளிகளுக்காகவும் தமது வணக்கத்தை செலுத்தினர்.

அதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தை தொடர்ந்து மேடை நிகழ்வுகள் ஆரம்பித்தன. முதலில் தமிழின உரிமைப் போராட்டத்தில் தொடர்ந்து இயங்கிய வணக்கத்துக்குரிய பிதா அல்பேட் கோல்ன் அவர்கள் உரை வழங்கினார். தொடர்ந்து மேடை நிகழ்வுகள் நடைபெற்றன அதில் கவிதை, பாடல், நாடகம் என கலைஞர்கள் தமது வலிகளை அவற்றினூடாக வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து மக்களவையின் முக்கிய செயற்பாட்டாளரான சங்கர் அவர்கள் இன்றைய அரசியல் முன்னெடுப்புக்கள் எவ்வாறு இருக்கின்றன. எப்படியான செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். என்பன தொடர்பான விளக்கவுரையை வழங்கி இருந்தார். அதில் கடந்த 17 ஆம் நாள் ஜேர்மனியின் வெளிவிவகார பிரதிநிகளைச் சந்தித்த போது என்ன நடந்தது என்பதையும் விரிவாக விளக்கியிருந்தார். 

தொடர்ந்து சிறப்புரையினை தாயக மேம்பாட்டு செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருக்கும் திரு ராஜன் அவர்கள் ஆற்றினார். அவரின் சிறப்புரையினைத் தொடர்ந்து இளையோர் அமைப்பைச் சேர்ந்த இளையவர்களின் உறுதியுரை  எடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் தமிழீழ தேசியத் தலைவர் வழியினில் தாம் தொடர்ந்து பயணித்து இலக்கை அடைவோம் என அவர்கள் உறுதியேற்றிருந்தார்கள். 

இவ்வாறு மேடை நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது சிறப்பு நிகழ்வாக வந்திருந்த மக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. இக் கஞ்சி அங்கிருந்த மக்கள் அனைவருக்கும் 2009 இல் முள்ளிவாய்காலில் பசி பட்டினியில் இறந்து கொண்டிருந்த மக்களின் துயர் துடைக்க விடுதலைப்புலிகளின் மக்கள் பணி செய்த பிரிவுகளால் வழங்கப்பட்ட கஞ்சியை நினைவில் கொண்டு வந்து கண்ணீரை வரவழைத்தது. 

அங்கிருந்த மக்கள் நடந்து முடிந்த இனவழிப்பு நிகழ்வுகளின் தாக்கத்தை தம் முகத்தில் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நினைவுகள் முழுக்க முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தமே நிறைந்து கிடந்தது. கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார்கள். அழுது தீர்த்தார்கள் வலிகளை மறக்க முடியாது திணறினார்கள். உண்மையில் வலிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் எம் மக்களின் வாழ்வில் எப்போது விடியல் கிடைக்கும் என ஏக்கம் நிறைந்திருந்தது. 

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடல் ஒலிக்கவிடப்பட்டு இறுதியாக தேசியக்கொடி இறக்கலுடன் நினைவேந்தல் நிகழ்வி நிறைவடைந்தது.