டிரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகர் கேரி கோன் ராஜினாமா!

Wednesday March 07, 2018

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகர் கேரி கோன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகரான கேரி கோன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 57 வயதான கேரிகோன், டிரம்ப் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து வெள்ளை மாளிகையின் பொருளாதார கவுன்சில் இயக்குனராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரி ராஜினாமா செய்ததாக கூறப்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்ததற்கான  உண்மையான காரணம் தெரிவிக்கப்படவில்லை. வர்த்தக கொள்கை தொடர்பாக டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கேரிகோனின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய டிரம்ப், 'கேரி மிகச்சிறந்த ஆலோசகர். அவர் எனக்கு மூத்த பொருளாதார ஆலோசகராக பணிப்புரிந்தார். அவரின் பணி அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமைந்தது. இத்தகைய அரிய திறமை கொண்ட கேரி நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் செய்த சேவைக்கு நன்றி' என கூறினார்.

தனது ராஜினாமா குறித்து கேரிகோன் வெளியிட்ட அறிக்கையில், 'என் நாட்டிற்காக பணிபுரிந்தது பெருமையாக உள்ளது. எனது பொருளாதார கொள்கைகள் மூலம் அமெரிக்க மக்கள் பயனடைந்தனர். குறிப்பாக வரி சீர்த்திருத்தக் கொள்கை மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. இத்தகைய பதவியில் பணிபுரிவதற்கு காரணமான அதிபருக்கு நன்றி. அவரின் ஆட்சி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.