டென்மார்க் உள்ளூராட்சி தேர்தல்!

Monday November 20, 2017

எமது அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய டென்மார்க் வாழ் தமிழ் பேசும் மக்களே! 21.11.2017 அன்று நாங்கள் வாழும் டென்மார்க் நாட்டின் உள்ளூராட்சித் தேர்தல். எங்கள் தமிழீழத் தேசிய  இனத்திற்கு ஜனநாயகத்தின் மேலான நம்பிக்கையை நாம் வாழும் நாட்டிற்கும் உலகிற்கும் நம்பிக்கையுடனும் உரிமையுடனும் மீண்டும் ஒரு தடவை காண்பிப்பதற்கான நாள்.

மனிதவியல் வாழ்வுக்கு மாறான தோற்றப்பாடுகளுக்கு மத்தியில் தமிழீழத் தேசிய இனம் இன்னல்பட்டு நீதிக்காக ஏங்கும் இந்த நேரத்தில் தலைமுறை தாண்டிய மனித வள மேம்பாட்டில் இப்போது இந்த நாட்டில் தமிழ் இனம் இருந்து கொண்டிருக்கின்றது. அதன் ஒரு படிமுறை வளர்ச்சியாக தமிழீழத் தேசிய இனம் இந்நாட்டில் அரசியல் செயற்பாட்டிலும் கால் பதிக்கிறது. இம்முறை பத்திற்கும் மேற்பட்ட தமிழீழத்  தேசிய இன மேன்மக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களிற்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.

எமது அன்பான மக்களே!

நாங்கள் இன்று எமது புனித மாதத்தில் பயணிக்கின்றோம். இந்த நாட்களில் உங்கள் கைகளில் பலமான ஒரு மக்களாணைக்கான அதிகாரம் கிடைக்கின்ற நாளாக உள்ளூராட்சித் தேர்தல் வருகின்றது. 'வெளுத்ததெல்லாம் பால் அன்று' என்பதற்கு இணங்க நீங்கள் உங்கள் பகுதி சார்ந்த வேட்பாளருக்களுடனான தொடர்பாடல் பொறிமுறைகளை ஏற்படுத்தி உங்கள் பிரதேச நலன் சார்ந்த எமது தமிழ் தேசிய மேம்பாட்டுக்கான கொள்கை முன்னெடுப்பாளர்களைப் பெருமளவில் ஆதரிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

எமது மதிப்புக்குரிய வேட்பாளர்களே!

தமிழ் இனம் உலகில்  மூத்த இனம். தமிழ் பேசும் நாங்கள் உலகிற்கு மேன்மையான குடிமக்கள் இப்போது நாங்கள் வாழும் இந்த பூமிப் பந்தில் நாதியற்று இருக்கின்ற இனமாக்கப்பட்டுள்ளோம். இந்த இனத்தின் சார்பாளாராக போட்டியிடும் நீங்கள் உங்கள் சார்பு கட்சிகளினூடாக எமது இனத்துக்கான அரசியலை முன்னெடுப்பீர்கள் என்று நம்புகின்றோம். உங்கள் பிரதேசங்களில் எமது சமூக மக்களிடையே ஏற்பட்டிருக்கும்  தலைமுறை தாண்டிய நடைமுறைச் சிக்கல்களுக்கும் இங்கு வாழும் ஏனைய பலநாட்டு சமூகங்களிடையே கட்டியெழுப்பப்பட்டிருக்கும் தற்சார்பு சமூக கட்டமைப்புக்களைப் போல் எமது தமிழ்ச் சமுதாயத்திற்கும் உரிய கலை, கலாச்சார  நடைமுறை சார்பான கட்டமைப்புக்களை உருவாக்குவதில் உந்து சக்தியாக முன்னிற்பீர்கள் என்றும் உணர்கின்றோம்.

உங்கள் இந்த சமூகப்பணிகள் தேர்தலோடு மட்டும் நின்று விடாது. நீங்கள் சார்ந்த கட்சியரசியலுக்கு அப்பால் அனைத்து வேட்பாளர்களும் சேர்ந்து டெனிஸ் சமூகத்துடனான இணைவாக்கம் மற்றும் ஒருங்கிணைத்த ஒரு தமிழ்த் தேசிய பொது வேலைத்திட்டத்தினை வரையறுத்து நீங்கள் சார்ந்த கட்சியின்  ஊடாக அந்த திட்டத்தினை  எமது தமிழ் சமுதாயத்தின் முன்னே வைத்து உங்கள் பணி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அப்படியானதொரு சந்தர்ப்பத்தில் டென்மார்க் தமிழ் மக்கள் சார்பாக நாமும் சேவையாற்ற தயாராக உள்ளோம் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.

அன்புடன்
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்.
டென்மார்க்.