டெல்லியில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்த விபத்தில் 7 பேர் பலி!

Friday January 04, 2019

டெல்லியில் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள மோதி நகரில் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். 

சுதர்சன் பார்க்கில் செயல்பட்டு வந்த 2 மாடிகளை கொண்ட மின்விசிறி தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று இரவு சிலிண்டர் வெடித்ததால், அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு 5 வயது குழந்தை உட்பட 7 பேர் பலியாகியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 15-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். படுகாயமடைந்த அவர்கள் அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த கட்டிடத்தின் உரிமையாளரும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருவதாக கூறினர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் 7 பேர் கட்டிட இடுபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சுவதாகவும் காவல் துறையினர்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.