டொனால்டு டிரம்ப் அமைச்சரவையில் இந்தியர்

ஞாயிறு நவம்பர் 13, 2016

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்பின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு இடம் அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகாண ஆளுநராக இரண்டு முறை பதவி வகித்தவர் 45 வயதான பாபி ஜிண்டால். அமெரிக்க மாகாணத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்ற ஜிண்டாலுக்கு, டிரம்பின் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்புக்கு பென் கார்சன் மற்றும் ஜிண்டால் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. ட்ரம்ப் அமைச்சரவையில் இடம் பெற்றால், அமெரிக்காவில் அமைச்சராகும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமையும் ஜிண்டாலுக்குக் கிடைக்கும். அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் பதவி வகித்தபோது, சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் முதன்மை ஆலோசகராக அவர் பணிபுரிந்தார்.

 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட எண்ணிய ஜிண்டால், அதற்கான உட்கட்சித் தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்றதால், பின்னுக்குத் தள்ளப்பட்டார். அதிபர் தேர்தலுக்கு முன்பாக ட்ரம்பின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்த ஜிண்டால், அவரது அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.