தனித்துவமாக வலுவுடன் நகரும் சீனா!

Sunday October 15, 2017

இந்திய உளவுத்துறையும் ஈழவிடுதலையும் தொடரை எழுதிக் கொண்டிருக்கும் சமகாலத்திலேயே நடந்து கொண்டிருக்கும் பல விடயங்கள் மனதில் முன்னின்று நிலலாடுவதால் அவற்றையும் சமகாலத்தில் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். இத்தொடரை இந்திய உளவுத்துறையும் ஈழவிடுதலையும் என ஆரம்பித்துவிட்டதால் சிலரிடம் இந்திய உளவுத்துறை தான் ஈழவிடுதலையை அழித்ததில் முழுப்பங்கு என்ற எண்ணம் தோன்றும். இந்தியாவிற்கு எவ்வளவு பங்கு இருந்ததோ அதே அளவு பங்கு அமெரிக்காவிற்கும் உண்டு. அது குறித்தும் அதன் பின்னால் மறைந்திருக்கும் பலவிடயங்கள் குறித்தும் அடுத்து எழுத இருக்கிறேன்.

இன்று மேற்கண்ட அதாவது அமெரிக்க மற்றும் இந்திய தரப்பிற்கு ஓடிக்கொடுக்கும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கிறது. அவர்கள் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழர் அமைப்புக்களிலேயே நி;க்கமற நிறைந்து இருக்கின்றனர்.  சரி விடயத்திற்கு வருகிறேன்...


இந்திய அமெரிக்க அதீத அக்கறை சிறீலங்காவில் அது சீனாவிடம் முழுமையாக சரணாகதி அடைந்துவிடக்கூடாது என்பதிலேயே இருக்கிறது. இன்றைய உலக ஓழுங்கு நிறைவே மாற்றம் கண்டுள்ளது. பொருளாதாரத்தை மையம் கொண்டு நகரும் இப்புதிய ஒழுங்கில் சீனாவின் அசுர வளர்ச்சியும் அதையொட்டி அது முன்னெடுத்துவரும் முன்னேற்பாடுகளுமே அமெரிக்கா மற்றும் இந்தியாவை சிறீலங்கா பால் அதிக கரிசனை கொள்ள வைத்துள்ளது. இந்துசமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் சிறீலங்காவும் அத்தகைய கவர்;ச்சியை அவ்வட்டகையில் கொண்டிருப்பது அதன் வலுநிலையாகும்...

சீனா பொருளாரத்தில் முன்னேறி உலகில் முதல்தர பொருளாதார நாடாக அமெரிக்காவைக்கடந்து வந்துவிட்டது என்பதே உண்மை. அமெரிக்காவின் தற்போதைய ஜி;டிபி 19.42 ரில்லியன் டொலர்களாகும். ஆனால் சீனாவின் ஜிடிபி 23.19 ரில்லியன் டொலர்களாகும். ஆனால் சனத்தொகையை கணக்கில் கொண்டு ஒரு தனிநபருக்கான பொருளாதார வளர்ச்சி என்று பார்த்தால் அமெரிக்கா இன்றும் முதல்தர நாடாகவே உள்ளது. ஆனால் சீனாவும் அமெரிக்காவும் உலகின் பொருளாதாரத்தில் 50 சதவீதத்தை தமக்குள் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சரி அடுத்த நிலையில் உள்ள நாடுகள் என்ன என்ற ஒரு கேள்வி உங்களுக்குள் எழுவதும் தவிர்க்க முடியாத ஆர்வமே. மூன்றாவது இடத்தில் யப்பான் 4.84 ரில்லியன் ஜிடிபியுடனும் நான்காவது இடத்தில் ஜேர்மனி 4.13 ரில்லியன் ஜிடிபியுடனும் இங்கிலாந்து ஜந்தாவது இடத்தில் 2.5 ரில்லியன் ஜிடிபியுடனும் ஆறாவது இடத்தில் இந்தியா 2.45 ரில்லியன் ஜி;டிபியுடனும் பிரான்ஸ் ஏழாவது இடத்தில் 2.42 ரில்லியன் ஜி;டிபியுடனும் பிரேசில் 2.14 ரில்லியன் ஜிடிபியுடன் எட்டாவது இடத்திலும் இத்தாலி ஒன்பதாவது இடத்தில் 1.81 ரில்லியன் ஜிடிபியுடனும் கனடா 1.7 ரில்லியன் ஜிடிபியுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன.
 

இவையனைத்திலும் தொடர்ந்தும் தன்னை பொருளாதார ரீதியாக முன்னகர்த்திச் செல்லக்கூடிய தீர்க்கமான திட்டத்துடன் முன்னகரும் ஒரே நாடு சீனாவே. துறைமுக வசதிகளுடன் கூடிய சீனாவின் கிழக்குப் பிராந்தியங்கள் அசுர வளர்ச்சி கண்டுவிட முஸ்லீம் மக்களைக் கொண்ட மேற்குப் பிரதேசம் ஏற்றுமதி வாய்ப்புகள் அற்று பெரிதும் பின்தங்கியிருப்பது அங்கு அமைதியின்மை அதிகரிக்க வலிகோலுகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையிலும் அனைத்து பிரதேசங்களையும் பொருளாதார ரீதியாக வளர்த்தெடுக்கும் நோக்கிலும் சீனா ஒருபெரும் திட்டத்தை 2013இல் வகுத்தது. அதைத் தான் சீனாவின் நவீன காலத்து சில்க் ரோட் திட்டம் என அழைக்கின்றனர். றோம ராச்சிய காலத்தில் பண்டைமாற்றுச் செய்ய கொண்டிருந்த தரைவழிப்பாதை போன்ற பாதைகளை 900 பில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கும் திட்டமே இது. இதன்பிரகாரம் தரைவழி போக்குவரத்துப்பாதை மற்றும் கடல்வழிப்போக்குவரத்துப்பாதைகள் என திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இதனூடாக மத்தியகிழக்கு மற்றும் ஜரோப்பா மட்டுமன்றி ஆசிய வட்டகையும் சீனாவின் பொருளாதார வலையத்தினுள் இலகுவாக உள்ளடக்கப்படும். அதேவேளை எரிபொருளுக்கு பெரிதும் தங்குநிலையில் உள்ள சீனாவின் தேவையையும் இப்போக்குவரத்துப் பாதைகள் இலகுவாக பூர்த்திசெய்யும். இவ்வாறான கடல்வழிப்போக்குவரத்துப்பாதையில் தான் சீனாவிற்கு சிறீலங்கா பெரிதும் தேவைப்படுகிறது. மகிந்தாவின் காலத்தில் சீனா சிறீலங்காவில் காலோச்சியிருக்கிறது எனவே அதனை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என நினைத்து இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த சனாதிபதித் தேர்தலில் மகிந்தவை தோற்கடித்து மைத்திரியை ஆட்சிப்பீடமேற்றினர். இதனூடாக அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தனரா? என்பதே இன்று எழுந்துநிற்கும் பாரிய கேள்வியாகும. தமிழர் போராட்டத்தை அழிக்க உதவியவர்கள் குறைத்தபட்சம் தங்கள் நலன்களையாவது தக்கவைத்தனரா? என்றால் இல்லை என்பதே பதிலாக புலப்படுகிறது.

அவ்வாறு என்னதான் நடந்துவிட்டது? என்பது தானே உங்கள் கேள்வி. கொழும்பு போட் சிற்றி அபிவிருத்தி என்ற போர்வையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பு துறைமுகத்தை தன்னகப்படுத்த சீனா முயன்றிருந்தது. அந்நேரத்தில் மகிந்த ஆட்சி முடிவுக்கு வரவே அத்திட்டம் கையெழுத்தாவது தள்ளியே போனது. அமெரிக்காவும் இந்தியாவும் அது நடைபெறாமலே பார்த்துக் கொண்டன. சீனா 2009இல் போர் முடிவுக்கு வந்தவுடன் பணமுடையில் இருந்து சிறீலங்காவிற்கு குறுகியகால கடன் அடிப்படையில் பெரும் பணத்தை அள்ளி வழங்கியது. இவ்வாறு வழங்கி பின்னர் அதை சிறீலங்கா செலுத்த முடியாத சூழல் ஏற்படும்போது தான் விரும்யியதை சாதித்துவிடலாம் என்பதே குறுகியகால கடன் அடிப்படையின் நோக்கம். இவ்விடயத்தில் சீனாவுட்ன் அமெரிக்காவோ இந்தியாவோ போட்டிபோட முடியவில்லை என்பதே யதார்த்தம். இதில் நகைச்சுவை என்னவென்றால் அமெரிக்கா தற்போது கொண்டிருக்கும் 20.2 ரில்லியன் டொலர் கடனில் 1.102 ரில்லியனை கடனாக கொடுத்திருப்பது சீனாவே.


இவ்வாறு சீனாவிடம் சிறீலங்கா கொண்டிருக்கும் குறுகியகால கடனில் ஒரு பெரும்பகுதியை கட்டவேண்டிய காலம் நாட்களுக்குள் வந்துநிற்கவே சீனா மைத்திரி ரணில் அரசை இறுக்க ஆரம்பித்தது. விளைவு இந்திய அமெரிக்க ஆட்சேபனைகளைக் கடந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.1 பில்லியன் டொலர்களுக்கு 99 ஆண்டுகளுக்கு சீனா குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் பின்புலத்தில் நடைபெற்ற விடயங்கள் சுவாரசியமானவை. இந்தியா கடும் எதிர்ப்பு nதிரிவிக்க துறைமுகம் இராணுவத் தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என சிறீலங்கா இந்தியாவிறிகு உறுதியளித்தது. எனினும் சிறீலங்கா எப்படியும் ஒப்பந்தம் செய்யப்போகிறது என்பதை புரிந்து கொண்ட இந்தியா சரி அவ்வாறாயின் திருகோணமலை துறைமுகத்தை அதன் எண்ணைக் குதங்கள் பாவனைக்காக தமக்கு எழுதித்தருமாறு வேண்டியது. ஏற்கனவே சம்பூரில் அனல்மின்நிலையம் என்ற போர்வையில் திருமலையில் கால்பதிக்க முயன்று தோற்றுப்போன இந்தியா இம்முறை வென்றுவிட இறுங்குப்பிடியில் இருந்தது. யூலை இறுதியில் சீனாவுடள் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட ஆகஸ்ட் முதல் நாள் திருகோணமலை துறைமுக ஒப்பந்தம் இந்தியாவுடன் என வாக்குறுதி வழங்கப்பட்டது.   


திருகோணமலை துறைமுகத்தில் தான் ஒரு கண் வைத்துள்ள அமெரிக்கா தன் செல்லப்பிள்ளை ரணிலுக்கு அழுத்தம் கொடுக்க அவ்வொப்பந்தத்தை எதிர்த்து சிறீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் வேலைநிறுத்ததில் குதிக்க ஒப்பந்தம் தள்ளியே போனது. தற்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதே திருகோணமலைத் துறைமுகத்தில் ஒக்டோபர் மாதத்தில் முதற்தடவையாக சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து கடற்பயிற்சி ஒத்துகையில் அமெரிக்கா ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை இந்தியாவிற்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த யூலையில் இந்தியா யப்பானுடன் இணைந்து 10000 வீரர்கள் கொண்ட பாரிய கடற்பயிற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தது. இதன் பின்னர் சிறீலங்காவை கட்டுக்குள் வைத்திருக்கவென சிறீலங்காவை அழைத்து தனது விசாகபட்டினம் துறைமுகத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 7முதல் 14 வரை ஒரு கடற்பயிற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது. இதில் இந்தியாவால் வழங்கப்பட்ட சூர்யா சாகரா ரோந்துக்கப்பல்கள் சகிதம் சிறீலங்கா கடற்படை கலந்து கொண்டிருந்தது. இவ்வாறிருக்க அமெரிக்காவின்  திருகோணமலை கடல்பயிற்சி அறிவிப்பு இந்தியாவிற்கு அதிர்ச்சி அளிக்குமா? இல்லையா?

இதில் இன்னொரு விடயத்தையும் சொல்லியாக வேண்டும். சமாதான மேசைக்கு சிறீலங்கா அரசுடன் விடுதலைப்புலிகளை 2002இல் அழைத்து வந்து நம்பிக்கை கொடுத்த அமெரிக்கா பின்புறத்தில் சிறீலங்கா இராணுவ கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில் கட்டர் எனப்படும் ஆழ்கடல் ரோந்துகப்பல் ஒன்றை 2003இல் சிறீலங்காவிற்கு யாருமறியாது வழங்கியது. அதனை வைத்தே விடுதலைப்புலிகளின் விநியோகக்கப்பல்கள் குறிவைக்கப்பட்டன. இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்.... இவ்வாறு அமெரிக்காவும் இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு சிறீலங்காவிற்கு கடற்படைக்ப்பல்களை வழங்கி கட்டுக்குள் வைத்திருக்க முனைந்தாலும் ரஸ்சியா வழங்கும் 300 மில்லியன் கடனில் ரஸ்சியாவிடம் இருந்தே தனக்கான கடறக்டை விநியோகக் கப்பல் ஒன்றை புதிதாக கட்டி வாங்கவுள்ளது சிறீலங்கா.

இவ்வாறு இராணுவ ரீதியாக இந்தியாவும் அமெரிக்காவும் கவனம் செலுத்தி நிற்கும் அதேவேளை தன்னை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதிலேயே அதீத கவனத்தில் உள்ளது சீனா. அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம் அதன் முக்கிய கடல்வழி போக்குவரத்து பாதை ஒன்றை உறுதிசெய்துள்ளது. அதேவேளை உலகின் அதிவேக ரயில் தடங்களில் 50 சதவீதம் சீனாவிலேயே உள்ளன என்பதும் பலருக்கு அதிர்ச்சி தரும் செய்தியே. இதற்காக 10000 விஞ்ஞானிகள் பொறியிலாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இதற்கான தொழில்நுட்ப முயற்சி துரி;தப்படுத்தப்பட்டது. இன்று அதிவேக ரயில் தொழில்நுட்பத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாகவும் சீனா மாறியுள்ளது. அதன் முதற்படியாக துருக்கியில் அதற்கான பணியை மேற்கொண்ட சீனா தற்போது இங்கிலாந்தில் அதற்கான பணியை ஏற்றுள்ளது.

அதேவேளை தன் அண்டைய நாடுகளில் பொருளாதாரத்தை விஸ்தரிக்கும் நோக்கில் சீனாவில் இருந்து லாவோசினூடாக தாய்லாந்து வரை துரித ரயில் பாதை அமைக்கும் பணியிலும் இறங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்தோனேசியாவிலும் அப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தியா எவ்வளவு தான் தனித்துவம் குறித்து பேசினாலும் இன்று இந்தியா சீனாவிற்கு பொருளாதார ரீதியாக  அடிமைப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சணமான உண்மையாகும். இந்தியாவில் எதை எடுத்தாலும் இன்று மேட் இன் சீனா என்றேயிருக்கிறது. அதன் வீச்சிற்கு ஒரு உதாரணம். இன்று அனைவருக்கும் பரிச்சயமான பெயர் விஜவிஒ வழங்கும் ஆம் பிக் பாஸ் தான். இது ஒரு தொலைபேசி கம்பனி என்றும் உங்களுக்குத் தெரியும். இக்கம்பனி சீனாவின் தொலைபேசிக்கம்பனி. 2009இலேயே தொடங்கப்பட்டது. தொழில்நுட்பத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து இந்தியாவையே இன்று ஆக்கிரமித்து நிற்கிறது.

பிக் பாசை மட்டும் அவர்கள் ஸ்பொன்வர் செய்யவில்லை இந்தியாவின் பிரிமியர் லீக் எனப்படும் பல்தேச விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் 20-20 கிரிக்கட் தொடரின் ஸ்பொன்சர்சிப்பை 2022ஆம் ஆண்டுவரை 2200 கோடி ரூபாய்கு வாங்கியுள்ள்ளது விஜவிஒ. இப்போது புரிகிறதா எந்தஅளவிற்கு இந்தியாவை ஆக்கிரமித்து நிற்கிறது சீனா. இதில் சீனாவின் திட்டமிடலையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகில் குடிசனத்தொகையில் முதலிடத்தில் இருக்கிறது சீனா. இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா விரைவில் முதலிடத்திற்கு சீனாவை கடந்து முன்னேறிவிடும். மூன்றாவது இடத்தில் இருக்கிறது அமெரிக்கா. நான்காவது இடத்தில் இருக்கிறது இந்தோனேசியா ஆறாவது இடத்தில் பாக்கிஸ்தான் எட்டாவது இடத்தில் பங்காளாதேஸ் ஒன்பதாவது இடத்தில் ரஸ்சியா. இரண்டாவது நாலாவது ஆறாவது எட்டாவது ஒன்பதாவது என அருகில் இருக்கும் நாடுகளுடன் சிறந்த வர்த்தகத்தை பேணினாலே அசைக்கமுடியாத முதலிடத்தில் சீனாவால் நீண்டகாலம் திகழ முடியும் பார்த்தீர்களா அவர்களின் திட்டமிடலை.

ஆனால் அதற்காக அவர்கள் மேற்கத்தைய உலகையும் ஒதுக்கிவிடவில்லை. முறையே 2018 மற்றும் 2022இல் நடைபெறவுள்ள உலகக்கால்பந்து கோப்பைக்கான ஸ்பொன்சர்சிப்பையும் சீனாவின் தொலைபேசிக்கம்பனி விஜவிஒ 400 மில்லியன் யூறோக்களுக்கு வென்றுள்ளது. எட்டு வருட சரித்திரத்தில் எந்த கம்பனியும் எட்டாத உயரங்கள் இவை. இப்போது சொல்லுங்கள் சிறீலங்காவை சீனாவிடம் இருந்து மீட்டுக்கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இநதியாவும் அமெரிக்காவும் வெற்றி பெற்றனவா? அல்லது வெற்றி பெறுமா?

இங்கு தான் இன்னொரு  நகைச்சுவையான விடயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். 2016இல் அமெரிக்கா சிறிலங்காவிற்கு வழங்கிய உதவி 42.5 மில்லியன் டொலர்கள். ஆனால் 2017இல் ரம் ஜயாவின் காலத்தில் தான் அனைத்துமே மாறிப்போய்விட்டன. அவரது முதல் உத்தரவுகளில் ஒன்று வெளிநாட்டு உதவிகளில் பாரிய வெட்டு என்பதே. அதன்பிரகாரம் சிறீலங்காவிற்கு இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட 35 மில்லியனில் 92 சதவீத வெட்டு செய்யுமாறு அவர் வேண்ட அத்தொகை 3.4 மில்லியனானது. 2018 - 2020 காலப்பகுதிக்கென ஏற்கனவே 300 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக சீனா சிறீலங்காவிற்கு அறிவித்திருந்த நிலையில் அமெரிகாவின் இந்நிலைப்பாடு கொழும்பில் தாக்கத்தை செலுத்திவிடும் என அமெரிக்க தூதுவர் அஞ்சினார். அக்குறைப்பிற்கு அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் கமிட்டிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அவர்களை அணுகி ரம் ஜயாவிற்கு இவ்விடயத்தில் அழுத்தம் கொடுக்கும் வகையில் கொழும்பில் இருந்து சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமையிலான ஒரு நம்பிக்கையான பாராளுமன்ற குழுவை அமெரிக்கா அழைத்துவந்தார் ; அமெரிக்க தூதுவர். அவர்கள் அமெரிக்க சபாநாயகர் போல் ரயன் போன்ற முக்கியஸ்தர்களை சந்தித்தனர். அவர்களுடன் வந்த சுமந்திரனே வார இறுதியில் எல்லை கடந்து கனடாவில் பின்கதவு சந்திப்புக்களை செய்துவிட்டு திங்கள் காலையே மீண்டும் சென்று அவர்களுடன் இணைந்து கொண்டார்.

இதில் இன்னொரு விநோதம் சமீபத்தில் ஜ.நா கூட்டத்தொடாரில் கலந்து கொள்ளவென அமெரிக்கா வந்த மைத்திரி ஜ.நாவிலும் பேசினார். அவர் வருகையை எதிர்த்து தமிழர்களும் ரொன்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் எதிர்ப்பு தெரிவித்தனர். பாவம் அவர்களுக்கு தெரியாது போலும் அமெரிக்க வந்த மைத்திரிக்கு இம்முறை நயகரா வீழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வரவே பவலோ வந்து அங்கு நட்சத்திர விடுதியில் தங்கி அங்கிருந்து அமெரிக்க பக்கம் வந்து அங்கிருந்து கப்பல் ஏறி நையகரா வீழ்ச்சியை அருகில் சென்று பார்த்தார் மைத்திரி. கனடிய தமிழ்  அமைப்புக்களே வந்து கொழும்பில் நேரடியாக பேசுவதால் போர்குற்றம் குறித்த அச்சம் எல்லாம் போய்விட்டது போலும். முள்ளிவாய்காலின் போது துணைப்பாதுகாப்பு அமைச்சரல்லவா மைத்திரி. பார்தீர்களா சமகாலத்திலும் எவ்வளவு விடயம் வேகமாக நடக்கிறது... இதைத் தான் தமிழ்த் தேசியத்தலைமை தன் மாவீரர் நாள் உரைகளில் குறிப்பிட்டார். இன்று இந்துமா சமுத்திரம் சர்வதேச வல்லரசுகளின் பொருளாதார இராணுவ அரசியல் மையமாக மாறியுள்ளது. இதை மையப்படுத்தி இவர்கள் ஆடும் சதுரங்கவேட்டையில் விரும்பியோ விரும்பாமலோ நாங்களும் பங்காளிகளாக்கப்பட்டுள்ளோம். இவ்விளையாட்டை நாமும் விளையாடியே ஆக வேண்டும்.

இவ்வாறான உயர் அரசியல் விளையாட்டை விளையாடுவதற்கான அதியுட்ச சாணக்கியம் அற்றிருக்கும் நாங்கள் அவ்விiளாட்டின் வெறும் பார்வையார்களாகி அவ்விளையாட்டை விளையாடுபவர்களுக்காக அணிபிரிந்து நின்று நாம் அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு மட்டும் பந்தை பொறுக்கி எறிபவர்களாக மட்டும் தொழிற்படுவதே இன்றைய ஈழத்தமிழினத்தின் அவலநிலை. அடுத்த பாகத்தில் தமிழக தலைவர்களும் ஈழவிடுதலையும் பார்ப்போம்...