தனி ஒருவராக விமானத்தில் பயணித்த பெண்!

Monday January 08, 2018

அமெரிக்காவில் தான் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்ட பெண்ணொருவர் தனியாக குழு உறுப்பினர்களுக்கான விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

நாட்டின் தலைநகர் வாஷிங்டனை சேர்ந்தவர் பெத் வெர் ஸ்டீக் (23) இவர் தனது பெற்றோரை பார்ப்பதற்காக நியூயோர்க்கில் உள்ள ரோச்செஸ்டருக்கு சென்றுள்ளார்.

பின்னர் வாஷிங்கடனுக்கு விமானத்தில் திரும்ப காலை 9.30 மணி விமானத்தில் ஏற தயாராக இருந்தார். ஆனால் குறித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் ஏஜண்ட் ஒருவர் மூலம் இரவு 7.30 மணிக்கு வேறு விமானத்தில் செல்ல பெத் முடிவெடுத்து அங்கேயே காத்திருந்தார். ஆனால் அந்த விமானமும் தாமதமாகும் என கூறப்பட்டதால் தனது பெற்றோர் வீட்டுக்கே சென்று இரவு 10.30 மணிக்கு மீண்டும் விமான நிலையத்துக்கு பெத் வந்தார்.

ஆனால் அதற்குள் பெத் செல்ல வேண்டிய விமானம் சென்றுவிட்டது. பின்னர் பெத் செய்வதறியாது நின்ற நிலையில் அங்கிருந்த இன்னொரு ஏஜண்ட் இரவு 1 மணிக்கு கிளம்பும் விமானத்தில் பெத் பயணிக்க உதவி செய்தார்.

ஆனால் அது பயணிகள் விமானம் கிடையாது, விமான குழுவினர் மட்டும் செல்லும் சிறிய விமானமாகும்.

விமானத்துக்குள்ளே பெத் ஏறிய நிலையில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு உதவியாளர் என மொத்தம் மூவர் மட்டுமே இருந்தனர். கூட்டமாக இருக்கும் விமானம் கிளம்புவதற்கு முன்னர் பயணிகளுக்கு தரப்படும் அறிவுரைகள் பெத்துக்கும் வழங்கப்பட்டது.

முதல் வகுப்பு டிக்கெட்டை பெத் பதிவு செய்திருந்த நிலையில், இந்த சிறிய விமானத்தில் அந்த வசதி இல்லாததால் சாதாரண வகுப்பிலேயே பயணம் செய்தார்.

பெத்துக்கு ஊழியர் குடிக்க பானம் கொடுத்த போதும் மிக சோர்வாக இருந்த அவர் அதை குடிக்காமல் படுத்து தூங்கினார். பின்னர் வாஷிங்டனுக்கு பத்திரமாக வந்து சேர்ந்த நிலையில் இது குறித்த பதிவை புகைப்படங்களுடன் பெத் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.