தமது இறைமையை ஈழத்தமிழர்கள் நிலைநாட்டுவதற்கு துணைநிற்பது உலகின் கடப்பாடு – பிரெஞ்சு நாடாளுமன்றில் இடித்துரைப்பு!

June 02, 2018

தமது இறைமையை ஈழத்தமிழர்கள் நிலைநாட்டுவதற்கு துணைநிற்பது அனைத்துலக சமூகத்தின் கடப்பாடு என்பதை வலியுறுத்தும் மாநாடும், நூல் அறிமுக நிகழ்வும் பிரெஞ்சு நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது.

தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரெஞ்சு அமைச்சருமான மரி-ஜோர்ஜ் புவெற் (Marie-George Buffet) அம்மையாரின் அனுசரணையில் கடந்த 31.05.2018 வியாழக்கிழமை மாலை 3:30 மணிக்கு ஆரம்பாகிய இம் மாநாடு இரவு 7:00 மணி வரை நடைபெற்றது.

இந் நிகழ்வை தமிழீழ மக்கள் பேரவையின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளரான திரு திருக்குலசிங்கம் திருச்சோதி அவர்கள் அக வணக்கத்துடன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து தலைமை உரையினை ஆற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மரி-ஜோர்ஜ் புவெற் அம்மையார், தமது உரிமைகளைத் தமிழர்கள் வென்றெடுப்பதற்கு துணைநிற்பது பிரெஞ்சு அரசாங்கத்தின் கடப்பாடு என்பதை வலியுறுத்தினார்.

அவரை தொடர்ந்து உரையாற்றிய சனநாயகவாதிகள் மற்றும் சுயேட்சையாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் கிறிஸ்தோப் லெகார்ட் (Jean Christophe Legarde) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்புரிமையை கொண்டுள்ள பிரான்சு அரசு, தமிழர்களுக்குத் துணைநிற்பது இன்றியமையாதது என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய திரு திருக்குலசிங்கம் திருச்சோதி அவர்கள், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தீவில் தமிழர்கள் வாழ்ந்து வருவதை வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்து விளக்கியதோடு, தமிழர்கள் தமது இறைமையை நிலைநாட்டுவதற்கு பிரெஞ்சு அரசாங்கமும், அனைத்துலக சமூகமும் துணைநிற்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து அரசுகளற்ற தேசங்களாகிய ஈழத்தமிழர்களினதும் ஈராக்கின் குர்தி மக்களினதும் அரசியல்-வரலாற்றுப் புறநிலைகளை ஒப்பிட்டு பிரான்சின் முன்னணி குர்தி சமூகவியலாளரான கலாநிதி அடெல் பகவான் (Adel Bakawan) அவர்கள் உரை நிகழ்த்தினார்.

முதலாம் கட்ட அமர்வுக்கான கேள்வி நேரத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவைச் சேர்ந்த ஈழத்தமிழ் அரசறிவியலாளரும், ‘Government and Politics in Sri Lanka: Biopolitics and Security’ என்ற ஆங்கில நூலின் ஆசிரியருமான கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா அவர்கள் தனது நூலை அறிமுகம் செய்து வைத்து, தமிழர்களின் இறைமை பற்றி உரையாற்றினார்.

ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரை இளம் செயற்பாட்டாளரான சுலோஜெனன் சுமந்திரன் அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

கலாநிதி சிறீஸ்கந்தராஜா அவர்கள் தனது உரையில் குறிப்பிடுகையில், இறைமையென்பது மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதை அரசறிவியல் தத்துவார்த்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கியதோடு, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யாது, வெறுமனவே சிங்கள-பௌத்தவர்களை மட்டும் பிரதிநிதித்துவம் செய்யும் சிறீலங்கா அரசுக்குத் தமிழ் மக்கள் மீது இறையாட்சிதிகாரத்தைப் பிரயோகிக்கும் உரிமை கிடையாது என்றும், அந்த வகையில் தமது இறைமையைத் தமிழர்கள் நிலைநாட்டுவதற்கு அனைத்துலக சமூகம் துணைநிற்பது பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் அரசறிவியல் கோட்பாடுகளுக்கு இசைவானது என்றும் சுட்டிக் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து கலாநிதி சிறீஸ்கந்தராஜா அவர்களின் நூல் தொடர்பான ஆய்வுரையை ஆற்றிய பிரெஞ்சு சமூகவியலாளரும், பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக் கழக விரிவுரையாளருமாகிய கலாநிதி இனெஸ் ஹசன் (Ines Hassen), தமிழ் மக்கள் மீது எவ்வாறான அடக்குமுறை ஆட்சியை சிறீலங்கா அரசு புரிந்து வருகின்றது என்பதைக் கலாநிதி சிறீஸ்கந்தராஜா எழுதிய நூல் நுட்பமாக விளக்குவதைக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கலாநிதி சிறீஸ்கந்தராஜா எழுதிய நூலின் பிரதி மரி-ஜோர்ஜ் புவெற் அம்மையாரிடம் கையளிக்கப்பட்டது.

இறுதியாக உரையாற்றிய ஜெனீவாவைச் சேர்ந்த அரசறிவியலாளர் கலாநிதி லொறென்சோ பியோரிட்டோ (Lorenzo Fiorito), இறைமை என்பது மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கருத்திற்கு முதன் முதலில் தத்துவார்த்த வடிவம் கொடுத்த பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவிஸ் தத்துவமேதை ஜோன்-ஜக்ஸ் ரூசோ (Jean-Jacques Rousseau) அவர்களின் சிந்தனைகளை மேற்கோள் காட்டியதோடு, தமது மண்ணில் இறைமையைப் பிரயோகிக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

இரண்டாம் கட்ட அமர்வுக்கான கேள்வி நேரத்தைத் தொடர்ந்து நன்றியுரைகளுடன் நிகழ்வை மரி-ஜோர்ஜ் புவெற் அம்மையார் மற்றும் திரு திருக்குலசிங்கம் திருச்சோதி அவர்கள் நிறைவுக்குக் கொண்டு வந்தனர்.

 

 

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....