தமிழகத்தின் இரும்புப் பெண் - சோழகரிகாலன்

December 11, 2016

மரணம் பலருக்குச் சம்பவமாகும், சிலருக்கு மட்டுமே சரித்திரமாகும். தமிழ்நாட்டின் தலைவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் இப்படி மரணத்தைத் தாண்டியும் சாதனை படைத்தவர்கள். அந்த வரிசையில் செல்வி. ஜெயலலிதாவும் இணைந்துள்ளார்.

75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் நோயுடன் போராடிக் கொண்டிருந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள், டிசம்பர் 5ம் திகதி, திங்கட்கிழமை இரவு சாவடைந்துள்ளார்.

இவரது சாவினைத் தொடர்ந்து ஏழு நாட்கள் அரச துக்கதினமாக அறிவிக்கப்பட்டு விடுமுறைகள் விடப்பட்டுள்ளன.

பல இலட்சக்கணக்கான மக்களின் அஞ்சலிக்காக, சென்னையின் இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த இவரது உடலத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிராணவ் முகர்ஜி மற்றும் மற்றைய மாநில முதல்வர்கள், அரசியற் பிரமுகர்கள், மற்றைய கட்சித் தலைவர்கள், நடிகர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் ஜெயலலிதா அவர்களிற்கான தமது இறுதி மரியாதையைச் செலுத்தியிருந்தனர். இறுதி நிகழ்வு வரை ராகுல்காந்தி எம்.ஜி.ஆரின் நினைவிடத்திலேயே இருந்துள்ளார். ஜெயலலிதாவின், அரசியற் சக்தியானது, மொத்த இந்தியத் தலைமைகளையும் இன்று தமிழ்நாட்டில் ஒன்றிணைய வைத்துள்ளது.

இந்தியத் தேசியக் கொடியைப் போர்த்திக் கெளரவிக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களின் உடலம், இராணுவ மரியாதையுடன் பீரங்கி வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டு, 6ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை, அவரின் தலைவரான எம்.ஜி.ஆரின் மெரீனா கடற்கறை கல்லறை நினைவிடத்தின் பின்பாக, அதே திடலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரிற்கு அருகில் விதைக்கப்படும் ஒரே தகுதியுடைய தலைவியாக இவரது ஆளுமை இருந்துள்ளது. சசிகலா அவர்கள் இறுதிச் சம்பிரதாயங்களைச் செய்துமுடிக்க, 60 குண்டுகள் முழங்க ஜெயலலிதா அவர்களின் உடலம், முப்படையினரால் விதைகுழியில் இறக்கப்பட்டது.

வாழ்க்கையில் பெரும் போராட்டங்களையும், தடைகளையும் உடைத்தெறிந்து, முன்னேறி, அரசியலில் தனக்கென ஒரு அசையாத இடத்தை உருவாக்கி, தமிழக அரசியலின் இரும்புப் பெண்மணி என இவர் அழைக்கப்பட்டார். அரசியல் விமர்சனங்களைத் தாண்டியும், இவரது தைரியமும், தன்னம்பிக்கையும், எதையும் திடமாக முடிவெடுக்கும் தன்மையும், இவரது அரசியல் எதிரிகள் கூட இவரைப் பெரிதும் மதிக்கக் காரணமாக இருந்தது.

1948ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி மாண்டியா மாவட்டத்தில் ஜெயராம் - வேதவள்ளி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் ஜெயலலிதா. பதினைந்து வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் துவங்கிய ஜெயலலிதா தமிழக அரசியல் வாழ்வில் ஒரு அசைக்கமுடியாத பெண் ஆளுமையாக உருவெடுத்தார்.

1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தில் நடித்த போதே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதாவை தனது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நாயகியாக நடிக்க வைத்தார். எம்.ஜி.ஆருடன் மட்டும் ஜெயலலிதா இருபத்தி எட்டு படங்களுக்கும் மேலாகக் கதாநாயகியாக நடித்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ம் திகதி தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்டார். அடுத்த ஒரு வாரத்தில் அதாவது ஒக்டோபர் 17ம் திகதி அ.தி.மு.க.வை ஆரம்பித்தார். சரியாக 10 ஆண்டுகள் கழித்து, 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டார் ஜெயலலிதா. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். முதல்வராக எம்.ஜி.ஆர் 1984ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அமெரிக்காவில் இருந்தபடியே வெற்றி பெற்று மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். இதற்கு ஜெயலலிதாவின் பிரச்சாரம் பெரும் துணாயக அமைந்தது. எம்.ஜி.ஆர் போலவே ஒரு வரலாற்று சாதனையை ஜெயலலிதா 32 ஆண்டுகளுக்குப் பின்னர் படைத்து, 2016 இல் இரண்டாவது முறையாகத் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, 6வது முறையாக முதல்வரானார்.

30 வருடங்களிற்கு மேல் தமிழக அரசின் தவிர்க்க முடியாத, அசைக்கமுடியாத சக்தியாக ஜெயலலிதா இருந்துள்ளார். எம்.ஜி,ஆர் அண்ணாவின் இதயக்கனியாக இருந்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி,ஆரின் உடலம், அவரது சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டார். அதேபோல எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக இதயக்கனியாக திகழ்ந்த ஜெயலலிதா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சமாதியின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆயிரத்தில் ஒருவனில் தொடங்கிய ஜெயலலிதாவின் பயணம் எம்.ஜி.ஆருடன் அடக்கம் வரை நீடித்துள்ளது. டிசம்பர் 24, 1987ல் அதிகாலை எம்ஜிஆர் மறைந்ததாக செய்தி வெளியிடப்பட்டது. இதையறிந்த ஜெயலலிதா ராமாவரம் தோட்டத்திற்குத் தனது தலைவரின் உடலத்தைக் காணச் சென்றிருந்தார். இருப்பினும் அவரை அங்கு யாரும் உள்ளே விடவில்லை. அதன்பின் எம்.ஜி.ஆரின் உடலம் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்ட பொழுது, கிட்டத்தட்ட 2 நாட்கள் அசையாது உடலத்தின் அருகிலேயே நின்றிருந்தார். அதன் பின் எம்.ஜி.ஆரின் உடலம், இராணுவ வண்டியில் ஏற்றப்பட்ட பொழுது, ஜெயலலிதாவும் ஏற முயன்றார். ஆனால் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் உறவினரான நடிகர் தீபனால் கீழே பிடித்து தள்ளிவிடப்பட்டார். மேலும் கே.பி ராமலிங்கத்தால் அங்கு வைத்து மிகவும் இழிவாக பேசப்பட்டார்.

ஆனால் இந்த அவமானங்கள், பெண் ஒருவர் தமிழக அரசியலில் நுழைவதற்கு இருந்த சமூகத் தடைகள், துன்பங்கள், அனைத்தையும் உடைத்தெறிந்து, பெரும் மனத்துணிவுடனும் இரும்பு மனத்துடனும், தமிழக அரசியலின் உச்சத்திற்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் உடலம், பல இலட்சம் மக்களினால், அதே இராஜாஜி மண்டபத்தில் வணங்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இந்த உச்சத்தை இவர் எட்டியிருந்தார். இவர் அரசியலில் இருந்தபோது மிகவும் கேவலமாக விமர்சித்தவர்கள் கூட இன்று, தமது குற்றங்களைக் கழுவுவதுபோல், இன்று புகழ்மாலை பாடுமளவிற்கு இவரது ஆளுமை அமைந்திருந்துள்ளது.

தமிழக சட்டசபையில், சுதந்திரத் தனித் தமிழீழம் அமைவதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்களப் பேரினவாதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திலே நிறுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றியவர் மறைந்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை சிறைவாசிகளாக இருந்த பேரறிவாளவன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய முடிவெடுத்து, மத்திய அரசிற்கு இந்த விடயத்தில் சவாலாக இயங்கியிருந்தார்.

சிங்கள இராணுவம் தமிழ்நாட்டின் மண்ணிலே, எந்தவிமான பயிற்சிகளையும் செய்யக் கூடாதென்ற அதிரடி முடிவினைத் துணிகரமாக எடுத்ததோடு, சிங்கள இராணுவத்தினர் மட்டுமல்ல, சிங்கள விளையாட்டு வீரர்கள் கூட உள்ளே வரக்கூடாதெனத் தீர்க்கமாக அறிவித்து அவர்களை தமிழகத்தை விட்டு வெளியயற்றியும் இருந்தார். இலங்கைக்குச் சென்ற தமிழக வீரர்களையும் அழைத்து எச்சரித்ததோடு, அவர்களை அங்கு அனுப்பிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துத் தனது அதிகாரத்தை மத்திய அரசிற்கும் சிங்கள அரசிற்கும் வெளிப்படுத்தியிருந்தார். இதற்காகப் பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இவரிற்கு நன்றியறிதல்களைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கால் நுற்றாண்டிற்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயோரோடு இணைந்து அவரின் விடுதலைக்காகக் குரல்கொடுத்த ஜெயலலிதா அவர்களின் சாவு, உலகத் தமிழினத்திற்குப் பேரிழப்பு என்பதை விட, இந்த இழப்பு உலகத்தமிழருக்கான பின்னடைவு என பேரளிவாளனின் தாயர் தெரிவித்துள்ளார்.

பெரும் அரசியல் ஆளுமையுடன், இந்திய மத்திய அரசில் தனது அதிகாரத்தையும் பேணிவந்த ஜெயலலிதா, தனது 68வது வயதுடன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துள்ளமையால், தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கேள்வி அனைவரின் மனங்களிலும் எழுந்துள்ளது.

நன்றி: ஈழமுரசு

செய்திகள்
புதன் செப்டம்பர் 06, 2017

எந்தவொரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதர்சமாக அமைவது அப்போராட்டத்தை வழிநடத்தும் சித்தாந்தமாகும்.

வியாழன் August 24, 2017

உலகில் பெரும்பாலான மனிதர்கள் இன்று பதவியை நோக்கியே ஓடுகின்றார்கள். ஏதாவது ஒரு பதவியைப் பிடித்து பணம், புகழ், கெளரவத்தோடு வாழ்ந்துவிட வேண்டும் என்பதே இந்த ஓட்டத்திற்கான மூலகாரணம்.

வியாழன் August 24, 2017

ஒரு துளிகூட தன்னலம் இல்லாத அவரது தலைமைப்பண்பும் தனது இலட்சியத்துக்கு அவர் காட்டிய நேர்மையும்...

புதன் August 23, 2017

ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகிய வடக்குக் கிழக்கின் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் கடந்த அறுபத்தொன்பது ஆண்டுகளாக சிங்கள அரசு முன்னெடுத்து வரும் சிங்களக் குடியேற்றங்களுக்கு நிகராக