தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு !

Monday June 04, 2018

கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்லக்கூடிய அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று(ஜூன் 03) மீண்டும் 5 தமிழ் அகதிகள் சிறிலங்கா  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அழைத்துச் சென்ற 2 படகோட்டிகளும் மனித கடத்தல் குற்றத்தின் கீழ் கைதாகியுள்ளனர்.

இலங்கையின் வடக்கு கடல்பகுதியான காங்கேசந்துறை(11 நாட்டிகல் மைல் தொலைவில்) அருகே கடல்படையினர் வழக்கமான ரோந்தில் ஈடுபட்டிருந்த பொழுது இவர்கள் அனைவரும் சுற்றுவளைக்கப்பட்டுள்ளனர். எந்தவித பயண ஆவணங்களின்றி இவர்கள் வந்துள்ளதை அறிந்த கடல்படை, இவர்களை கைது செய்து காங்கேசந்துறை கடல்படை தளத்திற்கு அழைத்து சென்றுள்ளது. பின்னர், இவர்கள் அனைவரும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல், கடந்த மே 30 அன்று இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு சட்டவிரோதமாக சென்ற 6 அகதிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 25 த்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் தமிழக முகாம்களிலிருந்து படகு வழியாக சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.