தமிழகத்தில் உதய் திட்டம் அறிமுகம்

January 11, 2017

ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் சேர்ந்த காரணத்தால், மின் கட்டணம் மீண்டும் உயரும் என்கிற  அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உதய் (யுடிஏஒய்) திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. 

இதுவரை இத்திட்டத்தில், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் உள்பட 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. இந்நிலையில் இத்திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அமைச்சர் கோயல் முயற்சி மேற்கொண்டார். ஆனால், அந்த திட்டத்தில் மாநிலங்களுக்கான சாதக அம்சங்களைவிட பாதக அம்சங்களே அதிகம் இருப்பதாக ஜெயலலிதா கருதினார். இதனால் இந்த திட்டத்தில் இணைய தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார். 

இந்நிலையில் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறந்தார். இதைத் தொடர்ந்து அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த மத்திய அரசின் திட்டங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், ஒப்புதல் அளித்து வருகிறார். குறிப்பாக மிகவும் முக்கியமான திட்டங்களை கூட அமைச்சர்களே தீர்மானிக்கும் நிலையில் தமிழகம் இருந்து வருகிறது. இந்நிலையில், உதய் மின் திட்டத்தில் 21வது மாநிலமாக தமிழகம் நேற்று முன்தினம் இணைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில், தமிழக அதிகாரிகள் டெல்லியில் கையொப்பமிட்டனர். 

இந்த திட்டத்தால் தமிழக அரசுக்கு பல விதங்களில் நிதிச்சுமை ஏற்படும் என்பது உண்மை. ஆனால், அது குறித்து தமிழக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஆனால், உதய் திட்டத்தின் விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்தினால் அதில் தமிழக மக்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுவார்கள் என்று கருத்தும் எழுந்துள்ளது.

 குறிப்பாக மின்வாரியங்கள் லாபத்தில் இயங்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கலாம் என்கிற ஷரத்து காரணமாக மின்வாரியத்தின் தேவையற்ற செலவுகள், குளறுபடி மற்றும் முறைகேடுகளால் ஏற்படும் இழப்புகளை மக்கள் தலையில்தான் சுமத்த வேண்டிய நிலை ஏற்படும். காரணம் லாபம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு இத்திட்டத்தின் சில நடைமுறைகள் உள்ளது. 15 நாளைக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி மக்கள் தலையில் பொருளாதார சுமையை வைத்துள்ள மத்திய அரசு  உதய் மின்திட்டமும் சேர்ந்து கொண்டால்,  மின் கட்டணம் கடுமையாக உயரும் வாய்ப்பு உள்ளது. மின்வாரிய ஆய்வுக் கூட்டம் என்கிற பெயரில் மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்திற்கு சத்தமே இல்லாமல் பரிந்துரைகளை அனுப்பி, அதன் மூலம் மின்கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. 

இதனால், ஒரு யூனிட் மின்கட்டணம் விலை அடிக்கடி மாறும் வாய்ப்பு உள்ளது. அது பொதுமக்களையும், வியாபாரிகளையும் கடுமையாக பாதிக்கும் என்கின்றனர்.  இதுகுறித்து தமிழக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது :  உதய் திட்டத்தின் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது முக்கிய அம்சம். இல்லையென்றால், அனல் மின்நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி, ஆயில் உள்ளிட்டவைகளின் விலை ஏற்றத்தை பொறுத்து ஆண்டுக்கு ஒருமுறையாவது மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். மேலும் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்யக் கூடாது. தமிழக மின்வாரியத்தை பொறுத்தவரை, கடந்த 5 ஆண்டுகளாக ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஆண்டு வருவாய் அறிக்கையை (ஏஆர்ஆர்) சமர்ப்பிக்கவில்லை. 

இதுவும் மின்வாரியத்துக்கு பாதகம் தான்.  உதய் திட்ட ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும் என்றால், முதலில் இலவச மின்சாரம் ரத்து செய்ய வேண்டும். தற்போது விவசாயிகள் மற்றும் குடிசை பகுதிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது ரத்தாகும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 100 யூனிட் மின்சாரமும் ரத்தாகும்.  இரண்டாவதாக, மின்வாரியத்தை லாப நோக்கில் கொண்டு செல்ல வேண்டும் என்றால், மின்கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும். கடன் முழுவதையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டால் கூட வரவுக்கும் செலவுக்கும் இடேயே உள்ள வித்தியாசம் அதிகம். இதற்கு மின்கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியே இல்லை. விரைவில் தமிழக அரசு இந்த முடிவை எடுக்கலாம்.  ஆக உதய் திட்டம் மின்வாரியத்துக்கு லாபம். பொதுமக்களுக்கு நஷ்டம். இவ்வாறு அவர் கூறினார். 

அதிமுக ஆட்சியில் 3வது முறை

கடந்த 2011ம் ஆண்டு அதிமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து 2012ம் ஆண்டு 37 சதவீதமும், 2014ம் ஆண்டு 20 சதவீதமும் என 57 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சிறுகுறு நிறுவனங்கள் பாதிப்படைந்ததோடு, பெரும்பாலான நிறுவனங்கள் மூடும் சூழ்நிலைக்கே தள்ளப்பட்டுள்ளன. நடுத்தர வர்க்கத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற சூழ்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த உதய் திட்டத்துக்கு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சேர்ந்துள்ளதோடு மட்டுமின்றி, விரைவில் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி மின்கட்டணம் உயரும் பட்சத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்று 3வது முறையாக மின்கட்டணத்தை உயர்த்த இருக்கிறது என்ற சாதனையையும் படைக்க வாய்ப்புள்ளது என பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தனியார் நிறுவனம் ஆதிக்கம் 

உதய் திட்டத்தில் இணைந்துள்ள மற்ற மாநிலங்கள் பெரும்பாலான பணிகளை தனியார் வசம் ஒப்படைத்துள்ளன.  அதாவது வீடுகளில் மின்சாரம் தொடர்பாக ஏதாவது பழுது என்றால், தற்போது மின்வாரியத்துக்கு போன் செய்வோம். அவர்கள் சரி செய்வர்கள். ஆனால் இனி அந்த நடைமுறை கிடையாது. இந்த பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. தற்ேபாது உதய் திட்டத்தில் இணைந்துள்ளதால், இதனையும் தனியாருக்கு தாரை வார்க்க மின்வாரியம் முடிவு செய்யும். மின்கட்டணத்தை வசூலிக்கும் உரிமை தனியார் வசம் செல்லும்.  

செய்திகள்
வெள்ளி May 18, 2018

போர்க்களத்தில் வெற்றி ஒன்றே இலக்கு. மனிதநேயம், ஈவிரக்கம் போன்றவற்றிற்கு இடமில்லை. அங்கே பயங்கரவாத ஒடுக்குமுறைகளே வெற்றிக்கான வழிமுறைகளாகின்றன.