தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 85 பேர் பலி!

ஒக்டோபர் 09, 2017

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 85 பேர் பலியாகி உள்ளனர். 12 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலும், குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில், 90 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சுமார் 12 ஆயிரம் பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 1,150 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், தினமும் காய்ச்சல் பாதிப்பால் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களில், ஒரு சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் இருப்பவர்கள், கட்டாயம் ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும், அவ்வாறு சிகிச்சை பெறும் பட்சத்தில், நோய் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில் நோயாளிகள் வரும் போது தான் சிகிச்சை பலன் இன்றி உயிர் பலி ஏற்படுகிறது. இதுவரை, டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 85 பேர் உயிர் இழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தர்மபுரியில் அரசு சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 650 டாக்டர்களும், 2 ஆயிரம் நர்சுகளும் நியமிக்கப்பட இருப்பதாக கூறினார். மேலும், 744 சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்டை மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு மிகுதியாகவே காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தற்போது 12 ஆயிரத்து 100 பேர் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு தடுப்பு சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் இந்த காய்ச்சல் தடுப்பு பிரிவு செயல்படும். டாக்டர்கள், செவிலியர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கையை உடனடியாக கண்டறிய ரூ.24 கோடி செலவில், 737 மெஷின்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட 30 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு மேற்கொள்ள வந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில், சென்னை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த நோய் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 131 நோயாளிகள் வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு அறிகுறியுடன் 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் முழுமையாக குணப்படுத்தக் கூடிய நோய். ஒரு சிலரின் கவனக்குறைவால் இறப்பு ஏற்படுகிறது. தண்ணீரை பாத்திரங்களில் பல நாட்கள் சேமித்து வைப்பதால் டெங்கு கொசு உற்பத்தி ஆகிறது. இப்படி செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருத்தணி அரசு ஆஸ்பத்திரியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் 1,250 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சென்னை அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 250 பேரில், 27 பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. இதேபோல், எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 200 குழந்தைகளில் 20 பேருக்கு டெங்கு அறிகுறி இருக்கிறது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 29 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 5 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலுடன் நூற்றுக்கணக்கானோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 9 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 6 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 17 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 பேருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 4 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 56 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 9 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 24 பேருக்கும், நெல்லை மாவட்டத்தில் 55 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

செய்திகள்
ஞாயிறு செப்டம்பர் 23, 2018

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா, அதிக மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.