தமிழகத்தில் தான் அதிகம் ஊழல் நடக்கிறது!

Tuesday July 10, 2018

‘‘இந்தியாவிலேயே அதிகம் ஊழல் நடப்பது, தமிழகத்தில் தான்’’ என்றும், ‘‘நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செப்டம்பரில் முடிவு செய்வோம்’’ என்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பேசினார்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு பா.ஜ.க. தற்போதே தயாராகி வருகிறது.

அதன்படி பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து அமித்ஷா நேற்று சென்னை வந்தார்.

அவருக்கு பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் முரளிதரராவ், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட முக்கிய நிர்வாகிகள் தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வி.ஜி.பி. கடற்கரை அரங்கில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜ.க. குழுவினருடனும், மகா சக்தி, சக்திகேந்திரம் (பூத் பொறுப்பாளர்கள்) நிர்வாகிகளுடனும், தமிழகம், புதுச்சேரி, அந்தமான் மாநில நிர்வாகிகளுடனும் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

மகா சக்தி, சக்தி கேந்திரம் நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டம் திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தலைமை தாங்கினார். அப்போது அவருக்கு தில்லை நடராஜர் சிலை தமிழக பா.ஜ.க. சார்பில் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:–

என்னை போன்ற கட்சி நிர்வாகிகளுக்கு இன்றைய தினம் மகத்தான நாள் ஆகும். நம்முடைய எதிர்ப்பாளர்கள் ‘தமிழகத்தில் பா.ஜ.க. எங்கே இருக்கிறது?’ என்று கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். 2019 மார்ச் மாதத்தில் பா.ஜ.க. எங்கே இருக்கிறது? என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து அடுத்த விருந்தினர்களுக்காக யார் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று திருவள்ளுவர் கூறி இருப்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இங்கே கூடி இருக்கும் 15 ஆயிரம் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களை பார்த்து நான் சொல்கிறேன், 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய வலிமை மிக்க கட்சியாக பா.ஜ.க. வெற்றி பெறும்.

நரேந்திர மோடி அரசாங்கமானது மேம்பாட்டுக்காக செய்து இருக்கின்ற சேவை, நாட்டின் பாதுகாப்புக்காக செய்து இருக்கின்ற பணி ஆகியவற்றால் பா.ஜ.க. மேலும் மேலும் வளர்ச்சி கொண்டு 19 மாநிலங்களில் ஆட்சிக்கொண்டு இருக்கிறோம். 11 கோடி உறுப்பினர்களுடன், 330–க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், 1,700–க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அதிக அளவில் மேயர்கள், தாலுகா மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் என மகத்தான கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது.

மோடி அரசாங்கம் தமிழகத்தின் மேம்பாட்டுக்காக தொண்டு செய்யும் அரசாங்கமாக இருந்து கொண்டு இருக்கிறது. 70 ஆண்டுகளில் இதற்கு முந்தைய அரசாங்கம் செய்யாததை மோடி அரசாங்கம் இந்த 4 ஆண்டுகளில் செய்து இருக்கிறது.

இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ்–தி.மு.க.) 13–வது நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ரூ.94 ஆயிரத்து 540 கோடி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான ஆட்சியில் 14–வது நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 96 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்துக்கு அதிகமாக தந்து இருக்கிறது.

தமிழகத்துக்கு சொட்டு நீர் பாசன திட்டத்துக்காக ரூ.332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ திட்டத்துக்காக ரூ.2,875 கோடி ஒதுக்கி இருக்கிறது. சென்னை மோனோ ரெயில் திட்டத்துக்காக ரூ.3,267 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

சுதந்திரத்துக்கு பின்பு தமிழகத்தில் முதன் முறையாக 3,200 கி.மீ. ரெயில்வே இருப்புப்பாதை திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி தரப்பட்டு இருக்கிறது.

2017–ம் ஆண்டு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோது, ரூ.1,750 கோடியும், வர்தா புயல் வந்த போது இழப்பீடு தொகையாக ரூ.256 கோடியும், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்காக 1,445 திட்டங்கள் மூலமாக ரூ.3,670 கோடியும் தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ரூ.820 கோடி தரப்பட்டு இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், நெல்லை மருத்துவ கல்லூரிகளுக்காக ரூ.250 கோடியும், அம்ரூத் திட்டங்களுக்காக 33 நகரங்களுக்கு ரூ.3,300 கோடியும், தேசிய நெடுஞ்சாலைக்காக ரூ.23 ஆயிரத்து 700 கோடியும், பாரத் மாலா திட்டத்துக்காக ரூ.40 ஆயிரத்து 500 கோடியும், மத்திய சாலை திட்டத்துக்காக ரூ.2,100 கோடியும், மாநிலங்களை இணைப்பதற்காக ரூ.200 கோடியும், இனையம் துறைமுகத்துக்காக ரூ.28 ஆயிரம் கோடி உள்பட மொத்தம் 4 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு தந்து இருக்கிறது.

முத்ராவங்கி கடன் திட்டத்துக்காக 62 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டு இருக்கிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்திலே ரூ.2,400 கோடி பயிர் காப்பீடு தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 17 லட்சம் தாய்மார்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு தரப்பட்டு இருக்கிறது. பிரதம மந்திரி வங்கி கணக்கு திட்டம் மூலம் 19 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. 28 ஆயிரம் குடும்பங்களுக்கு எல்.இ.டி. விளக்குகள் தரப்பட்டுள்ளன. மேலும் சிறு சிறு திட்டங்களுக்காக ரூ.1,370 கோடி நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

எங்களை எதிர்ப்பவர்கள் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்கள்? என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

4 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் செய்த திட்டங்களை, 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பிற அரசாங்கம் செய்யவில்லை. மோடி அரசாங்கம் சாதிவாத, வாரிசு அரசியலையும், ஊழலையும் முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தது. பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் சிறைச்சாலைக்கு சென்றார்கள். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் எதிர்ப்பாளர்கள் கூட பா.ஜ.க. மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது.

பா.ஜ.க. அரசாங்கம் எங்கெல்லாம் அமைந்து இருக்கிறதோ? அங்கெல்லாம் ஊழலை முடிவுக்கு கொண்டு வரும் பணியிலே இறங்கி இருக்கிறோம். குஜராத், ராஜஸ்தான், மணிப்பூர், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊழலை விரட்டி இருக்கிறோம்.

ஆனால் தமிழ்நாட்டை பற்றி நினைக்கும்போது, என் இதயத்தில் வருத்தம் ஏற்படுகிறது. நாட்டிலேயே அதிகமாக ஊழல் இருக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு இருந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கூட ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வருவதற்காக நாம் உறுதி கொள்ள வேண்டும்.

சட்டமன்ற தொகுதியாகவோ, மாவட்டமாகவோ, தாலுகாவாகவோ இருக்கட்டும். எல்லா பகுதிகளில் இருந்தும் ஊழலை நாம் வெளியேற்றும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் இதற்கு முன்பு நம் நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும்.

தமிழகத்திலே ஒரு பொய் பிரசாரம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை.

பா.ஜ.க. ஆட்சியில் தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெருமை இல்லையா?

எப்போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை உலகறிய செய்வோம்.

செப்டம்பர் மாதத்துக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். சட்டம்–ஒழுங்கு நிலைநாட்டுதல், ஊழல் ஒழிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி அமையும். அந்த வலிமையான கூட்டணி ஒரு தூய்மையான நல்லாட்சியை தருவதாக அமையும். முன்பு காங்கிரஸ் மத்தியில் இருந்தபோது நாட்டின் தன்மானம் வீழ்ச்சியில் இருந்தது. தற்போது இந்தியாவின் பெருமை மோடியின் மூலம் உலகம் அறியப்பட்டு வருகிறது.

இதே நிலை 2019–க்கு பிறகும் தொடரவேண்டும். மீண்டும் மோடியின் தலைமையிலான ஆட்சியை நாட்டில் அமைக்க அனைவரும் உறுதி எடுக்கவேண்டும். மோடியின் தலைமையிலான ஆட்சியை நாம் மீண்டும் கொண்டுவர வேண்டும். அதை இந்த உலகுக்கு இன்று உரக்க சொல்லுங்கள். வந்தே மாதரம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர்கள் முரளிதரராவ், புபேந்திர யாதவ், இணைச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, பா.ஜ.க. தலைவர்கள் வி.சாமிநாதன் (புதுச்சேரி), விஷால் ஜோலி (அந்தமான்), தேசிய செயலாளர் எச்.ராஜா, இல.கணேசன் எம்.பி., முன்னாள் தலைவர்கள் கே.என்.லட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர்கள் எஸ்.மோகனராஜூலு, கே.எஸ்.நரேந்திரன், வானதி சீனிவாசன், எம்.முருகானந்தம், சுபா நாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

வி.ஜி.பி. குழுமம் சார்பில் வி.ஜி.சந்தோ‌ஷம், ரவிதாஸ், ராஜாதாஸ் ஆகியோர் திருவள்ளுவர் சிலையை, அமித்ஷாவுக்கு வழங்கினார்கள். பா.ஜ.க. மீனவரணி தலைவர் சதீஷ்குமார் அமித்ஷாவுக்கு மீன் வலையும், சிறிய படகையும் நினைவுப்பரிசாக வழங்கினார்.