தமிழகம் சிறப்பு முகாமில் வதைபடும் இலங்கை இளைஞர்கள் காலவரையறையற்ற பட்டினிப் போராட்டம்!

வெள்ளி அக்டோபர் 02, 2015

தமிழகத்தில் உள்ள சிறப்புத் தடுப்புமுகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி காலவரையறையற்ற பட்டினிப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

சிறப்பு முகாம்களில் இலங்கைத்தமிழ் அகதிகள் அடைக்கப்படுவதும், அவர்கள் அங்கிருந்து விடுதலை பெறுவதற்காக அடிக்கடி பட்டினிப்போராட்டங்கள் நடாத்துவதும், பட்டினிப்போராட்டங்கள் நடத்தும்போது  ஒரு சில அகதிகளை மட்டும் கண் துடைப்புக்கு விடுதலை செய்து விட்டு, வழங்குகின்ற வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாது, அதிகாரிகள் தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதினை வழமையாக கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக ஏமாற்றமடைந்து, குறைந்தது மூன்று வருடங்கள் தொடக்கம் எட்டு வருடங்கள் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ள பத்து இலங்கை அகதிகள், தங்களை,  இந்தியத்தண்டனை  சட்ட நடைமுறைகளின் படி, சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து குடும்பங்களுடன் வாழ்வதற்கான, அனுமதியினை வேண்டி காலவரையறையற்ற பட்டினிப்போராட்டத்தினை 01.10.2015 வியாழக்கிழமை தொடக்கம் ஆரம்பித்துள்ளனர்.
ந.பகீதரன் , பா.சிவனேஸ்வரன், த.மகேஸ்வரன் , க. மகேஸ்வரன் , க.கிருஷ்ணமூர்த்தி , க.ராஜேந்திரன், சுபாஷ் , க.உதயதாஸ், யுகப்பிரியன் , மகேந்திரன் ஆகிய இளைஞர்களே பட்டினிப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

01)   இலங்கை தமிழ் அகதிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள அயல் நாட்டார் சட்டம் (குழசநபைநெசள யுஉவ 3(2)(ந) ) சட்டம் பயன்படுத்தப்படுபவர்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையிலேயே நடைமுறைப்படுத்த முடியும். வெளிநாடுகளிலிருந்து வரும் சந்தேகநபர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பயன்படுத்த முடியும். அகதிகளாக வருகின்ற எவர் மீதும் இந்த சட்டம் பயன்படுத்த முடியாது. ஆயினும் இலங்கை அகதிகள் மீது இந்தச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு, குடும்பங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட அகதிகள் சிறப்பு முகாம் என்ற போர்வையில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்,

02)   இந்திய தண்டனை சட்டங்களுக்கு  அப்பால், இந்தச்சட்டம் மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு ஒருவரின் நடமாட்டத்தினை மூன்று மாதங்கள் வரையில் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஆங்கிலேயர்களால், 1946ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆயினும் இலங்கை அகதிகள் எதுவித கேள்விகளும் இன்றி வருடக்கணக்கில் அடைத்துவைக்கப்பட்டு உளவியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.

03)   மத்திய அரசு இந்த சட்ட அதிகாரத்தினை மாநில ஆளுநருக்கு, ஓர் அரச உத்தரவாக வழங்கியதன் விளைவாகவே, இவ்வாறு இலங்கைத்தமிழர்கள்,கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். ஆயினும் ஆளுநர் இவர்களை அடைத்து வைப்பதற்கான உத்தரவினை பிறப்பிக்காது, தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் அவர்களே கையொப்பம் இட்டு, இலங்கைத் தமிழர்களை சிறப்பு முகாம்களில் அடைப்பதற்கு உத்தரவுகளை வழங்குகின்றார். அயல்நாட்டார் சட்டமானது நீதிமன்ற அதிகாரத்திற்கு தொடர்பில்லாது ஜனாதிபதி அவர்களின் அதிகாரங்களுக்கு உட்பட்டு இருப்பதனால் நீதிமன்றங்களின் மூலம் தீர்வினை பெறமுடியாமல் உள்ளனர் இலங்கை அகதிகள். குறிப்பாக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்ற இலங்கை தமிழர்கள் அனைவரும் தங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகின்ற வழக்குகளில் இருந்து நீதிமன்றம் மூலம் விடுதலை பிணை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டம் இந்தியாவில் வாழுகின்ற ஏனைய நாடுகளை சேர்ந்த எவருக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக மிகவும் பாரதூரமான குற்றங்களான கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் புரிந்து விட்டு கைதாகின்றவர்களுக்கு கூட பயன்படுத்தப்படுவதில்லை.

04)   சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் நீதிமன்றங்களை நாடி தங்களுக்கான தீர்வினை எட்டுவதற்கான வழியினை நாடும்போது விடுதலைப்புலிகள் மீதான தடையினை காரணம் காட்டி பொய்யான பிம்பம் ஒன்றினை நீதிமன்றுக்கு ஏற்படுத்தி எந்த ஒரு தீர்வினையும் எட்டவிடாமல் தடுத்து விடுகின்றனர் உளவுத்துறையினர்


05)   சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள், அயல்நாட்டார்  சட்டத்தில் சொல்லப்பட்டவாறு, நடத்தப்படாமல், மனிதாபிமானமற்ற முறையில், கடமைபுரியும் அதிகாரிகளின் மன நிலைக்கேற்ப நடத்தப்படுவதும், வன் சொற்களால் கொடுமைப்படுத்தப்படுவதும், கேட்பாரற்ற இனமாகவும், அடிமைகளாகவும்  மிக மோசமாக நடத்தப்படுகின்றனர். அயல்நாட்டார் சட்டத்தின்படி தங்களை நடாத்தும்படி  யாராவது கேட்டால், அவர் மீது மீண்டும் மீண்டும் பொய்யான வழக்குகளை பதிவுசெய்து வஞ்சித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

06)   வருடக்கணக்கில் குடும்பத் தலைவர்களை அடைத்துவைத்து விட்டு, தேசமே தெரியாத ஒரு இடத்தில் மனைவி பிள்ளைகள், தாய், சகோதரர்கள் தனியாக வாழ்ந்து, குடும்பப்பொறுப்பினை சுமந்துகொண்டு, அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்கினை நடத்துவதற்குரிய பொருளாதார சுமையினையும் சுமக்க வைத்து, சித்திரவதை செய்கின்ற, இந்த கொடுமையான சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து, குடும்பங்களுடன் வாழ்வதற்கான சட்டரீதியான உரிமைகளை வழங்குமாறு கோரியே அகதிகள் பட்டினிப்போராட்டம் நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

07)   கேட்பதற்கு நாதியற்று சிறப்பு முகாம்களில் வருடக்கணக்கில் வாடுகின்ற தமிழ் உறவுகளின்  விடுதலைக்கும் சுதந்திரமான வாழ்வுக்கும் வழி ஏற்படுத்தி கொடுத்திட அனைத்து தமிழ் மக்களும் குரல் கொடுத்திடுவோம்.