தமிழகம் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் வன்முறை, 10 பேர் சுட்டுக்கொலை

செவ்வாய் மே 22, 2018

தமிழக காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிப் பொதுமக்கள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதே தமிழக காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. 

காவல்துறையினரின் தாக்குதலில், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் மாணவி ஒருவர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சிலாஸ் ஜெயமணி உறுதிப்படுத்தினார். 

அவர்கள் அனைவரும் துப்பாக்கிச் சூட்டினாலேயே இறந்தனர் என்றும் இறப்புக்கான காரணம் துப்பாக்கி குண்டுகள்தானா என்பதை பிரதேப் பரிசோதனைக்கு பின்னரே கூற முடியும் எனவும் மேற்படி மருத்துவர் கூறினார். 

பொலிஸாரின் தாக்குதலில் சுமார் 40 போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அவர்களில் மோசமான நிலையில் இருப்பவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், மேலும் இந்த கழிவுகளால் புற்றுநோய் வரக்கூடும் கூறி அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் கடந்த 99 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் இன்று 100 வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், இன்று போரட்டத்தை மேலும் திருப்படுத்த போராட்டக்காரர்கள் முயன்றனர். 

இந்தப் போராட்டத்தை தடுப்பதற்காக தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலையப் பகுதிகளில் நேற்று (21-ம் தேதி) இரவு பத்து மணி முதல் நாளை (23-ம் தேதி) காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. 

அ.குமரெட்டியபுரம் கிராம மக்களுக்கு அருகில் உள்ள 10 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆதரவளித்துள்ள நிலையில், அனைவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்கின்றனர்.

இந்த போராட்டத்துக்கு வியாபாரிகளும், பல்வேறு அமைப்புகளை ஆதரவளித்துள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள பல கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், இப்பகுதியில் உள்ள மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட சுமார் 20 ஆயிரம் பேர் வரையானோர் ஊர்வலமாகச் சென்றனர். 

எனினும், பொலிஸார் வீதிகளில் தடுப்புக்களை ஏற்படுத்தி மக்களின் போராட்டத்தை தடுப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். பல்லாயிரக்கணக்காக வந்த மக்கள் வெள்ளத்தைக் கண்ட காவல்துறையினர் திகைத்து நின்றனர். எனினும் காவல்துறையினர் தமது பணியைச் செய்வதற்கு முயன்றனர். 

பேரணியாகச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் செய்தனர். மேலும் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல்களையும் மேற்கொண்டனர். 

காவல்துறையினரின் தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் காயமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் காவல்துறையினரைத் திருப்பித் தாக்கத் தொடங்கினர். அவர்கள் மீது கற்கள் வீசித் தாக்கினர். 

பின்னர் இது வன்முறையாக வெடித்தது. இதன்போது, காவல்துறை வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மீது கல்வீச்சு இடம்பெற்றது. இதனால் அங்கு கண்ணாடிகள் நொருங்கின.  

தொடர்ந்து மேற்படி தொழிற்சாலையின் பணியாளர்கள் தங்கியிருக்கும் தொடர்மாடிக் குடியிருப்பு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அங்கு சில குடியிருப்புக்கள் தீவைத்து எரிக்கப்பட்டன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த வன்முறையால் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளமையை அடுத்து தமிழகத்தில் பதற்றம் நிலவுகின்றது.