தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை!

Tuesday November 28, 2017

 தமிழக ஆட்சியாளர்கள் அணிகளை சேர்ப்பதில் செலுத்தும் கவனம் மக்கள் பிரச்சினைகளுக்கு கொடுப்பதில்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கரூர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் மாநில நிர்வாகிகளின் சுற்றுபயணம் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் படி கரூர் பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளேன். கரூர் பகுதியை பொறுத்தமட்டில் தொழில் வளர்ச்சி வேகமாக உள்ளது.

ஆனால் அதற்கேற்றவாறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. இன்று மாலை ஜவுளி தொழில் அதிபர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளேன். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வேன். ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் வேட்பாளர் தேர்வு குறித்தும் தலைமை தான் முடிவு செய்யும்.

தமிழக அரசியல் சூழ்நிலை வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. தற்போது ஆளும் கட்சி 5 ஆண்டுகள் ஒற்றுமையாக இருப்பார்களா என்று தெரியவில்லை. அணிகள் மாற வாய்ப்புள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்கிறார்கள். அதைப்போல் தமிழக அரசும் இயற்கை வளங்களை காக்க வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும்.

இன்றைய தேர்தலை பொறுத்த மட்டில் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. இதன் பின்னர் தான் மக்களின் ஆதரவு தெரியவரும். தமிழக ஆட்சியாளர்கள் அணிகள் சேர்ப்பதிலும், சின்னத்தை பெருவதிலும் இருக்கும் கவனம் மக்கள் பிரச்சினைகளுக்கு கொடுப்பது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் முருகானந்தம், இளைஞரணி மாநில நிர்வாகி கோபிநாத், நகர தலைவர் செல்வம், கார்த்திக் மற்றும் பலர் இருந்தனர்.