தமிழக பழங்குடி மாணவனுக்கு இளம் விஞ்ஞானி விருது!

Saturday January 06, 2018

தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடி இன மாணவன் தனது கிராமத்தில் அரசுப்பேருந்து வசதி இல்லதாதல், கிராம மக்கள் ஒரு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்வதாக கண்டறிந்து சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்காக மத்திய அரசின் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றுள்ளான்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற, ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் சின்னக்கண்ணன் (12)ஆய்வறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தான்.

சின்னக்கண்ணனின் ஆய்வில் அந்தியூர் மலைப்பகுதியில் இருந்து அறுபது கி.மீ தூரத்தில் உள்ள கொங்காடை முதலாக 10 கிராமங்களில் உள்ளவர்கள் சமவெளிப்பகுதிக்கு செல்ல தனியார் வாகனங்களை நம்பியுள்ளார் என்றும் அரசுப் பேருந்து வசதி இல்லாததால் ஒரு முறை மலையில் இருந்து கீழே சென்று வீடு திரும்ப, ஒரு நபர் நூறு ரூபாய் செலுத்தவேண்டியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இளம் விஞ்ஞானி சின்னக்கண்ணன்  திகைக்க வைத்த ஆய்வு முடிவு

அதன்படி ஒரு வாரத்தில் 1,940 கிராம மக்கள் தனியார் வண்டிகளில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்கின்றனர். அதாவது அரசுப்பேருந்து இல்லாததால், போக்குவரத்து செலவு மற்றும் பயணிப்பவர்களின் நேர விரயம், அதிக கட்டணம் செலுத்தமுடியாததால் வேலைக்கு போகாத மக்கள் இழக்கும் வருமானம் ஆகியவை கணக்கிடப்பட்டதில், ஒரு ஆண்டுக்கு ஒரு கோடியே நான்கு லட்சத்து அறுபத்து நாலாயிரம் ரூபாயை மக்கள் செலவு செய்யவேண்டியுள்ளது என்று சிறுவன் ஆய்வில் கண்டறிந்துள்ளான்.

தனது ஆய்வுக்காக கிராமமக்களிடம் பேசி, அவர்களின் பொருளாதார இழப்பைக் கணக்கிட்டபோது, தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்கிறான். இளம் விஞ்ஞானி சின்னக்கண்ணன்

''எங்க அம்மா ரங்கம்மாள் அப்பா மாதன் விவசாய தொழிலாளர்கள். வேலை கிடைச்சா ரூ.150 ஒரு நாள் கிடைக்கும். எங்க ஊரில எல்லாரும் கூலி வேலைதான். எங்க அம்மா அப்பா மாதிரி, கிராமத்தில இருக்கிறவர்கள் சம்பாதிக்கிற காசு, ஒரு கோடிக்கும் மேல வண்டிக்கே செலவாகுதுனு தெரிஞ்சப்போ அதிர்ச்சியா இருந்துச்சு,'' என திகைப்பு நீங்காத சின்னக்கண்ணன் தெரிவித்தான்.

மூன்று மாத காலம் நடந்த ஆய்வில், தனக்கு நண்பர்கள் கார்த்தி, ராஜ்குமார் மற்றும் நாகராஜ் ஆகியோர் மிகவும் உதவியுள்ளனர் என்று கூறிய சின்னக்கண்ணன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரனிடம் தனது கிராமத்திற்கு அரசுப்பேருந்து வேண்டி மனு அளித்துள்ளதாகவும் இளம் விஞ்ஞானி சின்னக்கண்ணன் கூறினான்.

பிரதமர் மோதியுடன் ஒரு சந்திப்பு

ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு கிராம மக்கள் விழா எடுக்கவுள்ளனர் என்று கூறிய ஆசிரியர் நட்ராஜ், ''ஆய்வின்போது மக்களோடு நடந்த உரையாடலில், அவர்களின் பொருளாதாரம், சமூக கட்டமைப்பு என இதுவரை வகுப்பறைக்குள் சொல்லித்தராத ஆழமான பாடங்களை நேரடியாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றனர். விரைவில் அந்தியூர் மலைக்கிராமத்தில் அரசுப்பேருந்து ஓடினால், இந்த மாணவர்களுக்கு பெரிய வெற்றியாக அமையும்.''

விரைவில் மணிப்பூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோதியிடம் தனது ஆய்வு முடிவுகளை சின்னக்கண்ணன் அளிப்பான் என்று ஆசிரியர் நட்ராஜ்   தெரிவித்தார்.

இளம் விஞ்ஞானி சின்னக்கண்ணன்

தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் மிகச் சிறந்த முப்பது அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றாக சின்னக்கண்ணனின் கட்டுரை தேர்வாகியுள்ளது. மேலும் அவனது கட்டுரை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின், தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஆய்வு இதழில் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் நட்ராஜ் தெரிவித்தார்.