தமிழக மக்கள் மீது முதல்வருக்கு சிறிதும் அக்கறை இல்லை!

Monday December 11, 2017

ஒக்கி புயல் பாதிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் மீது முதல்வருக்கு சிறிதும் அக்கறை இல்லை என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியுள்ளார்.

ரோட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மிலாது நபி விழா நடந்தது. தேசிய தலைவர் காதர் மொகிதீன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

அப்போது இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று சென்னையில் வெள்ளம், கன்னியாகுமரியில் புயல், நெல்லை, தூத்துக்குடியில் மழை வெள்ளம் மக்கள் தத்தளிப்பு, மீனவர்கள் மாயம் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தி வருகிறார்.

வெள்ளம், புயலால் அவதிப்பட்டு வரும் பாவப்பட்ட மக்களுக்கு அவர் இதுவரை ஒரு உதவி கூட செய்யவில்லை. நேரில் சென்றும் ஆறுதல் கூறவில்லை. ஒரு முதல் அமைச்சருக்கு இதுதான் அழகா? மக்கள் மீது சிறிதாவது கவலைப்படக் கூடாதா?

புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் மாநிலத்தை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும். எங்களுக்கு நஷ்டஈட வழங்க வேண்டும் என்று கேரள முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து கேட்டுள்ளார். ஆனால் நமது முதல்வர் அதுபற்றி கேட்டாரா? ஏனெனில் அவருக்கு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லை.

ஆர்.கே.நகர் தேர்தலில் கடந்த முறை டி.டி.வி.தினகரன் பணத்தை வாரி இறைத்தார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்தது. இப்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை போய்விடும்.

எனவே தினகரனையும், அ.தி.முக. வேட்பாளர் மதுசூதனையும் போட்டியிட அனுமதிக்காமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.