தமிழக மீனவர்கள் கைதுக்கு கச்சதீவு ஒப்பந்தமே காரணம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

புதன் அக்டோபர் 28, 2015

கச்சதீவு விவகாரத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கண்டனக் கூட்டமொன்றில் உரையாற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா இதனைக் கூறியதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. கச்சதீவு ஒப்பந்தம் காரணமாகவே தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

 

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசாங்கம் கரிசனை செலுத்துவதில்லை என தெரிவித்துள்ள டி.ராஜா, தமிழக அரசாங்கம் நிறைவேற்றும் தீர்மானங்களையும் மதிப்பதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதேவேளை, இன்று விடுவிக்கப்படவுள்ள 86 மீனவர்களுடன் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட 34 மீனவர்களையும் விடுவிப்பதற்கு தலையீடு செய்றுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமது வேண்டுகோளுக்கு அமைய இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி 86 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மீனவர்கள் வீடு திரும்புவதற்கு முன்னதாக நேற்று முன்தினம் ஏழு படகுகளில் 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 படகுகளையும் மீட்பதற்கு மத்திய அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜெயலலிதா ஜெயராம் மேலும் வலியுறுத்தியுள்ளார்.