தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக!

April 16, 2017

இந்திய அரசே! தமிழக அரசே!

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று! - கூட்டறிக்கை 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன‌ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழக விவசாயிகள்  தில்லியிலும்,  தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் முன்பும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  உலக ஊடகங்களில் தமிழக விவசாயிகளின் இந்த அரை நிர்வாணப் போராட்டம், தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. தற்கொலை செய்து கொண்டு மாண்ட சக விவசாயிகளின் மண்டை ஓடுகளோடு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இப்போராட்டத்துக்கான ஆதரவலை, நாடு முழுவதும் பெருகும் வாய்ப்பை அரசு விரும்பவில்லை. இத்தனை நாளாக, இப்போராட்டத்தை கண்டும் காணாதது போல இருந்த மோடி தலைமையிலான பா.ச.க. அரசு, இரண்டு நாட்களுக்கு முன்னர் காவல்துறையைக் கொண்டு போராட்டத்தை கடுமையாக ஒடுக்கத் தொடங்கியது. போராடும் விவசாயிகளைத் தாக்கி கைது செய்து பின்னர் விடுவித்தது.

கடந்த ஏப்ரல் 10 அன்று பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுக்கலாம் எனக்கூறி தில்லி காவல்துறை விவசாயிகளை பிரதமர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று  உள்ளனர். அப்போது பிரதமரை சந்திக்கவேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனனர். பிரதமருடனான சந்திப்பிற்கு வாய்ப்பு இல்லாததால், தங்களுடைய தொடர் போராட்டத்தை இந்திய அரசுக்கும், பிரதமருக்கும் உணர்த்த எண்ணிய விவசாயிகள் பிரதமர் அலுவலகத்தின் முன் முழு நிர்வாணமாகப் போராடி, அரசின் செவிகளில் அறைந்து எதிர்ப்புக் குரலை பதிவு செய்தனர்.

ஒட்டு மொத்த இந்திய மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது தமிழக விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம். தொடக்கம் முதலே இப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழக பா.ச.க தலைவர்கள், வழக்கம் போல இந்தப் போராட்டத்தையும் இழிவு படுத்தி பேசியிருக்கிறார்கள்.

ஈசா யோகா மையத்தின் மீதான நில ஆக்கிரமிப்புப் புகார்களை சற்றும் கருத்தில் கொள்ளாமல், சிவராத்திரிக்கு தமிழகம் வந்த பிரதமர், நடிகர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நேரம் ஒதுக்கத் தயாராக இருக்கும் பிரதமர், நாட்டின் வேளாண்மையை காத்திட போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி மடுக்காததன் மூலம் இந்த பா.ச.க அரசு யாருக்கானது என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளாக இந்திய அரசு, விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் எதிரான கொள்கைகளையும், குறிப்பாக தமிழகத்தில் மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன் (நெடுவாசல்), நியூட்ரினோ உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களையும் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.  மேலும் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக தொடர்ந்துவிவசாய நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு, வளர்ச்சியின் பெயரால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நசுக்கி வருகிறது. உலக வங்கியின் அறிவுறுத்தலின் பேரில், 63 விழுக்காடாக இருக்கும் விவசாய தற்சார்பை, 23 விழுக்காடாக குறைக்கவே மத்திய அரசின் கொள்கைகள் சீரமைக்கப்படுகின்றன. கிராமப் பொருளாதாரத்தை நம்பியிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை இது அதல பாதாளத்துக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கையாகும். 

 

அதே போல கர்நாடகா காவிரியில் புதிய அணை கட்டும் திட்டத்தையும், கேரளா பவானி ஆற்றில் 6 புதிய அணைகள் கட்டி வருவது மத்திய அரசின் கொள்கை திட்டத்திற்கு ஏதுவாக உள்ளதால் அதனை தனது கள்ள மௌனத்தின் மூலம் ஆதரித்து வருகின்றது. கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு அரசும், இந்திய ஆளும் கட்சியான பாரதீய சனதாவும் தங்களுடைய அரசியல் பலன்களை கணக்கில் கொண்டே காவிரி சிக்கலில் தீர்வு எட்டவிடாமல் பார்த்துக் கொள்கின்றன.

இந்திய குற்றவியல் (National Crimes Record Bureau) ஆவணப்பதிவுகளின் படி நாளொன்றுக்கு சராசரியாக இந்தியாவில் 46 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த அவலம், கடந்த மூன்று ஆண்டுகால மோடி ஆட்சியில் கணிசமாக உயர்ந்திருக்கிறது. தமிழக விவசாய நிலைமை இன்னும் மோசமாக மாறிப் போயிருக்கிறது. மறுக்கப்பட்ட காவிரி உரிமை, பருவமழை பொய்த்துப் போனது என தமிழக விவசாயிகள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். தமிழக அரசும் கண் துடைப்புக்காக, அவ்வப் போது வறட்சி நிவாரணம் என்கிற பெயரில் மிகக்குறைந்த ஒரு தொகையை ஆங்காங்கே கொடுத்து கை கழுவிக் கொள்ள முயலுகிறது. 

நவம்பர் மாதத்திலிருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள், தில்லி ஜந்தர் மந்தரில் நிரந்தர தீர்வை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழகத்தில், தஞ்சை தரணியில் கடந்த 20 நாட்களாக, விவசாயிகள் “காவிரித் தாய் மீட்புப் போராட்டத்தில்” ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளை படுகொலை செய்யும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும்  இந்திய, தமிழக அரசுகளை கண்டிக்கின்றோம். தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்படும் பா.ச.க-வினரை கண்டிக்கின்றோம்.  இந்த கோரிக்கைகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் உரிய அழுத்தம் தந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம். எங்களது கோரிக்கைகள் பின்வருமாறு. 

இந்திய அரசு

உச்சநீதி மன்ற உத்திரவின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.

வறட்சிக்காக தமிழக அரசு கோரியுள்ள நிதியை முழுவதுமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

விவசாயிகளின் வங்கிக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாயப் பகுதியாக அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசு,

போராடும் இளைஞர்களை சிறையில் அடைத்து இந்திய அரசின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக தமிழகத்தில் எழும் போராட்டங்களை நசுக்குவதை நிறுத்த வேண்டும்.

கூட்டறிக்கை இணைந்து வெளியிடுபவர்கள்.

கொளத்தூர் மணி                                                    தி.வேல்முருகன்

தலைவர், திராவிடர் விடுதலை கழகம்                  தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி

சுப.உதயகுமரன்                                                       தமிழ் நேயன்

ஒருங்கிணைப்பாளர், பச்சைத் தமிழகம் கட்சி        தலைவர், தமிழ்த் தேச மக்கள் கட்சி 

பொறியாளர் சுந்தரராஜன்                                     தோழர் பாரதி

ஒருங்கிணைப்பாளர், பூவுலகின் நண்பர்கள்           பொதுச் செயலாளர்,தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

ஜெயப்பிரகாஷ்                                                        சரவணக்குமார்

தலைமை ஒருங்கிணைப்பாளர்                               ஒருங்கிணைப்புக் குழு,

தமிழர் முன்னணி                                                     இளந்தமிழகம் இயக்கம்.

அரங்க குணசேகரன்                                              இளையராஜா

தமிழக மக்கள் புரட்சி கழகம்                                  தலைவர், தமிழ்நாடு மாணவர் இயக்கம்

 

நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு)                              பிரின்ஸ் கஜேந்திரபாபு

சென்னை உயர்நீதி மன்றம்.                                    கல்வியாளர் 

திருப்பூர் குணா                                                        இரமணி காந்தன்

எழுத்தாளர்                                                                அறிவாயுதம் இதழ் ஆசிரியர் குழு

விஜயானந்த்                                                             மருது பாண்டியன்,

ஊடகவியலாளர்                                                       சமூக செயற்பாட்டாளர்

கிரேஸ் பானு                                                            அமுதன் RP

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு           ஆவணப்பட இயக்குனர்

விஜயலட்சுமி                                                           தயாளன்

ஊடகவியலாளர்                                                       ஊடகவியலாளர்

சூ.க.சுஜி                                                                     மதன் நாகப்பன்

பொதுச் செயலாளர்                                                  தலைவர்

தமிழ்நாடு மாணவர் முன்னணி                              தமிழ்நாடு இளைஞர் முன்னணி

தமிழ் நெறியன்                                                        செந்தில்

தலைவர், தமிழ்த்தேச மாணவர் இயக்கம்             தலைவர்,

தமிழ்த் தேச இளைஞர் இயக்கம்

 

                                 தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு

 
 
 
 
 
 
செய்திகள்
வெள்ளி May 18, 2018

போர்க்களத்தில் வெற்றி ஒன்றே இலக்கு. மனிதநேயம், ஈவிரக்கம் போன்றவற்றிற்கு இடமில்லை. அங்கே பயங்கரவாத ஒடுக்குமுறைகளே வெற்றிக்கான வழிமுறைகளாகின்றன.