தமிழரசுக்கட்சி எமது நாடாளுமன்ற சிறப்புரிமையை பறிக்கிறது!

Friday October 12, 2018

நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமையை பறிக்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சி செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எனினும், சிவசக்தி ஆனந்தனின், இந்த குற்றச்சாட்டுக்கு கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுமந்திரன் “அவர், தனது சிறப்புரிமை சந்தமான கேள்வியை எழுப்பியிருந்தார். அதனை அவர் ஒரு உரையாக ஆற்ற முடியாது. அதனையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுதந்திரமாக செயற்படுவாரானால், அவருக்கும் தன் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை இருப்பதாக கூறியிருந்தார். அவர் தன்னை ஒரு சுயாதீன உறுப்பினராக அறிவித்துக் கொண்டால், அவருக்கான நேரத்தை ஒதுக்கவேண்டியது, சபாநாகரே.

அதுவே நாடாளுமன்ற சம்பிரதாயமாகும். அவர், இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்ற வேண்டுமென்றால், தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அவ்வாறு ஏற்றுக் கொண்டு செயற்பட்டால் அவருக்கான நேரத்தை ஒதுக்கலாம். தனித்து சுயாதீனமாக செயற்படும் போது, அவருக்கான நேரத்தை சபையே ஒதுக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

இதன்போது குறிக்கிட்ட கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, “சிவசக்தி ஆனந்தன் இரண்டாவது முறையாக தன்னுடைய நாடாளுமன்ற சிறப்புரிமைத் தொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளார்.

சுமந்திரன் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய, நேரத்தை ஒதுக்குவது சிக்கல் எனக் கூறுகிறார். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்வில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, அவரைத் தெரிவு செய்த மக்கள் சார்பில் உறையாற்ற சந்தர்ப்பம் இருக்கவேண்டும். அதனை அவரின் உரிமையை மீறும் செயலாகவே நான் பார்க்கின்றேன்“ என தெரிவித்திருந்தார்.