தமிழருக்கு தேவையான அரசியல் வழி எது ?

சனி டிசம்பர் 19, 2015

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ் அரசியல் எதனை சாதித்து இருக்கிறது என்னும் கேள்வியை கேட்டால் , ஒன்றுமே இல்லை என்று எப்படி பதில் சொல்ல முடியாதோ அப்படியே எதனையும் ஆக்க பூர்வமாக சாதித்ததாகப் பெருமூச்சும் விட முடியாது. ஆனால் இந்த கேள்வியை கேட்டு சுய பரிசீலனை செய்யாமலும் இருக்க முடியாது. தமிழர்கள் கடைப்பிடிக்கும் அரசியல் வழி சரியானதா ? அதனால் என்ன அடைந்திருக்கிறார்கள் ? நிலையான மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறதா?

உண்மையில் பேரவலத்தை எதிர்கொண்டு காயங்களைத் தாங்கி நிற்கும் மக்களுக்கு மாற்றம் எதை செய்திருக்கிறது?

மாற்றறம் என்பது மகிந்தவை மாற்றுவது மட்டும்தானா? தமிழரின் அடிப்படை பிரச்சனையில் நிலையான ஒரு நன்மையை தீர்வை மாற்றம் தந்திருக்கிறதா? காத்திருப்பு அரசியலால் கைப்பற்றப்பட்டவை எவை ? நல்லிணக்கத்துக்குத் தமிழர் தரப்பு காட்டும் ஆத்மார்த்தமான வெளிப்பாட்டைப் போல் சிங்களத்தரப்பிடம் ஏதாவது நடந்திருக்கிறதா ? தீர்வு விடயத்தில் ஏதாவது நடந்திருக்கிறதா ? அரசியல் கைதிகள் , கடத்தப்பட்டவர்கள் , காணமல் ஆக்கப்பட்டோர் விடுதலை விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா ? இக்கேள்விகளுக்கு திருப்தியான பதில் கிடைக்கவே கிடைக்காது .

ஆக, இதுவரையான அரசியலில் இருந்து தமிழர் தரப்பு மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்கால அரசியலை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அப்படியாயின் எப்படியான அரசியலை முன்னெடுக்கலாம் ? அதனைப் பார்ப்பதற்கு முன்பு இக்கேள்வியை கடந்து செல்லவேண்டி உள்ளது.

ஈழத்தமிழர்கள் தமிழர்கள் பலவீனர்களா ? 2009 க்கு பின்பு ஈழத்தமிழர்கள் தொடர்பாக விதைக்கப்படும் கருத்தியலில் மிக முக்கியமான ஒன்று ஆயுத ரீதியில் தோற்கடிப்பட்ட தமிழர்கள் பலவீனமானவர்கள் , ஏன் தமிழ் தலைமைகளே முள்ளிவாய்க்காலை சுட்டிக்காட்டி இனி எதுவும் செய்ய முடியாது, நாங்கள் இறங்கித்தான் போக வேண்டும் என்று கூறுவதை அவதானிக்க முடிந்திருக்கிறது. உண்மையில் இக்கருத்து உண்மையானதா? அதாவது தமிழர்கள் பலவீனர்கள். இதனை விளங்கி கொள்ளுவதற்கு ஆகப் பிந்திய அனுபவம் ஒன்று இருக்கிறது.

அதனைப் பார்போம்.

2009 வரை இந்து சமுத்திர பிராந்தியத்தின் வலு சமநிலை பேணப்படுவதில் விடுதலைப்புலிகள் முக்கிய பங்கு வகுத்தனர், அவர்களின் மௌனிப்புக்கு பின்பு சீனா தனது முத்து மாலை திட்டத்தை விரிவு படுத்தும் வலுத்திட்டத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் ஆழமாக தனது காலை பதிக்க முழு முயற்சிகளை மேற்கொள்ளுகிறது. அப்போது இருந்த மஹிந்த அரசாங்கமும் சீனாவை ஆறத் தளுவிக்கொண்டது. இது இந்தியாவுக்கும் , அமெரிக்காவுக்கும் இந்து சமுத்திரத்தில் அவர்களின் ஆதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தியதோடு அப்பிராந்தியத்தில் அதிகரித்த ஆதிக்க போட்டியை ஏற்படுத்துகிறது. இதனால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நீண்ட நாட்களாக அமெரிக்க வேலை செய்து வருகிறது. அப்போதுதான் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இந்திய அமெரிக்க கூட்டாலோசனையின் அடிப்படையில் மைத்திரி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இதில் யார் வெல்லவேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாக்குகளை தமிழர்கள் மைத்திரிக்கு இட்டு மைத்திரியை சனாதிபதி ஆக்குகிறார்கள். அச்சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான ரணில் பிரதமராகின்றார் அதுவரை சீனாவுக்காக திறந்துவிடப்பட்ட கதவுகள் அமெரிக்காவுக்காக மாற்றம் பெற்றன.

இப்போது பின்வரும் கேள்விகளுக்கான பதிலே தமிழர் பலவீனர்களா என்பதற்கான பதில், எதிரியின் அதிகார ஆசனத்தில் எவர் உட்கார வேண்டும் என்று தீர்மானிக்கும் அரசியல் பலத்தை பெற்றவர்கள் பலவீனர்களா? பூகோள புவிசார் அரசியலின் இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஆதிக்க போக்கினை தீர்மானிக்கும் அல்லது மாற்றி அமைக்கும் அரசியல் பலத்தை பெற்றவர்கள் பலவீனர்களா ? உள்ளூர் மட்டுமல்ல உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் இராசதந்திர முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பலம் பெற்றவர்கள் பலவீனர்களா ? உண்மையில் தமிழர்களின் பலம் மற்றவர்களால் கையாளப்பட்டிருக்கிறது, தமிழர்களை பயன்படுத்தி மற்றவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள், தமிழர்கள் தமது பலத்தை பயன்படுத்தி பயன் பெற்றிருக்கிறார்களா , மற்றவர்களை கையாண்டிருக்கிறார்களா என்றால் இல்லை , ஆக தமிழர்கள் தமது பலத்தை சரிவர பிரயோக்கிக்க தவறி இருக்கிறார்களே தவிர அடிப்படையில் பலவீனர்கள் என்னும் கருத்தியல் கையாளாகாதவர்களின் கருத்தாகவே பார்க்க வேண்டி உள்ளது. இனி விடயத்துக்கு வருவோம், தமிழர்கள் இரண்டு அடிப்படைகளுக்கூடாக தமது அரசியலை முன்னெடுக்க வேண்டி உள்ளது.

1 . இனப்படுகொலைக்கான நீதிகோரலின் மீதே தமிழரின் அரசியல் கட்டி எழுப்பப்படவேண்டும்

2. நாளாந்த வாழ்வுக்கான அரசியலை முன்னெடுத்தல்

2009 க்குப் பின்னான தமிழர் அரசியல் என்பது இனப்படுகொலைக்கான நீதி கோரலின் மீதே கட்டமைக்கப்பட்டு கட்டி எழுப்பப்படவேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரசியல் அடக்குமுறையின் ஒட்டு மொத்த வடிவம் தான் இனப்படுகொலை. எனவே அதற்கான நீதி கோரும் அரசியலே தமிழர்கள் மேற்கொள்ள கூடிய அதி உச்ச பலமான அரசியலாக இருக்க முடியும் . நீதி கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம் , தனி நாடு அடையலாம் அடையாமல் போகலாம், ஆனால் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான உயிர்களுக்காக மட்டுமல்ல , இருக்கிற சந்ததியின் பாதுகாப்பான இருப்பிற்காக இந்த அரசியலை முன்னெடுக்க வேண்டி உள்ளது. ஏனெனில் இன்னொரு இனப்படுகொலைக்கு உள்ளாக்கபடுவதில் இருந்து தமிழினம் தன்னை தற்காத்துகொள்ளுவதற்கான மிகபெரும் காப்பரணாக இந்நீதி கோரல் அரசியல் வலிமையுடையதாய் அமைகிறது.

அதனை எப்படி முன்னெடுப்பது ? முதலில் செய்யவேண்டியது இதுவரை மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான ஆதாரங்களை தொகுத்து ஆவணமாக்கல் அவசியமாகிறது. அதன் அடிப்படையில் கால முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படையில் வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்த அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல வேண்டும். இரண்டாவது நாளாந்த வாழ்வுக்கான அரசியல் என்னும் போது , அரசியல் கைதிகள் , காணமல் செய்யப்பட்டோர் , கடத்தப்பட்டோர் , நில அபகரிப்பு , திட்டமிட்ட குடியேற்றங்கள் , மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் , தீர்வு திட்டம் என்ற இன்னோரன்ன விடயங்களை உள்ளடக்களாம். இன்று ஏற்பட்டிருக்கும் சிவில் வெளியை தமிழர் தரப்பு உச்சகட்டமாக பயன்படுத்தி மக்களை வலுவூட்ட முற்படவேண்டும். மேற்குறித்த விடயங்களில் இராஜதந்திர மட்டத்திலான மற்றும் மக்கள் மயப்பட்ட அரசியலையும் செயலுருப்பெரும் வகையில் மேற்கொள்ளுதல் அவசியமாகியது. நாளாந்த வாழ்வுக்கான அரசியலில் நிலையான பலாபலன்களை பெற வேண்டுமாக இருந்தால் அதற்கு கூட இனப்படுகொலைக்கான நீதி கோரல் அரசியலே அடிப்படையாய் அமைகிறது. ஏனெனில் அவற்றை பெறுவதற்கான ஒரு பிடியாக , பேரம் பேசுவதற்கான ஒரு பலமாக இந்த கோரிக்கை அமைகிறது. அதனால் இவ்விரு அரசியலையும் சமாந்தரமான முறையில் முன்னெடுக்கும் சக்தி வாய்ந்த, சாணக்கியம் மிகுந்த , திடமான அரசியலே இன்று தமிழருக்கு தேவையான அரசியலாக அமைகிறது.

– இளையவன்னியன்