தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது!

April 15, 2017

பொருளாதார வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது என தமிழர்களுடன் மிகவும் நெருக்கமான நல்லுறவை பேணும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இன்று கனடாவிலும் மற்றும் உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த நன்னாளில் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக ஒன்று கூடியும், புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.

 நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் புதிய ஆண்டை எதிர்நோக்கி இருக்கிறார்கள். கனடாவின் வரலாற்றில் 150வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் பல்வேறு கலாச்சாரம், பாரம்பரியம், பலதரப்பட்ட நம்பிக்கைகளை நாம் பெருமைப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இது தான் கனடாவை மக்கள் அமைதியுடன் வாழ்வதற்கு உலகின் மிகச்சிறந்த நாடாக ஏற்படுத்தியுள்ளது. நம் நாடு வலிமையானதாகவும், பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்ததற்கும் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது. நம் நாட்டு மக்களின் சார்பாகவும் எனது சார்பாகவும், மனைவி ஸோபியின் சார்பாகவும் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்