தமிழர்களுக்கு சம்பந்தர் பரிசளித்திருக்கும் கறள் பிடித்த பெட்டகம் - கலாநிதி சேரமான்

Wednesday November 01, 2017

09.01.2015 அன்று சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் மைத்திரிபால சிறீசேன அமர்ந்ததும் தான் தாமதம்: இதோ வருகின்றது அரசியல் தீர்வு என்று இராஜவரோதயம் சம்பந்தர் தண்டோர போட்டு அறிவித்தார். ஆனால் அரசியல் தீர்வு வரவில்லை. எட்டு மாதங்கள் கழித்து 17.08.2015 அன்று நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் மட்டும் வந்தது. ஆனாலும் என்ன? சம்பந்தரின் வாக்கை வேத வாக்காக நம்பி, அவருக்கும், அவரது பரிவாரங்களுக்கும் தமிழ் மக்கள் வாக்குகளை வாரி வழங்கினார்கள்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வந்ததோ இல்லையோ, சம்பந்தரின் தலையில் மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற கிரீடம் அமர்ந்து கொண்டது. கூடவே சம்பந்தரின் ஆணவமும் நிலத்திற்கும், வானத்திற்கும் இடையில் எகிறிப் பாயத் தொடங்கியது. ஒரு காலத்தில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னால் பவ்வியமாகக் கோவைகளைக் காவிச் சென்ற சம்பந்தர், காலின் மேல் காலைப் போட்டுக் கொண்டு பேட்டி கொடுத்தார்.

சிறையில் இருந்து வெளியில் வந்ததுமே சக அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசுவதற்காகத் தன்னைத் தேடி வந்த கோமகன் என்ற முன்னாள் அரசியல் கைதிக்குத் தனது ஒரு காலின் மேல் போடப்பட்டிருந்த மறு காலைக் காண்பித்தவாறு சம்பந்தர் பத்திரிகை படித்தார். கோமகனின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், பத்திரிகையைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தவாறு ஏதேதோ எல்லாம் சம்பந்தர் பிதற்றினார்.

அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை. இதோ வருகின்றது என்று ஏலவே சம்பந்தர் பறையடித்த அரசியல் தீர்வும் வந்து சேரவில்லை. 2016ஆம் ஆண்டும் பிறந்தது. இதோ, இந்த ஆண்டின் இறுதிக்குள் தமிழர்களின் கைகளில் அரசியல் தீர்வு வந்து தவழும் என்றார் சம்பந்தர். பத்து மாதங்கள் கடந்து தீபாவளியும் வந்தது. ஆனால் அரசியல் தீர்வு மட்டும் வரவில்லை. அடுத்த தீபாவளிக்குள் நற்செய்தி கிட்டு என்றார் சம்பந்தர். மெல்ல 2016ஆம் ஆண்டும் கடந்து போனது. சம்பந்தர் மட்டும் அசரவில்லை. அடுத்த ஆண்டின் இறுதிக்குள் அரசியல் தீர்வு கிட்டும் என்றார். இதோ வருகின்றது தீர்வு, அந்தோ தெரிகின்றது தீர்வு என்றெல்லாம் சம்பந்தரும், அவரது பரிவாரங்களும் பறையடித்தார்கள்.

இரண்டாவது தீபாவளியும் வந்தது. புதிய அரசியலமைப்பிற்கான வரைபு பற்றிய இடைக்கால அறிக்கை என்ற ஒரு அலாவுதீன் அற்புத விளக்கை சிங்களப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திரைநீக்கம் செய்து வைத்தார். அலாவுதீன் அற்புத விளக்கைத் தேய்த்த பொழுது அதிலிருந்து பூதம் ஒன்று கிளம்பியதாகவும், அந்தப் பூதம் அலாவுதீன் கேட்டதையயல்லாம் அள்ளியள்ளிக் கொடுத்ததாகவும் அம்புலி மாமா கதையயான்று உண்டு. அப்படித்தான் ரணில் விக்கிரமசிங்க திரைநீக்கம் செய்துவைத்த இடைக்கால அறிக்கைப் பெட்டகத்தைத் தேய்த்துப் பார்த்தால் தமிழ் மக்கள் கேட்பதையயல்லாம் அள்ளிக் கொடுக்கும் பூதம் ஒன்று அதிலிருந்து கிளம்பும் என்று எம்மவர்களில் சிலர் நம்பினார்கள்.

ஆனால் தேய்த்துப் பார்த்த பின்னர் தான் தெரிந்தது: அது காலம் காலமாகச் சிங்கள ஆட்சியாளர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்படும் அதே பழைய கறள் பிடித்த அரசியல் தீர்வுப் பெட்டகம் தான் என்று. முதன் முதலாக 26.07.1957 அன்று சொலமன் வெஸ்ற் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கவால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்ட பெட்டகம் அது. அப்பொழுது அது பண்டா-செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. அதற்குள் இருந்தும் கிளம்பும் பூதம் தமிழர்களுக்கு வடக்குக் கிழக்கு மாநிலங்களில் அதிகாரங்களையும், மாநில மட்டத்தில் தமிழ் மொழிக்கு சம தகுதியையும் வழங்கும் என்று அன்று தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்.

எதிர்பார்த்தபடி பூதம் ஒன்று கிளம்பியதுதான். ஆனால் கிளம்பியது தமிழர்கள் கனவு கண்ட அற்புதப் பூதம் அல்ல. மாறாக பண்டாரநாயக்கவால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்ட பெட்டகத்தை எரிப்பதற்காகவென்று ஜூனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தனா கிளப்பிய சிங்கள‡பெளத்த இனவாதப் பூதம்தான் அன்று வெளிப்பட்டது. சிங்கள தேசம் சன்னதம் ஆடியது. பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழிந்து போனது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நாட்கள் கழிய சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் டட்லி சேனநாயக்கா அமர்ந்து கொண்டார். மீண்டும் தீர்வுப் பெட்டகம் பற்றிய பரபரப்பு ஈழத்தீவைப் பற்றிக் கொண்டது.

24.05.1965 அன்று தனது பெட்டகத்தை டட்லி சேனநாயக்க திரைநீக்கம் செய்து வைத்தார். இதோ வந்து விட்டது டட்லி‡செல்வா ஒப்பந்தம் என்று, அலாவுதீனின் அற்புத விளக்கைக் கண்ட மகிழ்ச்சியில் எம்மவர்கள் குதூகலித்தார்கள். வானத்திற்கும், பூமிக்கும் இடையில் பறந்தார்கள். ஆனால் பெட்டகத்தைத் தமிழர்கள் தேய்த்துப் பார்த்த பின்னர் தான் தெரிந்தது. அது பண்டாரநாயக்காவின் அதே கறள் பிடித்த பெட்டகம் என்று. டட்லி ‡ செல்வா என்ற முலாம் அப்பெட்டகத்திற்குப் பூசப்பட்ட பொழுதும், அதிலிருந்து சிங்கள-பெளத்த இனவாதப் பூதமே கிளம்பியது. இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து ஜெயவர்த்தனாவின் முறை வந்தது. போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று 1977ஆம் ஆண்டு முழங்கிய ஜெயவர்த்தனா, புலிப்பொடியன்களுடன் போரிட முடியாமல் ராஜீவ் காந்தியிடம் தனது முதிசத்தைக் கையளித்தார்.

சிங்களக் கிளர்ச்சிக்காரர்களை வெள்ளைக்காரனுக்குக் காட்டிக் கொடுத்ததால் முதலியார் பட்டம் எடுத்த கொள்ளுப்பேரனார் வழிவந்த ஜெயவர்த்தனாவிற்குக் குள்ளநரித்தனம் பற்றியா சொல்லிக் கொடுக்க வேண்டும்? மீண்டும் ‘பழைய குருடி, கதவைத் திறவடி’ என்ற கதையாக ராஜீவ் காந்தியிடம் பண்டாரநாயக்காவின் கறள் பிடித்த பெட்டகத்தை ஜெயவர்த்தனா கொடுத்தார். ஆட்கள் மாறியிருந்தார்கள். காட்சிகள் மாறியிருந்தன. பெட்டகத்திற்கு இந்திய ‡ இலங்கை ஒப்பந்தம் என்றும், பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் என்றும் இரட்டை முலாம் பூசப்பட்டது.

ஆனால் பெட்டகத்தை ராஜீவ் காந்தி தேய்த்த பொழுது அதிலிருந்து கிளம்பிய சிங்கள-பெளத்த இனவாதப் பூதம் அவரது நடு மண்டையில் துப்பாக்கிப் பிடியால் அடிக்க முயன்றது. நல்லவேளை: அவர் சுதாகரித்துக் கொண்டு சற்று விலக, அடி அவரது தோள்பட்டையில் விழுந்தது. அத்தோடு பூதம் நின்று விடவில்லை. சிங்கள தேசத்தின் சேகுவாரா என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட றோகண விஜயவீரவின் வடிவத்தில் சன்னதம் ஆடியது. தென்னிலங்கையில் குருதியாறு ஓடியது. மூன்று ஆண்டுகளின் பின்னர் பெட்டகமும் ஒருவாறு இறுக மூடப்பட்டது.

அடுத்தது ரணசிங்க பிரேமதாசவின் முறை. சர்வகட்சி மாநாடு என்று அவர் ஒரு பெட்டகத்தை திரைநீக்கம் செய்து வைத்தார். அதற்குள் இருந்து ரஞ்சன் விஜயவீர என்றும், டிங்கிரி பண்டா விஜேதுங்க என்றும் அடுத்தடுத்து சிங்கள-பெளத்த இனவாதம் பூதம் அவதாரமெடுத்து ஆடியது.

பிறகு சந்திரிகா அம்மையாரின் முறை. அவரைத் தொடர்ந்து ரணில். பின்னர் மகிந்தர். இப்பொழுது மைத்திரிபால சிறீசேனவின் முறை. இதில் நூதனமான விடயம் என்னவென்றால் இம்முறை சிங்கள-பெளத்த இனவாதத்தின் தனியயாரு அவதாரமாக மட்டும் மைத்திரி வரவில்லை. சந்திரிகா, ரணில், மைத்திரி என்ற மூம்மூர்த்திகளாக அவர் வந்துள்ளார்.

ஆனாலும் ரணிலின் கையால் மைத்திரியார் திரைநீக்கம் செய்து வைத்திருக்கும் பெட்டகம், பண்டாரநாயக்கா திரைநீக்கம் செய்து வைத்த அதே கறள் பிடித்த பெட்டகம் தான். இடைக்கால அறிக்கை என்ற முலாம்பூசப்பட்ட இந்தப் பெட்டகத்திற்குள், தமிழர்களுக்கு சம்பந்தர் பறையடித்த அரசியல் தீர்வு என்ற தங்கப் புதையல் இல்லை என்பது வேறு கதை. ஆனால் பெட்டகம் தேய்க்கப்பட்ட மறுகணமே அதிலிருந்து அதே பழைய சிங்கள-இனவாதப் பூதம் வெறியுடன் கிளம்பியிருக்கின்றது.

புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்கின்றார்கள் பெளத்த தேரர்கள். புதிய அரசியலமைப்பு ஆபத்தானது என்கின்றார் நவீன துட்டகாமினி மகிந்த ராஜபக்ச. புதிய அரசியலமைப்பை எவராவது ஆதரித்தால் அவர்களைக் கொல்லப் போவதாக நந்திக்கடல் வரை நவீன துட்டகாமினிக்காகப் படை நடத்திச் சென்ற கமால் குணவர்த்தன சபதம் எடுத்திருக்கின்றார். புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் நாடாளுமன்றம் வெடிவைத்துத் தகர்க்கப்படும் என்று முழங்கியிருக்கின்றார் இன்றைய சிங்களச் சேகுவாரா விமல் வீரவன்ச. பிறகென்ன? சம்பந்தரின் சாணக்கியம் பண்டாரநாயக்காவின் கறள் பிடித்த பெட்டகத்தில் இருந்து காலம் காலமாகக் கிளம்பும் சிங்கள‡பெளத்த இனவாதப் பூதத்தின் காலடியில் தமிழர்களை மீண்டும் கொண்டு வந்து விட்டிருக்கின்றது. அலாவுதீன் அற்புத விளக்கைத் தேய்த்த பொழுது வெளிப்பட்ட பூதம் கேட்டதையயல்லாம் கொடுத்தது போல் மைத்திரியிடமிருந்து சம்பந்தர் என்ற மாயாவி பெற்றுத் தரப் போகும் அரசியல் தீர்வுப் பெட்டகம், தமிழர்களை இந்திரலோக வாழ்வில் இலயிக்க வைத்து விடும் என்று நம்பியிருந்த எல்லோரின் முன்னாலும் தனது கோரப் பற்களைக் காட்டியவாறு சிங்கள-பெளத்த இனவாதப் பூதம் நிற்கின்றது.

துட்டகாமினியை வயிற்றில் சுமந்த பொழுது எல்லாளனின் தளபதியின் தலையை வெட்டி, அதைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து, அதிலிருந்து வழியும் குருதியைக் குடிப்பதற்காகத் துடித்த விகாரமாதேவியின் வழியில் தமிழ்க் குருதியை மைத்திரியார் தேய்த்த பெட்டகத்திலிருந்து கிளம்பியிருக்கும் சிங்கள - பெளத்த இனவாதப் பூதம் குடிக்குமா? அல்லது எட்டரை ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் ஊழித் தாண்டவமாடிக் குடித்த தமிழ்க் குருதி போதும் என்ற திருப்தியில் வாளாவிருக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எது எப்படியிருந்தாலும் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்கு ஈழத்தமிழர்கள் துணிந்தாலே தவிர, சம்பந்தரும் சரி, வேறு எவராயிருந்தாலும் சரி, நாடாளுமன்ற அரசியல் ஊடாகத் தமிழர்களுக்கு வழங்கப் போவது பண்டாரநாயக்காவின் கறள் பிடித்த பெட்டகத்தையும், அதற்குள் வாழும் சிங்கள‡பெளத்த இனவாதப் பூதத்தையும் தான்.

நன்றி: ஈழமுரசு