தமிழர்களைப் பீடிக்கும் மறதி நோயும், புனிதராகும் சங்கரியும் - கலாநிதி சேரமான்

Wednesday December 13, 2017

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும், தத்துவாசிரியராகவும் திகழ்ந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினோராம் ஆண்டு நினைவு நாள் அண்மித்திருக்கும் வேளையில் இராஜவரோதயம் சம்பந்தனின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான கூட்டணி ஒன்று வீ.ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையில் உருவாகியுள்ளது.

ஐக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழரசுக் கட்சியின் முன்னாள் இளைஞரணித் தலைவர் சிவகரனின் தலைமையிலான கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியவை இக்கூட்டணியை உருவாக்கியுள்ளன.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கடந்த எட்டரை ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவினதும், ஏனைய உலக வல்லாதிக்க சக்திகளினதும் பொம்மலாட்டத்திற்குப் பலிக்கடாவாக்கி வரும் சம்பந்தரின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான அரசியல் முன்னணி ஒன்று உருவாகுவது வரவேற்கத்தக்க ஒன்றே. இவ்வாறான அரசியல் முன்னணி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை விட்டுக்கொடுப்பின்று முன்னிறுத்தி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் போன்றோரின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் உருவாக்கப்படும் என்றே முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இவ்வாறு நடைபெறுவதற்குப் பதிலாக வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான கூட்டணி உருவாகியிருப்பது அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். இக் கூட்டணி உருவாக்கப்பட்ட இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழீழ தாயகத்தில் இயங்கும் பொது அமைப்புக்களும் இணைந்து தமிழ்த் தேசியப் பேரவை என்ற மூன்றாவது அரசியல் அணியை உருவாக்கியிருப்பது ஓரளவுக்கு ஆசுவாசமளிக்கக்கூடிய செய்திதான். ஆனாலும் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் எதிர்த்து நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இப்பொழுது இரண்டு கூட்டணிகளை எதிர்த்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் சாவலுக்கு ஆளாகியிருக்கின்றது என்பதே யதார்த்தமாகும்.

இது ஒரு புறமிருக்க, ஆனந்தசங்கரியின் தலைமையில் புதிய கூட்டணி உதயமாகியதை அடுத்து, அவரைப் புனிதராக்கும் படலம் சில தரப்பினரால் தொடங்கப்பட்டுள்ளது. சங்கரியாரின் வசம் இருப்பது தந்தை செல்வாவும், ஜி.ஜி.பொன்னம்பலமும் இணைந்து உருவாக்கிய ஐக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னம். தமிழீழத் தனியரசுக்கான வரலாற்றுத் தீர்மானத்தை 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா நிறைவேற்றியது இந்த உதயசூரியன் சின்னத்தில் தான். இதே சின்னத்தில் போட்டியிட்டே தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான மக்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையை 1977ஆம் ஆண்டு நடந்தேறிய பொதுத் தேர்தலில் ஐக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்றது. சம்பந்தருக்கு முன்னரே நாடாளுமன்ற ஆசனத்தில் அமர்ந்தவரான சங்கரியாரும் இதே தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

தமிழீழத் தனியரசை நிறுவப் போவதாக மக்களுக்கு அளித்த ஆணையை அதன் பின்னர் சங்கரியார் காற்றில் பறக்க விட்டது வேறு கதை. கறுப்பு ஆடி இனவழிப்பின் தொடர்ச்சியாக 1983 ஆவணித் திங்களில் குள்ளநரி ஜூனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தன கொண்டு வந்த ஆறாம் திருத்தச் சட்டத்திற்குக் கட்டுப்பட மறுத்து இந்தியாவில் சில காலம் தான் அஞ்ஞாதவாசம் புரிந்தது பற்றியும், அதனால் சட்டத்தரணி தொழிலைத் அதனால் சட்டத்தரணி தொழிலைத் தன்னால் செய்ய முடியாது போனது குறித்தும் தன்னைச் சந்திப்போரிடம் சங்கரியார் பிதற்றிக் கொள்வதுண்டு. அறளை பெயர்ந்து போய் ஆள் பிதற்றுகின்றார் என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள், ‘1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியதில் இருந்து 1983ஆம் ஆண்டு ஆறாம் திருத்தச் சட்டத்தை ஜெயவர்த்தன கொண்டு வரும் வரையான ஆறாண்டு காலப் பகுதியில் தமிழீழத்தை நிறுவுவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று அவரிடம் கேட்டால் போதும். ஆள் ஆடிப் போய் விடுவாராம்.

ஆறாம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரமுகர்கள், தங்களால் வாடகை கொடுத்து அங்குள்ள வீடுகளில் தங்கியிருப்பது கடினம் என்றும், தங்களுக்கு இலவசமாக தமிழக அரசு வீடுகளை வழங்கினால் செளகரியமாக இருக்கும் என்றும் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தார்கள். எம்.ஜி.ஆர் அவர்களும் பெருந்தன்மையோடு 20.02.1984 அன்று  தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரமுகர்களான சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தர் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர்) ஆகியோருக்கு சென்னை நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.இராமசாமி குடியிருப்பில் தலா இரண்டரை இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான சொகுசு வீடுகளை வழங்கினார்.

ஆனால் சங்கரியாருக்கு மட்டும் உடனடியாக வீடுகள் எவையும் கிடைக்கவில்லை. அதற்காக அவர் சற்றுக் காத்திருக்க நேர்ந்தது. அப்பொழுது யேர்மனி செல்வதற்கு அவருக்கு வாய்ப்புக் கிட்ட, அங்கு சென்று அங்குள்ள ஈழத்தமிழ் ஏதிலிகள் முகாமில் தனது உறவினர் ஒருவருடன் சிறிது காலம் சங்கரியார் தங்கினார். ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கென்று யேர்மனிய அரசாங்கம் வழங்கிய நிதியுதவியில் உல்லாசமாக நாட்களைக் கடத்திய சங்கரியார், பின்னர் இந்தியா திரும்பியதும் பத்திரிகைகளுக்கு செவ்வியயான்றை வழங்கினார். தான் இராசதந்திரப் பயணமாக யேர்மனி சென்றிருந்ததாகவும், அங்குள்ள தமிழர்களையும், யேர்மனிய அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்து அவர்களுடன் ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகளை நிகழ்த்தி விட்டே தான் நாடுதிரும்பிய
தாகவும் சங்கரியார் கூற, அதனை சில ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.

சில காலம் கழித்து இவ்விடயம் யேர்மனியில் சங்கரியார் உல்லாசமாக நாட்களைக் கழித்த ஏதிலிகள் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழர்களின் காதுக்குச் சென்ற பின்னர் தான் சங்கரியாரின் பித்தலாட்டம் அம்பலமானது. இவ்வாறு பொய்யும், பித்தலாட்டமுமாகக் காலத்தைக் கழித்த சங்கரியார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரும் கூட தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்ட ஒரேயயாரு காரணத்திற்காக 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் தனது சொத்துடமையாக்க முற்பட்டுக் குழப்பம் விளைவித்தவர் சங்கரியார். சமாதான காலத்திலும், நிழல் யுத்தம் நிகழ்ந்த பொழுதும், முழு அளவில் யுத்தம் வெடித்த பின்னரும், தமிழீழத் தேசியத் தலைவருக்கு அறிவுரை கூறும் சாக்கில் அவரை இழிவுபடுத்தும் வகையில் திறந்த மடல்களை எழுதிக் கொட்டியவரும் சங்கரியார்தான்.

டில்லிக்குத் தந்தி எழுதி எழுதியே ஈழத்தமிழர்களை ஏமாற்றிய கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் கால்தடங்களைப் பின்பற்றித் திறந்த மடல்களை எழுதியதாலோ என்னவோ, 2006 கார்த்திகை மாதம் சங்கரியாருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உப நிறுவனமான யுனெஸ்கோ விருதொன்றை வழங்கியது. அது வெறும் விருதல்ல: விருதோடு ஒரு இலட்சம் டொலர்கள் ரொக்கப் பணமும் சங்கரியாருக்கு வழங்கப்பட்டது. அதை சங்கரியார் என்ன செய்தார் என்பது அவருக்கே வெட்ட வெளிச்சம்.

இப்படிப்பட்ட ஒருவரைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு எதிர்காலத்தில் எவ்வாறான பாதையில் பயணிக்கப் போகின்றது என்பதைப் புரிந்து கொள்வது கடினம் அல்ல. 27.11.2005 அன்று இலண்டன் அலெக்ஸாண்ட்ரா மாளிகையில் நடைபெற்ற மாவீரர் நாளில் உரையாற்றும் பொழுது சங்கரியார் பற்றிப் பின்வருமாறு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்டிருந்தார்: “நான் இந்த மண்டபத்திற்குள் வரும் பொழுது எனது நண்பர் ஒருவர் சொன்னார், ஆனந்தசங்கரி ஐயாவும் இந்தக் கூட்டத்துக்கை வந்திருக்கிறார் என்று. அவர் வந்திருக்கிறது நல்லது. ஆனால் அவரை எங்களுக்கு ஒருக்கால் அறிமுகப்படுத்தி விட்டீங்கள் என்றால் யாராவது... ஏனென்றால் ஐயாவை ஒருக்கால் கட்டிப் பிடிச்சுக் கொஞ்ச வேண்டும் என்று ஆசையாய் இருக்கு. ஆனந்தசங்கரி ஐயா கொழும்பிலை சென்னாராம், நான் இந்த உலகம் எல்லாம் சுத்திக் கொண்டு திரியிறன், என்ரை ஊர், சொந்த ஊர் கிளிநொச்சிக்குப் போக முடியவில்லை என்று. அவர் ஏன் கிளிநொச்சிக்குப் போக அந்தரப்படுகிறார் என்று எங்களுக்குத் தெரியும். கிளிநொச்சியிலை புளியம்பொக்கணை என்றொரு கிராமம் இருக்கு. அங்கே இவருக்குத் தெரிஞ்ச இரண்டு கிழவியள் இருக்கினம். இவர் அங்கு போய் உடும்பு இறைச்சி தின்கிறவராம். அதுக்காகத் தான் அங்கு போக அந்தரப்படுகிறார் போல் இருக்கு. நாங்கள் அவருக்குச் சொல்ல விரும்புகிறம், ஐயா நீங்கள் கிளிநொச்சிக்கு எப்பவும் வரலாம். அங்கே ஒரு பைவ் ஸ்ரார் யஹாட்டேல் ஒன்று பொட்டம்மான் கட்டி வைத்திருக்கிறார். அங்கே வந்தால் நல்ல சாப்பாடு கிடைக்கும்...”

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று சங்கரியாரைப் புனிதராக்க முற்படும் அனைவருக்கும் பாலா அண்ணையின் இக்கருத்து சமர்ப்பணம்.

நன்றி: ஈழமுரசு