தமிழர்களை படுகுழியில் தள்ளப்போகும் சம்பந்தரும் சுமந்திரனும் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

December 12, 2016

ஈழத் தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதற்கு சிங்கள தேசம் தயாராகிக்கொண்டிருக்கின்றது. சிங்களவர்களுக்கு ஒத்தூதி தமிழர்களை மீண்டும் சிங்களத்திடம் அடகுவைப்பதற்கு தமிழ் ஒட்டுண்ணிகளும் உடந்தையாகப் போய்க்கொண்டிருக்கின்றனர். அதுதான், சிங்கள தேசத்திற்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கம்.

இந்த அரசியலமைப்பை உருவாக்கி அது நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்கள் மீண்டும் அதல பாதாளத்தை நோக்கியே தள்ளப்படப்போகின்றனர் என்ற அச்சம் தமிழ் தேசிய உணர்வாளர்களைத் தொற்றிக்கொண்டிருக்கின்றது. இலங்கைத் தீவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்காக இதுவரை அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கின்றனர். சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக எதைச் செய்ய முடியுமோ அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றியிருக்கின்றனர்.

ஆனால், சுதந்திரம் என்பது இன்றுவரை எழுத்தளவில் மட்டுமே இருக்கின்றது. அதைச் செயலுருப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதாகத் தெரியவில்லை. சிறீலங்கா சுதந்திரம் பெற முன்னர் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு யாப்புக்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியதால் திரும்பத் திரும்ப யாப்புச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. ஆனாலும் அந்த யாப்புக்கள் இலங்கை மக்களுக்கு ஏற்றதாக அமையவில்லை.

இந்த நிலையில்தான் சிறீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் 1978 ஆம் ஆண்டு சிறீலங்காவின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு இன்றுவரை இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கின்றது.

இந்த யாப்பு ஒற்றையாட்சி, பெளத்தத்திற்கு முன்னுரிமை என்ற அடிப்படை விடயங்களுடன் சிங்களவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யாப்பாகவே அமைந்திருக்கின்றது. இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரசைகள் என்று இன்றுவரை சிங்கள ஆட்சியாளர்கள் அழைத்துக்கொள்வதற்கு இலங்கையில் அரசியல் யாப்புகளே வழி செய்கின்றன.

இதனால் இந்த அரசியல் யாப்பை மாற்றுமாறு பல தடவைகள் தமிழர் பிரதிநிதிகளால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகளை சிங்கள அரசுகளும் சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கைத் தீவில் இன முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

அரசியல் யாப்பில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டமையே இலங்கையில் போராட்டக் குழுக்கள் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்தன. தமிழீழம் நோக்கிய கோரிக்கை முன்வைக்கப்படவும் இந்த அரசியலமைப்பு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், தற்போது இலங்கையில் ஓர் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தனித் தமிழீழம் கோரி போராட்டம் நடத்திய, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற சிங்கள அரசு இந்த அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு மிகவும் தீவிரமாக முயன்று வருகின்றது.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு அதற்கு ஆதரவளித்தால் மட்டுமே அது நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இல்லாவிட்டால் அந்த அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

இந்த இடத்தில்தான் எமது தமிழ்ப் பிரதிநிதிகளின் துரோகத்தனம் அரங்கேறப்போகின்றது. மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நேரடித் தொடர்பில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனும் தாங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற கோதாவில் நடந்துகொள்கின்றனர்.

ஆனால், அவர்கள் உண்மையிலேயே தமிழ் மக்களுக்காக நேர்த்தியாக, இதய சுத்தியுடன் பணியாற்றுகின்றார்களா என்றால் இல்லை. இவர்கள் இருவரும் மட்டுமே கூட்டமைப்பின் சார்பில் அரசியலமைப்புக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் சம்பந்தனும் சுமந்திரனும் மட்டும் அரசியியலமைப்புக் குழுவில் அங்கம் வகிப்பதன் மூலம் வரப்போகின்ற அரசியலமைப்பு எப்படி வரும் என்பதை ஊகிக்க முடிகின்றது.

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டவுடன், தான் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் என்றும் இதனால், அவர்களுக்கும் ஏற்ற வகையிலேயே கருத்துக்களை முன்வைக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் விடயத்தில் சம்பந்தனுக்கு எந்த உடன்பாடும் இல்லை. புலிகள் தன்னைக் கொலை செய்ய முயன்றனர் என்றும் வெளிப்படையாகவே கருத்துக் கூறியவர். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டபோது அதனைக் கைதட்டி வரவேற்றவர். இப்படியான ஒருவர் எப்படி புலிகள் விட்ட இடத்தில் இருந்து தமிழ் மக்களின் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை அல்லது தமிழ் மக்களுக்கு ஏற்ற விதத்தில் அரசியலமைப்பை உருவாக்குமாறு வலியுறுத்துவார்.

சுமந்திரன் சம்பந்தரை விட மேலும் ஒருபடி உயர்ந்தவர். இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரேரணை கொண்டுவர, மாகாண சபையில் உள்ள அத்தனை உறுப்பினர்களும் அதை ஏகமனதாக நிறைவேற்றிய பின்னரும், போர்க்குற்றத்திற்கான சர்வதேச விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டது என்றும், அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் இன்றுவரை பாடம் கற்பிக்கின்றார்.

இப்படியான சுமந்திரன் தமிழ் மக்களுக்கு ஏற்ற விதத்தில் அரசியல் அமைப்பில் கருத்துக்களை சேர்க்கவேண்டும் என்று எப்படி வலியுறுத்துவார்? தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு தமிழீழமே இறுதித் தீர்வு என்று போராடிய தமிழினம் தற்போது அர்த்தபுஷ்டியான சமஸ்டியையாவது முன்வையுங்கள் என்று கோரி நிற்கின்றது. வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, இங்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டுடன் அந்த சமஷ்டி இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

அதாவது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகின்ற ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையும் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கில் அர்த்தபுஷ்டியான சமஷ்டியை ஒத்ததாகவே இருக்கின்றது. இவ்வாறான நிலையில், ஏனைய கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு, கட்சிகளின் கருத்துக்களைத் தூக்கி வீசிவிட்டு, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயல்கிறது. அதற்கு, தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளாமல் அரைகுறை வாக்குகளில் நாடாளுமன்றம் சென்ற சம்பந்தனும் சுமந்திரனும் உடந்தையாக இருக்கின்றனர். ஒற்றையாட்சியை உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும் என்று தென்னிலங்கையின் இனவாதக் கட்சிகள் இப்போதே போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. ஆளும் கட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய பிரதான இருவர் உட்பட பல அமைச்சர்கள் அடிக்கடி வெளியிடுகின்ற கருத்துக்களும் இங்கே அவதானிக்கப்படவேண்டும்.

அதாவது சிங்கள மக்களுக்கோ, பெளத்த மதத்திற்கோ இழுக்கு ஏற்படும் வகையில், அவைகளைப் புறந்தள்ளும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையாது என்றும் நாட்டில் பிளவுகள் இருக்க முடியாது என்றும் அனைவரும் ஒரே மக்கள் என்ற ரீதியில் புதிய அரசியல் சாசனம் கொண்டுவரப்படும் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

மேலும் சில அமைச்சர்களும் சிங்கள இனவாதிகளும் ஒற்றையாட்சியை முதன்மைப்படுத்தியே அரசியல் அமைப்பு அமைய வேண்டும் என்று கூறுகின்றன. அப்படி அமைக்கப்படவில்லையாயின் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அவை எச்சரித்திருக்கின்றன. இந்த எச்சரிக்கைகளுக்கு அப்பால் தெற்கிலுள்ள பெளத்த பீடங்களின் ஆசியுடனேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது என்பதையும் இங்கே சொல்லிக்கொள்ள வேண்டும். தெற்கில் உள்ள எந்தவொரு பெளத்த மதபீடமும் ஒற்றையாட்சியைத் தவிர வேறு எந்த அரசியலமைப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதும் இங்கு நோக்கப்படவேண்டும்.

ஆக, வர இருக்கின்ற அரசியல் சாசனமும் ஒற்றையாட்சியை மையப்படுத்தியதாகவே வரும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு விசேட சரத்துக்கள் சிலவற்றைக் கொண்டுவந்து அதுவே தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதை சொல்லப்போகின்றார்கள். இதுவே உண்மை. சிங்களவர்களையும் நாம் அனுசரித்துத்தான் போகவேண்டும் என்று ஏற்கனவே இவர்கள் இருவரும் வெளிப்படையாக கருத்துக்களைக் கூறியிருக்கின்றனர். எனவே, ஒற்றையாட்சி தவிர்ந்த அரசமைப்பு உருவாக்கத்திற்கு சிங்களத் தரப்பு சம்மதிக்காது என்று தமிழர்களுகக்கு கூறி, இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கும், அதற்கேற்பவே புதிய சரத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன என்று சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

எனவே, இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்களும் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். சிறீலங்கா நாடாளுமன்றத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எப்போதுமே தீர்வு கிடைக்காது, அதனால் நாம் அதை நம்பவில்லை என்று தமிழீழ தேசியத் தலைவர் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனாலும், நாம் எமது கருத்துக்களை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

எனவே, நாடாளுமன்றம் மூலம் எமக்கு தீர்வு கிடைக்காது என்றாலும், ஒற்றையாட்சிக்கு ஆதரவளிப்பதானது தமிழ் மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதை இந்தக் கட்டுரையின் வாயிலாக சுட்டிக்காட்டுகின்றோம்.

செய்திகள்
திங்கள் June 25, 2018

உலக வெண்புள்ளி தினமானது ஆண்டுதோறும் ஜூன் 25-ம் திகதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

வெள்ளி June 01, 2018

நான்தான்பா ரஜினிகாந்த் என்ற ஹாஷ்ராக் ரெண்ட் முதல் ...போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற சீற்றங்கள் வரை நானாவித செய்திகள் கிட்டும் பின்னணியில் மீண்டும் ஒரு நாள்!