தமிழர்கள் சிரிப்பதா? அழுவதா? - ‘கலாநிதி’ சேரமான்

வெள்ளி நவம்பர் 18, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் ஈட்டிய வெற்றி அமெரிக்க மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததோ இல்லையோ, சிங்களத் தலைவர்களைப் பெரும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. டிரம்ப் அவர்கள் வெற்றி பெற்ற மறுகணமே அவருக்கு மைத்திரிபால சிறீசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.

டிரம்ப் அவர்களை எதிர்த்துத் தேர்தல் களத்தில் நின்ற கிலாரி கிளின்ரனின் வெற்றிக்காக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம் ஆயிரம் தேங்காய்களை உடைத்தார். ஆனாலும் என்ன? அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் கடவுளிடமா உள்ளது? ஆயிரம் தேங்காய்களும் சிதறிப் போனதுதான் மிச்சம். அவ்வளவு தேங்காய்களையும் நாசம் செய்யாமல், அவற்றை ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு சிவாஜிலிங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தால், தமது ஒருவேளை உணவுத் தேவையையாவது அவர்கள் பூர்த்தி செய்திருப்பார்கள். ஆயிரம் தமிழ்க் குடும்பங்களின் ஒரு நாள் பசியைப் போக்கிய புண்ணியம் ஆவது சிவாஜிலிங்கத்திற்குக் கிட்டியிருக்கும்.

சிவாஜிலிங்கத்தின் தேங்காய் உடைப்பு அரசியல் இப்படிச் சிதறுண்டு போய் கிடக்கின்றது என்றால், அவரது தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் அரசியல் சாணக்கியம் இன்னும் வேடிக்கையாக உள்ளது. டிரம்ப் அவர்களின் வெற்றி தொடர்பாக இவ்வாரம் தமிழ் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருக்கும் சம்பந்தர், ‘அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் டிரம்ப்புடன் இணைந்து எங்களுடைய தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதற்காக - நீதியைப் பெறுவதற்காக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்’ என்று வாக்குறுதியயான்றை அள்ளி வீசியுள்ளார்.

ஏதோ டிரம்ப் அவர்களுடன் தான் தொலைபேசியில் உரையாடியது போன்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு டிரம்ப் கூட்டணி வைத்திருக்க இணங்கியிருக்கின்றார் என்ற பாணியிலும் சம்பந்தர் கூறியிருப்பதானது சிவாஜிலிங்கத்தின் தேங்காய் உடைப்பு அரசியலை மிஞ்சி நிற்கின்றது. உண்மையில் டிரம்ப் அவர்களின் தேர்தல் வெற்றி யாருக்கு அனுகூலமானது? தமிழர்களுக்கா? அல்லது சிங்களவர்களுக்கா? ரொனால்ட் றீகன், ஜோர்ஜ் புஷ் சீனியர், பில் கிளின்ரன், ஜோர்ஜ் புஷ் ஜூனியர் போன்ற அமெரிக்க அதிபர்களில் ஆட்சியில் ஈழத்தீவில் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் இடையூறாகக் கருதப்பட்டது.

இதன் காரணமாக ஜூனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தனா தொடக்கம் மகிந்த ராஜபக்ச வரை அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகளாகத் திகழ்ந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா துணை நின்றது. இதே கொள்கையையே பராக் ஒபாமாவை அதிபராகவும், கிலாரி கிளின்ரன் அவர்களை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் கொண்ட அமெரிக்க அரசு 2009 தை 20 முதல் வைகாசி 18 வரை பின்பற்றியது. எப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்ற நம்பிக்கை அமெரிக்காவிற்கு ஏற்பட்டதோ, அன்றுடன் இந்தக் கொள்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை அரை மனதுடன் பின்பற்றிய மகிந்தர் அன்று முதல் ஒபாமா - கிலாரி தலைமையிலான அமெரிக்க அரசின் எதிரியாக மாறினார். மகிந்தரை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றி விட்டு அவரது இடத்திற்கு ஈழத்தீவில் திறந்தவெளிப் பொருண்மியப் கொள்கைகளின் காவலன் என்று கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை அமர்த்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது. அக்கணமே தமிழர்கள் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகளானார்கள்.

தமிழர்களுக்காக அடுத்தடுத்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானங்களைக் கொண்டு வந்தது. இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த பாரதூரமான கொடூரங்களையும், பன்னாட்டு சட்ட மீறல்களையும் விசாரணை செய்வதற்கென்று ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் செயலகத்தின் தலைமையில் பன்னாட்டு மனித உரிமை விசாரணை ஒன்று நடந்தேறுவதற்கும் அமெரிக்கா அனுசரணை வழங்கியது. இதெல்லாம் மகிந்தர் ஆட்சிக் கட்டில் அமர்ந்திருந்த வரைதான் நடந்தது. எப்போது சிங்கள தேசத்தின் ஆட்சிப் பீடத்திலிருந்து மகிந்தர் தூக்கியயறியப்பட்டு, அவரது இடத்திற்கு ரணிலை பிரதமராகவும், மைத்திரியை அதிபராகவும் கொண்ட அரசாங்கம் சிம்மாசனம் ஏறியதோ, அக்கணமே தமிழர்கள் நட்டாற்றில் கைவிடப்பட்டார்கள்.

அத்தோடு, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக பன்னாட்டு நீதி விசாரணை என்ற கதை சுருங்கி, உள்நாட்டு நல்லிணக்கப் பொறிமுறையாகியது. ஒருவேளை கிலாரி அவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் இதே நிலைதான் நீடித்திருக்கும். முதலாளித்துவத்தின் தாங்கு சக்தியாகத் திகழும் திறந்தவெளிப் பொருண்மியச் சூழலுக்கு அடிப்படையாகத் திகழ்வது மனித உரிமைகள், தனிமனித சுதந்திரம் (பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவை), சட்ட ஆட்சி, சனநாயக ஆட்சிமுறை ஆகியவையாகும். இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவும், ஏனைய மேற்குலக நாடுகளும் நடைமுறைப்படுத்தி வரும் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டவர் என்ற வகையில், ஈழத்தீவில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளும், தனிமனித சுதந்திரமும், சட்ட ஆட்சியும், சனநாயக ஆட்சிமுறையும் பேணப்பட்டாலே ஒழிய, முதலாளித்துவத்தின் மேம்பாட்டை உறுதி செய்ய முடியாது என்ற கருத்து கிலாரி அவர்களுக்கு உண்டு.

இந்த வகையில் மகிந்தரின் காலத்தில் நடைமுறையில் இருந்தமை போன்ற அடக்குமுறை ஆட்சியை ஒரு வேளை மைத்திரியோ, அன்றி ரணிலோ ஈழத்தீவில் தொடர முற்பட்டிருந்தால், அது கிலாரி அவர்களின் ஆட்சியில் அமெரிக்காவின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறான அடக்குமுறை ஆட்சி தீவிரமடைந்து, ஈழத்தீவில் திறந்தவெளிப் பொருண்மியச் சூழலுக்கும், முதலாளித்துவ பொருண்மிய மேம்பாட்டிற்கும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தால், மகிந்தரைக் கையாண்ட அதே பாணியிலேயே ரணிலையும், மைத்திரியையும் கிலாரியின் தலைமையிலான அமெரிக்கா கையாண்டிருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் மீண்டும் தமிழர்கள் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகளாகியிருப்பார்கள்.

அவ்வாறு அல்லாது கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்லாட்சியின் பெயரில் ரணில் - மைத்திரி அரசாங்கம் பின்பற்றி வரும் உதட்டளவிலான மிதவாத அணுகுமுறை ஈழத்தீவில் தொடர்ந்திருந்தால் தமிழர்கள் மெல்ல மெல்ல கிலாரியின் தலைமையிலான அமெரிக்க அரசால் கைவிடப்பட்டிருப்பார்கள்.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியீட்டியிருக்கும் டிரம்ப் அவர்கள், திறந்தவெளிப் பொருண்மியத்தை அமெரிக்காவின் சாபக்கேடாகக் கருதுபவர். அமெரிக்காவில் நிலவும் வேலை வாய்ப்பு நெருக்கடி, பொருண்மிய சரிவு நிலை போன்றவற்றிற்குத் திறந்தவெளிப் பொருண்மியச் சூழலே காரணம் என்று கருதுபவர் டிரம்ப். அத்தோடு, சனநாயகத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் ஏனைய உலக நாடுகளுடன் முரண்பாடான போக்கை அமெரிக்கா கைக்கொள்வது தவறான அணுகுமுறை என்பது டிரம்ப் அவர்களின் கருத்து.

முதலாளித்துவத்தை மேம்படுத்துவதற்கு, மனித உரிமைகளும், தனிமனித சுதந்திரமும், சட்ட ஆட்சியும், சனநாயக ஆட்சிமுறையும் அனாவசியமானது என்பது அவரது கருத்து. அவரைப் பொறுத்தவரை அமெரிக்கா மீண்டும் பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் வலிமை மிக்க நாடாக வளர வேண்டும். அதற்காக எந்த விலை கொடுப்பதற்கும் அவர் தயாராக இருக்கின்றார்.

இது ரணில்- மைத்திரி அரசாங்கத்தைப் பொறுத்தவரை மிகப்பெரும் வரப்பிரசாதம். அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கத்தையும், பொருண்மிய மேலாதிக்கத்தையும் எவ்வித நிபந்தனையும் இன்றி ரணில் - மைத்திரி அரசாங்கம் ஏற்றுக் கொண்டாலே போதும். எதிர்காலத்தில் எந்த விதமான மனித உரிமை மீறல்களில் மைத்திரி - ரணில் அரசாங்கம் ஈடுபட்டாலும், தனிமனித சுதந்திரத்திற்குப் பங்கம் விளைவித்தாலும், மகிந்தரின் பாணியில் சட்ட ஆட்சியையும், சனநாயக ஆட்சிமுறையின் கட்டுமாணங்களைப் பலவீனப்படுத்தினாலும், அவற்றையிட்டு டிரம்ப் கவலை கொள்ளப் போவதில்லை. டிரம்ப் அவர்களைப் பொறுத்தவரை வெள்ளை மாளிகையில் தான் கொலுவிருக்கும் காலத்தில் ஈழத்தீவை எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும், அது எவ்வளவு கொடூரமான அரசாங்கமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை: அது ரணில்-மைத்திரியின் அரசாங்கமாகவும் இருக்கலாம் அல்லது வேறு அரசாங்கமாகவும் இருக்கலாம். அந்த அரசாங்கம் அமெரிக்காவின் பொருண்மிய - இராணுவ மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டாலே போதும். அவ்வளவுதான்.

ஆக இனி சிங்கள ஆட்சியாளர்களுக்கு இப்போதிருப்பதை விடத் தித்திப்பான காலம்தான். ரணில்  - மைத்திரி தம்பதிகள் ஆட்சியில் இருந்தாலும் சரி, வேறு எவர் ஆட்சியில் இருந்தாலும் சரி, அவர்கள் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளாத வரையில் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. இனித் தமிழர்களை அவர்கள் காலில் போட்டு மிதிக்கலாம். தமிழர்களை சிங்களவர்கள் கொன்றுகுவித்தால் இனி அமெரிக்காவிடம் இருந்து கண்டனக் குரல் எழுமா என்பதுகூடச் சந்தேகத்திற்கிடமானதே. ‘நல்லிணக்கமா? அது என்ன? அரசியல் தீர்வா? அப்படியென்றால் என்ன?' என்றெல்லாம் இனி சம்பந்தரைப் பார்த்து ரணிலும், மைத்திரியும் எள்ளி நகையாடலாம்.

அப்படியிருக்கும் பொழுது டிரம்ப் அவர்களுடன் இணைந்து தமிழர்களின் உரிமைகளையும், அவர்களுக்கான நீதியையும் பெற்றுத் தரப் போவதாக சம்பந்தர் அவர்கள் கூறியிருப்பதை எண்ணித் தமிழர்கள் சிரிப்பதா? அழுவதா?

நன்றி: ஈழமுரசு