தமிழர்கள் மீதான சித்திரைவதைக்கு அவுஸ்ரேலியா உதவியது

புதன் ஓகஸ்ட் 05, 2015

அகதி அந்தஸ்த்து கோருவோர் மீது இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

 

இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு அவுஸ்திரேலிய பிராந்திய பொலிஸார் உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கை அகதி அந்தஸ்த்து கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியதாகவும் இதனை தடுக்க அவுஸ்திரேலியா இலங்கையுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உபகரணங்கள், வளங்கள் மற்றும் பயிற்சியையும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டதாகத் கூறப்பட்டுள்ளது. தளபாடங்கள் முதல் அதி நவீன உபகரணங்கள் கருவிகள் வரையில் அவுஸ்திரேலிய மத்திய பொலிஸார் வழங்கியுள்ளனர்.  தொலைபேசி தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு தகவல்களை துல்லியமாக பெற்றுக்கொள்ளக்கூடிய அதி நவீன இயந்திரங்களை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது. 

 

தொலைபேசியில் அழிக்கப்பட்ட படங்கள், ஆவணங்களை மீள எடுத்தல், தொலைபேசி பயன்படுத்தப்பட்ட இடத்தை துல்லியமாக கண்டறிதல் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.  2011ம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலிய பொலிஸார், இலங்கை புலனாய்வுப் பிரிவினருக்கு வெள்ளை வான் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இலங்கையில் வெள்ளை வான்களில் கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.