தமிழர் இருப்பை அறுத்த கறுப்பு நாள்!

ஞாயிறு பெப்ரவரி 04, 2018

இன்று சிறிலங்காவின் எழுபதாவது சுதந்திர தினம். ஆனால் ஈழத்தமிழர் வாழ்வில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள். சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்து எழுபது ஆண்டு காலமானாலும் தமிழர் வாழ்வில் கரி நாளாக இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளது.

சிறிலங்காவின் மூவாயிரம் வருட ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று நூலான மஹாவம்சத்திலேயே குறிப்பிட்டது போல பண்டைத்தமிழர் மூதாதையர்களான இயக்கர், நாகர் வழித்தோன்றல்களே இன்றைய ஈழத்தமிழர் ஆவர். வரலாற்றுக்கு முற்பட்ட ஈழத்தினை தங்களது காலனித்துவ ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த போத்துக்கேயர், ஒல்லாந்தர் எங்களது பண்பாட்டு விழுமியங்கள் மீது போர்தொடுக்க, இறுதியாக வந்த ஆங்கிலேயர் எமது ஆழமான அரசியல் கட்டமைப்பினை சிதைத்து, தங்களது நிர்வாக செயல் திறனுக்காக சிங்களம், தமிழ் என்ற இரு வௌ;வேறான தேசிய இனக்குழுமங்களை ஒன்றாக்கியத்திலிருந்து ஆரம்பித்த முரண்பாடு இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கிறது.

1948 மாசி 04
 சுதந்திரத்தின் பின்னான இலங்கை தீவின் அரசியல் ஆதிக்கத்தினை கைப்பற்றிய சிங்களத்தலைவர்கள், பெரும்பான்மையான தங்களுக்கு வாய்ப்பான யாப்பு முறைமைகளை உருவாக்கி கொண்டமையினால் இனமுறுகல்கள் வீரியமடைந்தன. 1958, 1977, 1983 ஆண்டுகளில் நடந்த தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இதன் விளைவாக 1978 இல் தமிழ் தலைவர்கள் சனநாயக வழியில் வட்டுக்கோட்டயில் பிரகடனப்படுத்திய தமிழீழ அறைகூவல், பின்னர் ஆயுத போராடமாக பரிணமித்தது. போரியல் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு கடைசிவரை நடைபெற்ற தமிழர் அறப்போராட்டத்தினை வல்லமைதிப்படுத்திய அனைத்துலகம் இன்று வரை ஈழ தமிழர்களுக்கான நீதியை பெற்று கொடுக்க தவறி விட்டுள்ளது.

எமது தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், விசாரணைகளின்றி சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை அனுபவிப்போர், அரசியற்கைதிகள், தமிழர் காணி அபகரிப்பு, தொடர்ச்சியான சிங்களமயமாக்கல், சிங்கள இராணுவ முற்றுகை, தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சியினை தடுத்தல் கலாச்சார சீர்கேட்டினையும் போதைபொருள் பாவனையினை ஊக்குவித்தல் என பல்வேறு முறைகளில் சிங்கள அரசு இன அழிப்பினை தொடர்ந்துவருகின்றது. எமது மக்கள் தொடர்ந்தும் இராணுவமயமாக்கப்பட்ட சூழலில் வாழ்ந்துவருகின்றார்கள். இது மட்டுமல்ல கட்டாய திருமணங்களைக்கூட சிங்கள இராணுவம் திணிக்கின்றது. இவற்றையெல்லாம் வெளியுலகிற்கு எடுத்துச்சொல்ல வேண்டியது எமது கட்டாய கடமையாகும்.

போர் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழ் மக்கள் தமது கருத்துக்களை கூறமுடியாதளவிற்கு சிங்கள அரசின் 6ம் திருத்தச்சட்டம் தடுக்கின்றது. இன்றும் ஒற்றை ஆட்சி முறையினை வலுப்படுத்தும் யாப்பிணை தமிழர் மீது திணிக்க முயன்று கொண்டிருக்கின்றது. சர்வதேசத்திற்கு உறுதி கூறிய பயங்கரவாத சடட நீக்கல் இன்னமும் செயல்படுத்தவில்லை.

இவ்வாறான சூழ்நிலை தமிழினத்திற்கும் சிங்கள அரசிற்கும் இடையேயுள்ள இடைவெளியினையும், சிங்கள தேசம் தமிழினத்தினை அழிப்பதில் கங்கணம்கட்டி நிற்பதையே கோடிட்டு காட்டுகின்றது. இந்நிலையினை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி இன அழிப்பிற்கு எதிரான சர்வதேச விசாரணையொன்றினை நடாத்துவதற்கான உரத்த குரலை நாம் கொடுக்க வேண்டும்.

உங்களுடன் தேர்தல் காலத்தில் சில கருத்து பரிமாற்றம்…

எம் தேசத்திற்காக தன்னலமற்று தம்முயிர் ஈர்ந்த மாவீர்கள் போராளிகள் உலாவிய இடத்தில் நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம். 2009 வைகாசி மாதத்தின் பின்னரான நிலைமாறு அரசியல் தளம்பல் நிலையில் சிறிலங்காவனுடைய ஆட்சித் தலைமை இப்போது தள்ளாடுகின்றது. நடைபெற இருக்கின்ற சிறிலங்காவின்  உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்களாகிய நாங்கள் மிகவும் சிக்கல் நிறைந்த அரசியல் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்.

எமது பிரச்சனையை ஆராய்வதற்கும், தீர்ப்பதற்கும் பிரத்தியேகமான மனப்பக்குவம் அவசியமானது. சுயநலமற்ற சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட, பந்தபாசங்களிற்கு அடிமையாகாத ஒரு ஆற்றல் தேவை என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப எமது அரசியல் ஆளுமைகளை நாம் தெரிவு செய்வேண்டும்.

வரலாற்றுக் காலம் தொட்டு தமிழினத்தை எதிரிகளால் தோற்கடிக்க முடியாது என்பதையும், எம்முடன் இருக்கின்ற துரோகிகளால் மட்டுமே அது சாத்தியம் ஆனது என்பதையும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். எமது விடுதலைப் போராட்டத்தினை சர்வதேச நாடுகளின் சதி நடவடிக்கைகளின் ஊடாக அமைதியாக்கிய அரசு, தற்போது எமது மக்கள் மீது திட்டமிட்ட, கட்டமைக்கப்பட்ட இன பரம்பல் மாற்றத்தினை நல்லாட்சி எனும் பெயரில் நடாத்திக்கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் பாவனை, மது, மாது, இந்தியதிரைத்துறை கவர்ச்சி என்ற பல வழிகளில் எமது இளைய சமுதாயத்தினை சிந்தனை மழுங்கடிப்பு மூலம் சுயசிந்தனையற்ற, தற்துணிவு, போராட்ட குணம், தற்சார்பு பொருளாதாரம் என்பவற்றை விட்டகற்றி தங்கிவாழும் சமுதாயமாக மாற்றி நிற்க முயல்கின்றது. இதற்கு எமது சில தமிழ் தலைமைகளும், அறிவு சார் அதிகாரத் தமிழ் ஆளுமைகளும் துணை போவதென்பது எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகின்றது.

வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் பெரும்பான்மையின கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நாங்கள் உரிமையுடன் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். எமது நிலப்பரப்பில் சிங்கள கட்சிகளுக்கு கிடைக்கும் அதிகாரமானது அரசினுடைய சர்வதேச பரப்புரைகளுக்கு சாட்சியமாகி விடாது, எமது மக்கள் தீர்மானிப்பார்கள் என்று நம்புகின்றோம்.

எமது சுயநிர்ணயம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை ஏற்று மக்கள் மத்தியில் தற்போது தமிழத்; தேசியப் பேரவை இதய சுத்தியோடு சனநாயக வழியில் களமாடுகின்றது. டென்மார்க் புலம்பெயர் தேச கட்டமைப்பான நாங்கள் ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் அனைத்துலகரீதியில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் வேளையில், எமது அரசியல் செயற்பாடுகளின் விரிவாக்கமாக தாயக அரசியல் செயல்பாடுகளையும் உற்று நோக்குகின்றோம். அதற்கான சூழ்நிலை மாற்ற நிகழ்விற்கான அத்தியாயமாக நாங்கள் இந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது தமிழ் தேசிய பேரவையை,  எமது உயரிய இலட்சிய கோரிக்கைக்கு அண்மையாக தாயகத்தில் பிரதிநிதுத்துவதத்தை பேணும் சக்தியாக கான்கின்றோம். 

இலட்சிய பற்றுறுதி கொண்ட மனிதர்கள் மரணிக்கலாம். ஆனால் அந்த அறம் சார்ந்த இலட்சியங்கள் காலம் கடந்தும் உண்மைத்தன்மை காட்டிநிற்கும், என்பதற்கு 200 ஆண்டுகளிற்கு மேலாக போராடி தமக்கென்ற தேசம் அடைந்த இஸ்ரவேல் நாட்டினை நாம் உதாரணமாக கொள்ளலாம். இன்னமும் மேன் மக்கள் உடன்படிக்கைகள் மூலம் தாமும் தன்னாட்சியாக திகழ்கின்ற கனடா-கியுபெக், மிகச்சிறிய மக்கள் தொகை கொண்ட ஆக்கிலாந்து¸ சுவீடனில் இருந்து நாடானது. இவ்வாறு எமக்கான முன்னுதாரணங்களாக உலகமெங்கும் பிரசவிக்கப்பட்ட நாடுகள் இருக்கின்றன.
எனவே எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்களே, வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி என்ற மாயைச் சொல்லுக்கு அப்பாற்பட்டு, ஒற்றையாட்சி அடிப்படையிலான அரசியல் அமைப்பாக்கத்தினை உருவாக்கும் அரசியல் கட்சிகளையும், அதற்கு ஊசாத்துணையாக வந்து வாக்குக் கேட்கும் தமிழ் கட்சிகளை நீங்கள் நிராகரித்து, தமிழ்த் தேசியப் பேரவைக்கு (ஈருருளி/சைக்கிள் சின்னம்) உங்கள் வாக்குகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
டென்மார்க்