தமிழர் உரிமைப் போராட்ட நியாயத்தை தெற்குக்கு புரியவைக்க முற்பட்டவர் சிவராம்

திங்கள் மே 02, 2016

ஈழத் தமிழின உரிமைப் போராட்ட வரலாற்றில் ஊடகப் பரப்பில் தவிர்க்க முடியாது நினைவுக்கு வருகின்ற ஒருவர் ‘தராக்கி' என்ற புனைபெயர் கொண்ட டி. சிவராம்.

தமிழின உரிமைப் போராட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் பலி கொள்ளப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு முன்னோடியாக, கவர்ந்திழுக்கும் சக்தியாக அமைந்தவர் சிவராம். அவரது இடைவெளி ஊடகப் பரப்பில் மாத்திரமன்றி, இன உரிமைப் போராட்டத் தளத்தில் கூட பாரியதொரு வெற்றிடத்தை விட்டு வைத்திருக்கின்றமையை மறுப்பதற்கில்லை.

இத்தனைக்கும் சிவராம் மரபு வழி வந்த ஊடகவியலாளர் அல்லர். ஊடகப் பின்னணி உடைய குடும்பத்தில் அவர் பிறக்கவும் இல்லை, ஊடகவியலாளராவதே தன் வாழ்வின் இலட்சியம் என நினைத்திருக்கவும் இல்லை.

மேல் மத்திய தர வர்க்கத்தில் பிறந்த ஒருவருக்கு இருக்கக் கூடிய வழக்கமான ஆசாபாசங்களே அவருக்கும் இருந்தன. படித்துப் பட்டம் பெற்று, ஒரு நல்ல பதவியில் அமர்ந்து, சமூக அங்கீகாரத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணமே அனைவரையும் போன்று அவருக்கும் இருந்தது.

எனினும் இலங்கைத் தீவில் தாண்டவமாடிய பேரினவாதம் உணர்வுள்ள தமிழர்களை ஆயுதமேந்திப் போராடத் தூண்டிய காலகட்டத்தில் சிவராமும் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அவரது நண்பர் குழாமிடம் இருந்து பெற்றுக் கொண்ட இலக்கியம் மீதான காதல், கொடுமை கண்டு பொங்கும் குணம், போலிகளைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்ற உத்வேகம், இயல்பாகவே அவரிடம் காணப்பட்ட வாசிப்புத் திறன் ஆகியவை அவரை ‘மட்டக்களப்பு வாசகர் வட்டத்துடன்’ இணைத்தன.

80 களின் முற்பகுதியில் மட்டக்களப்பின் சிந்தனைப் போக்கை பாரம்பரிய வழிமுறைகளில் இருந்து மாற்றியமைப்பதில் ‘வாசகர் வட்டத்தின்’ பங்களிப்பு காத்திரமானது. இக்காலப் பகுதியில் அவருக்கு அறிமுகமான இடதுசாரி இலக்கியங்களும் தத்துவங்களும் அவரது அரசியல் போக்கை கணிசமாக நிர்ணயித்தன எனலாம்.

எதனையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க நினைக்கும் அவரது சுபாவம் ஆயுதப் போராட்ட வரலாற்றிலும் எதிரொலித்தது. எனினும், அவரின் நம்பிக்கை வெகு விரைவிலேயே பொய்த்துப் போனது.

தான் நம்பிய விடுதலை இயக்கம் தான் எதிர்பார்த்த விடுதலையைப் பெற்றுத் தரப் போவதில்லை என்பதை உணர்ந்த போதில் அவர் மிகவும் நொருங்கிப் போனார்.

அதன் பின்னான காலகட்டம் வாசிப்பு ஒன்றை மாத்திரமே அவரின் தேர்வாக விட்டு வைத்திருந்தது. வாசிப்பின் மூலம் கிடைத்த அறிவையும், தனது ஆங்கிலப் புலமையையும் வைத்துக் கொண்டு அவர் ஒரு ஊடகப் போராளியாகக் களத்தில் குதித்தார்.

இலங்கைத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தின் நியாயம் தமிழர்களுக்கு மாத்திரமே புரிந்திருந்தது. ‘அது தவிர்க்க முடியாத போராட்ட மார்க்கம், அதற்கூடாக மாத்திரமே தமிழ் மக்களின் பறிபோன இறைமையை மீட்டெடுக்க முடியும்” என்று அன்றைய காலகட்டத்தில் உணர்ந்த தமிழர்கள், தூரதிர்ஷ்டவசமாக அதை ஏனையோருக்கு – குறிப்பாக சிங்கள மக்களுக்கு தர்க்க நியாயங்களுடன் புரிய வைக்கத் தவறியிருந்தனர்.

இந்த அவசியப் பணியைக் கொழும்பில் இருந்து கொண்டே சிங்களவர்களுக்கும் புரியும் மொழியிலேயே செய்ய முடிந்தமை சிவராமின் சாமர்த்தியமே. அவரின் ஆங்கிலப் புலமையும், தர்க்க நியாயங்களை அவர் முன்வைக்கும் விதமும் பேரினவாதிகளால் அவரது எழுத்துக்குப் பதிலளிக்க முடியாத நிலையைத் தோற்றுவித்தது.

90 களின் நடுப்பகுதியில் தன்னந் தனியனாக அவர் ஆரம்பித்த அப்பணியில், பின்னாளில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலர் கைகோர்த்துக் கொண்டாலும் கூட, இன்றும் வெற்றிடமாக உள்ள அவரின் இடத்தை நிரப்ப எவருமே இல்லாமை மாபெரும் சோகமே.

அதேவேளை, ‘சிவராமின் வாரிசுகள், அவரின் பாசறையில் வளர்ந்தவர்கள், சிவராமை முன்னோடியாகக் கொண்டு பணிபுரிபவர்கள்” எனத் தம்மைத் தாமே கூறிக் கொள்வோர் பலர், சிவராமின் தேசப்பற்றைக் கொச்சைப்படுத்துபவர்களாகவும், அவரின் ஊடகப் பணிக்கு அபகீர்த்தி ஏற்படுத்துபவர்களாகவும் விளங்குவதைக் காணும் போது மனம் பொறுக்க முடியாதிருக்கிறது.

பல்கலைக்கழகப் படிப்பைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமல், இனத்தின் உரிமையைப் பற்றி சிந்தித்துப் புறப்பட்ட சிவராம், ஊடகத்துறையில் தான் காட்டிய திறமையால் உலகப் பல்கலைக்கழகங்களில் கூட உரையாற்ற அழைக்கப்பட்டமை அவரது அசாத்தியத் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழ் ஊடகப் பரப்பை விட்டு சிவராம் மறைந்து பதினொரு வருடங்கள் ஆகின்றன. எனினும் அவரின் எழுத்துகளின் வீரியமும், அதில் அவர் தெரிவித்த தீர்க்கதரிசனமும் இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பதுவும், காலத்தால் மறக்கப்படாது, மறைக்கப்பட முடியாது இருப்பதுவும் அவரின் படைப்பாற்றலின் வெற்றியே அன்றி வேறில்லை.

தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் மாத்திரமன்றி, அவருடன் பழகிய சிங்கள மற்றும் ஏனைய மொழி ஊடகவியலாளர்கள் மத்தியிலும் கூட சிவராமின் வெற்றிடம் இன்றும் உணரப்படுவது அவரது பணிக்குக் கிடைத்த மகத்தான வெற்றியே.

ஊடகப் பணியென்பது ‘வயிறு வளர்ப்பதற்கான தொழில்களுள் ஒன்று’ என இருந்த நிலையை மாற்றி, தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கதாநாயக நிலையை ஏற்படுத்திய கர்த்தா அமரர் டி. சிவராமே! அந்தக் கதாநாயக நிலையை பயன்படுத்தி எத்தனையே பேர் புகழையும், பணத்தையும், வேறு பல விடயங்களையும் சம்பாதித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆனால், இதைப் போன்று பல மடங்கு சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்த போதிலும், தனது சுயத்தை இழக்காமல் வாழ்ந்து காட்டியவர் சிவராம்.

சிங்களப் பேரினவாதத்துக்கு அவரது பணி மிகப் பாரிய தடைக்கல்லாக இருந்தது. எனவே, அவரைத் தட்டிப் பணிய வைத்து விட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அவற்றை முன்கூட்டியே ஊகித்திருந்த சிவராம், தன்னை இலகுவில் நெருங்காத வகையில் முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார்.

இந்த வகையில் அவரது முன்முயற்சியால் உருவான ஊடக அமைப்பான இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், அரசியல் அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை அவரது உழைப்பினதும் தீர்க்கதரிசனத்தினதும் விளைவுகளே.

இந்த அமைப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிதளவேனும் அவரை நினைவில் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. இது மிகவும் வேதனை தருவதாக உள்ளது. பிறக்கும் மனிதர்கள் யாவருமே இறக்கின்றார்கள். ஆனால், விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசிலர் மாத்திரமே இறந்தும் உயிர் வாழ்கின்றனர்.

அந்த வகையில், இன்றும் கூட ஊடகத் துறையில் நுழைய விரும்பும் தமிழ் இளையோருக்கும், ஏற்கனவே அத்துறையில் செயற்படும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் சிவராம் இறந்தும் உயிர்வாழும் ஒரு மேதையாவார்.

சிவராமின் இழப்பை நினைவு கூரும் ஊடக நண்பர்கள், அவரின் கனவை நனவாக்க தமது நேரத்தில் ஒரு சிறு பகுதியையாவது மனப் பூர்வமாகச் செலவிடுவார்களாயின் அதுவே அந்த நினைவு கூரலை அர்த்தமுடையதாக்கும்.

ஏறாவூர் சண் தவராஜா (சுவிற்சர்லாந்து)