தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள் - டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்

Sunday January 14, 2018

மதங்களை கடந்து உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை இனத்தால் ஒன்றினைக்கும் தனிப்பெரும்  திருநாளாக கொண்டாடப்படுவது தைப்பொங்கல்  திருநாளாகும்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பதிற்கு இணங்க, பிறந்திருக்கும் புதிய தமிழ்  புத்தாண்டில் சுற்றம் சூழ, உறவுகள் கலந்து, விருந்துண்டு பொழுது களிக்கும் இத்திருநாளில் உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல் வாழ்த்துகளை டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றது.      
         
தமிழர் புத்தாண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகள் கூட்டிய வகையில் நெட்டாண்டின் தேவைகருதி உருவாகின்றுது. தமிழர் மாண்பின் தைப்பொங்கல், திருவள்ளுவர் ஆண்டாக கடைப்பிடிக்கின்றவகையில் இந்த ஆண்டு எமக்கான 2049ஆவது ஆண்டாக மலர்கின்றது.

பொங்கல் திருநாளிற்கு உழவர் திருநாள் என்றும் சிறப்புண்டு. உலகிற்கு உணவு போடும் உழவர்கள் தங்கள் நன்றியை சூரியனுக்கு  தெரிவிக்குமுகமாக மகிழ்ந்து கொண்டாடும் பண்டிகை நாளாகும்.

அதிகாலை வேளையில் முற்றத்தில் கோலமிட்டு புதுப்பானையை அடுப்பேற்றி, வயல் சென்று அரித்து எடுத்த புத்தரிசி இட்டு, பால் பொங்கி வழிந்தோட, எம் துன்பமெல்லாம் இன்றோடு போக, புதுத் தமிழ் தேசிய வசந்தம் எம் இல்லம் புக பொங்கலோ பொங்கல் என்று பொங்கிப் படைத்து கொண்டாடும் திருநாள்.

நாம் வாழும் டென்மார்க் நாட்டில் தமிழர்கள் நாங்கள் தனித்துவ கலாச்சார வழித்தோன்றல்களாகத் திகழ்கின்றோம். ஏனைய சில புலம்பெயர் நாடுகளில் காணப்படும் தமிழர் சிறப்புறு நிகழ்வாக அந்த நாட்டு அரசுகளினால் அங்கீகரிக்கப்பட்டது போல, இந் நாட்டிலும் தமிழர் நாம் "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" எனும் பழமொழிக்கேற்ப ஒரு திரள் முதிர்ச்சியாக இந்நாட்டு அரசுக்கு வாழ்த்துகளோடு கூடிய கோரிக்கையையும் வேண்டி நிற்போம்.

தமிழீழ தமிழ்ச் சமூகம் டென்மார்க் நாட்டின் செழுமை மிகுசிறப்பம்சமாக திகழ்கின்ற சம நேரத்தில் எமது தாயக நிலப்பரப்பின் உறுதிப்பண்பை காத்து நிற்கும் எம் மக்களிற்கு எப்போதும், எல்லா விதமான உதவிகளோடும் கரம் கோற்போம் என்று இத் திருநாளில் உறுதியோடு நல் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

மீண்டும் ஒருமுறை உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல் வாழ்த்துகளை டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றது.

பொங்கலோ பொங்கல்

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
டென்மார்க்