தமிழர் வரலாற்று எச்சங்கள் அழிக்கப்படுகின்றனவா?

May 25, 2018

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்ற பிரதேசத்தில், அதனை அழிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொள்கின்றனரா என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த வரலாற்று எச்சங்கள் காணப்படும் காட்டுக்குள் கடந்த சில தினங்களாக இராணுவத்தினர் மாலை வேளைகளில் சென்று வருவதனை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். அத்தோடு கடந்த செவ்வாய்க்கிழமை (22) இராணுவ அதிகாரிகள் சகிதம் ஒரு குழுவினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று அவதானித்த போது, பெருங் கற்கால வரலாற்று எச்சங்களான கருங்கல் தூண்கள், மற்றும் செங்கல் மேடுகள் உள்ள பகுதியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதனை கண்டுள்ளனர்.

“குறித்த பிரதேசம் தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமானது, இங்கு அகழ்வு பணிகள் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது” என அறிவித்தல் பலகையும் அங்கு உள்ள நிலையில் இராணுவத்தினர் அங்கு அகழ்வுப் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன் பௌத்த துறவி ஒருவருடன் இராணுவத்தினர் சில தடவைகள் குறித்த பிரதேசத்துக்கு வருகைதந்து பார்வையிட்டு சென்றதாக தெரிவிக்கும் ஊர் மக்கள் அப்போது தாங்கள் இதனை பெரிதுபடுத்தவில்லை என்றும், ஆனால் இந்த இடங்களில் காணப்படுகின்ற தமிழர் வரலாற்று எச்சங்களை அகற்றிவிட்டு அந்த இடங்களில் பௌத்த பண்பாட்டை  பிரதிபலிக்கும் பொருட்களை புதைக்கும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனரா எனவும் தமக்கு பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தம்மால் காட்டின் உட்பகுதிக்கு சென்று பார்வையிட முடியாத நிலை உள்ளமையால் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஊற்றுப்புலம் கிராமத்தில் ஊற்றுப்புலம் என பெயர் வர காரணமான வற்றாத அதிசய கிணறு, கருங்கல் தூண்கள், பல நூற்றாண்டுகள் பழமையான செங்கல் மேடுகள், போன்றன கிராமத்தின் எல்லை புறத்தில் காணப்படுகிறன. கிராமத்தின் காட்டுப்பகுதிக்குள் மேலும் பல வரலாற்று எச்சங்கள் இருக்கலாம் என  கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். இதுவரை காலமும் ஊற்றுப்புலம் கிராமத்தின் காடுகளுக்குள் சென்று மக்கள் கூறுவது போன்று ஏதேனும் வரலாற்று எச்சங்கள் உள்ளனவா என அடையாளப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை

இந்த நிலையில் இராணுவத்தினரின் இச் செயற்பாடுகள் தமது மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று எச்சங்களை இல்லாது அகற்றிவிட்டு  பௌத்த வரலாற்று எச்சங்களை புதைத்துவிட்டு இது பௌத்த பண்பாட்டு பிரதேசங்கள் இங்கு பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன என எதிர்காலத்தில் தெரிவித்து எமது வரலாற்றையே மாற்றிவிடக்கூடிய நிலைமைகளை இராணுவத்தினர் திட்டமிட்டு மேற்கொள்கின்றனரா எனவும் பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி June 01, 2018

நான்தான்பா ரஜினிகாந்த் என்ற ஹாஷ்ராக் ரெண்ட் முதல் ...போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற சீற்றங்கள் வரை நானாவித செய்திகள் கிட்டும் பின்னணியில் மீண்டும் ஒரு நாள்!

வெள்ளி June 01, 2018

மட்டு - அம்பாறை மாவட்டத்தின் எல்லை பகுதியில் வயல்காணிகளிலும் மேட்டுநிலக் காணிகளிலும் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்...