தமிழின அழிப்பு நினைவெழுச்சி நடவடிக்கை வாரம்

திங்கள் பெப்ரவரி 29, 2016

எமது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய உறவுகளே,

தமிழீழ தாயகத்தில் எமது உறவுகள் எதிர்நோக்கும் வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடியும், கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழீழ தேசம் எதிர்கொள்ளும் இனவழிப்பிற்கு நீதி வேண்டியும், தமிழீழ தேசத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு அனைத்துலக ஆதரவு கோரியும் வரும் மே மாதம் பிரித்தானியாவில் தொடர் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் முடிவு செய்துள்ளோம்.

மே 10ஆம் நாளன்று தொடங்கப்படும் எமது அரசியல் நடவடிக்கைகள், ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று மே 18 அன்று இலண்டனில் மாபெரும் எழுச்சிப் பேரணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்படும்.

2009 மே 18இற்குப் பின்னரான கடந்த ஏழாண்டு கால சூழமைவில் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் செயற்பாடுகள் எத்தனையோ இருந்தும் அவற்றை முன்னெடுப்பதற்கென்று எம்மால் உருவாக்கப்பட்ட உப அமைப்பு தனது பணியில் இருந்து தவறியுள்ளது. இவ்வாறான பின்புலத்தில் நிலைமையை சீர்செய்து, இலட்சிய உறுதியுடனும், கொள்கைப் பற்றுடனும் தமிழீழ தேசத்தின் அரசியல் வேணவாவை முன்னெடுக்கும் பொறுப்பு எம்மீது மீண்டும் வீழ்ந்துள்ளது.


அன்பார்ந்த உறவுகளே,

பிரித்தானியாவில் ஏறத்தாள நான்கு தசாப்தங்களாக இயங்கும் தமிழ்த் தேசியக் கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடாகத் திகழ்வது எமது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாகும். 2006ஆம் ஆண்டின் இறுதியில் பிரித்தானியாவில் கருக்கொள்ளத் தொடங்கிய அரசியற் சூழலைக் கருத்திற் கொண்டு, எமது செயற்பாடுகளைப் பரவலாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு எழுந்தது. இதன் விளைவாக எமது உப அமைப்பாகப் பிரித்தானிய தமிழர் பேரவை என்ற அமைப்பை நாம் உருவாக்கினோம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவாக இயங்குவதற்காகவே பிரித்தானிய தமிழர் பேரவையை நாம் நிறுவினோம். இவ் உப அமைப்பின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதற்காக அதன் நிர்வாக பீடத்தில் எமது பிரதிநிதிகள் நெறியாளர்களாக நியமிக்கப்பட்டனர். எனினும் 2009 மே 18இற்குப் பின்னரான சூழமைவைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் சிலர், அதன் நிர்வாகப் பொறுப்புக்களைக் கையகப்படுத்தி இப்பொழுது அதனை ஏறத்தாள ஒரு தனிநபரின் குடும்ப அமைப்பாக மாற்றியுள்ளனர். அத்தோடு தமிழீழ தேசத்தின் அரசியல் வேணவாவாக விளங்கும் தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டை சிதைக்கும் வகையிலான நகர்வுகளையும் மிகவும் கனக்கச்சிதமான முறையில் இத்தனிநபர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாக 2014ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவதற்கு இவர்களால் தடைவிதிக்கப்பட்டது. எனினும் நிகழ்வு நடைபெற்ற இடத்தில் கூடி நின்ற மக்கள் பொங்கியெழுந்து இதனை முறியடித்ததோடு, தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வை சரியான திசையில் நகர்த்துவதற்கு வழிவகை செய்தனர்.

இதனால் மூக்குடைபட்டுப் போன பிரித்தானிய தமிழர் பேரவையின் நிர்வாகிகள், இதற்குப் பழிவாங்கும் முகமாகக் கடந்த ஆண்டு இலண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள் நிகழ்வில் மக்களால் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தும் முகமாக நிகழ்வு நடைபெற்ற இடத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தினர். இதன் காரணமாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள் நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை ஏற்ற முடியாத துயர நிலை ஏற்பட்டது. 

எமது பாசத்திற்குரிய உறவுகளே,

தமிழினத்தின் அரசியல் வேணவாவாக விளங்கும் தமிழீழ தனியரசுக் கோட்டிபாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது தமிழீழ தேசியக் கொடியாகும். நாம் ஒரு தனித்துவமான தேசம், எமக்கென்றொரு தனியான தாயகம் உண்டு, தனியான தாயகத்தைக் கொண்ட தனித்துவமான தேசிய இனம் என்ற வகையில் பிரிந்து சென்று தனியரசை அமைக்கும் தன்னாட்சியுரிமைக்கு நாம் உரித்துடையவர்கள் என்பதைப் பறைசாற்றுவது எமது தமிழீழ தேசியக் கொடியாகும். அத்தோடு எமது தேசத்தின் தொன்மையையும், வரலாற்றுச் சிறப்பையும், எமது மாவீரர்களின் ஈகங்களையும், மக்களின் வீர வரலாற்றையும் பிரதிபலிப்பதும் எமது தமிழீழ தேசியக் கொடியாகும். ஒரு தேசத்தின் இறைமையின் பிறப்பிடமாக விளங்கும் மக்களாலும், அவர்களைக் காக்கும் படை, ஆட்சி, தலைவன் போன்றோராலும் உயர்வான இடத்தில் வைத்துப் போற்றப்படுவது தேசியக் கொடியாகும். மக்களும், மாவீரர்களும், ஆட்சியாளர்களும், தலைவனும் தலைவணங்கி நின்று மரியாதை செய்வது தமது தேசியக் கொடிக்கே. 

அவ்வாறு உயர்வான இடத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய எமது தேசியக் கொடியை முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் ஏற்றுவதற்கு தொடர்ச்சியாகத் தடை விதித்ததன் மூலம் தமிழீழ தேசத்திற்கு மிகப்பெரும் வரலாற்றுத் துரோகத்தைப் பிரித்தானிய தமிழர் பேரவை புரிந்துள்ளது. இதற்குத் தமிழீழ தேசியக் கொடிக்குப் பிரித்தானியாவில் தடை இருப்பதாகக் கூறிப் பொய்யான பரப்புரைகளை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொள்கின்றது.

பிரித்தானியாவின் எந்தவொரு சட்டத்திலும் தமிழீழ தேசியக் கொடிக்குத் தடை விதிக்கப்படவில்லை என்பதை இவ்விடத்தில் நாம் உறுதியாகக் கூற விரும்புகின்றோம். மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் சட்டநிபுணர்களுடன் ஆலோசனைகளை நிகழ்த்திய பின்னரே இதனை நாம் தெரிவிக்கின்றோம்.

28.02.2001 அன்று பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் தமிழீழ தேசியக் கொடியின் நிலை தொடர்பாக மக்களிடையேயும், பிரித்தானியக் காவல்துறையினர் மத்தியிலும் குழப்பம் நிலவியது உண்மையே. எனினும் இதற்குக் காரணம் தமிழீழ தேசியக் கொடியைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியாக எமது மக்களில் சிலரும், பிரித்தானிய காவல்துறையினரும் தவறாக வியாக்கியானம் செய்து கொண்டமையாகும்.

எனினும் 2009 ஏப்ரல், மே மாதங்களில் தமிழீழத் தேசியக் கொடியை ஏந்திப் பிரித்தானியாவில் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்த எமது உறவுகள், அதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஐயம்திரிபு இன்று நிரூபித்தார்கள். இதன் விளைவாக 2009 மே மாதத்திலிருந்து பிரித்தானியாவில் நடைபெற்ற சகல நிகழ்வுகளிலும் தமிழீழ தேசியக் கொடியை ஏந்திச் செல்வதற்கு பரிபூரணமான ஒத்துழைப்பைக் காவல்துறையினர் வழங்கி வருகின்றனர்.

மண்டபங்களில் நடைபெறும் நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, பொது இடங்களில் நடைபெறும் எழுச்சிப் பேரணிகள், கவனயீர்ப்புப் போராட்டங்களாக இருந்தாலும் சரி, கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழீழ தேசியக் கொடியை ஏந்திச் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்பதை இந்நிகழ்வுகளில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் தெரியும்.

யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது, தமிழீழ தேசியக் கொடிக்குப் பிரித்தானியாவில் தடை இருப்பதாகப் பொய்யுரைப்பதன் மூலம் யாரைத் திருப்திப்படுத்துவதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை முற்படுகின்றது? என்ற கேள்வி இன்று பிரித்தானியாவாழ் தமிழர்களிடையே எழுந்திருக்கின்றது.

அன்பார்ந்த உறவுகளே,

ஒரு தாய் தனது பிள்ளைகளிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் பொழுது அவர்கள் தத்தமது கடமைகளைச் சரியான முறையில் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடனேயே ஒப்படைப்பதுண்டு. அவ்வாறுதான் எமது சேய் அமைப்பாகப் பிறப்பெடுத்த பிரித்தானிய தமிழர் பேரவையிடமும் பத்தாண்டுகளுக்கு முன்னர் சில பொறுப்புக்களை நாம் ஒப்படைத்தோம். எனினும் தமக்கு வழங்கப்பட்ட பணிகளில் இருந்து பிரித்தானிய தமிழர் பேரவையினர் தவறியிருப்பதோடு, தடம் பிறழ்ந்தும் பயணிக்கின்றனர்.

தனது பொறுப்புக்களை உதாசீனம் செய்து தவறான வழியில் ஒரு பிள்ளை பயணிக்கும் பொழுது அதனைத் திருத்துவதற்கு அதன் தாய் முற்படுவாள். எனினும் அம்முயற்சிகள் கைகூடாத பொழுது தனது பிள்ளையிடம் வழங்கிய பொறுப்பைத் தாயானவள் தானே மீளப்பொறுப்பேற்று அவற்றை செவ்வனவே செய்வாள். இதனைத் தான் இன்று நாம் செய்கின்றோம். வழிதவறிய ஆடாகத் திசைமாறிப் பயணிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையைச் சரியான பாதையில் கொண்டு வருவதற்கு நாம் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டோம். எனினும் எமது முயற்சிகள் எவையும் பயனளிக்காத நிலையில், பிரித்தானிய தமிழர் பேரவைக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நாமே மீளக் கையேற்று அவற்றை செம்மையான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இதன் முதற்கட்டமாகவே வரும் மே மாதம் பிரித்;தானியாவில் தொடர் அரசியல் செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இதற்கு உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கி, மே 18 அன்று பிரித்தானியாவில் எம்மால் நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ள முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள் பேரணியில் பேரெழுச்சியுடன் பங்கேற்குமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'